முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

Sikkal Sinkaravelar
சிக்கல் சிங்காரவேலர்

நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில். வசிஷ்டர் கடும் தவம் செய்து காமதேனு எனும் தெய்வீக பசுவை பெற்று அப்பசுவின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணெயால் சிவலிங்கத் திருமேனி ஒன்றை உருவாக்கி வழிபட்டதாகவும், பூஜை முடிந்ததும் வெண்ணெயிலான அந்த சிவலிங்க திருவுருவை எடுக்க முயன்றபோது அதை எடுக்க முடியாமல்போனது எனவும், அதனால் இத்தலத்திற்கு சிக்கல் என்னும் பெயர் வந்தது என்கிறது தல வரலாறு.

நவநீதேஸ்வரர், வெண்ணெய்பிரான் என்ற திருநாமங்களுடன் உறையும் சிவபெருமான் தலம் இதுவென்றாலும் சிங்காரவேலர் என்றழைக்கப்படும் முருகனே இத்தலத்தில் முக்கியத்துவம் பெறுகிறார். காரணம், அசுரனை வதம் செய்ய அவதரித்த முருகனுக்கு அம்பிகை வேல் கொடுத்த தலம் என்பதால் இத்தலத்துக்கு பெரும் சிறப்பு உண்டு. கந்த சஷ்டிக்கு முதல் நாள் வேல் வாங்கும் விழா இத்தலத்தில் நடைபெறுவது வழக்கம். அம்மனிடம் வேல் வாங்கி வரும்போது சிங்காரவேலனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் சுமார் ஒரு மணி நேரம் வெளிப்படுவது ஆன்மிக அதிசயங்களில் ஒன்று. அர்ச்சகர்கள் பட்டுத் துணியால் வியர்வை துளிகளை ஒத்தி எடுப்பார்கள். இது காணக் கண்கொள்ளா காட்சி ஆகும். பகுத்தறிவுக்கு எட்டாத இந்த நிகழ்ச்சியை காண இன்று பல்லாயிரம் பேர் கூடுவர். ஐப்பசி மாத திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறும்.

சிறிய கட்டுமலையாகக் காணப்படும் இத்தலத்தை தரிசிக்க 12 படிகள் ஏறி நடக்க வேண்டும். கீழே படியின் அருகில் தல விநாயகர் ‘சுந்தர கணபதி’ என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். மேலே மண்டபத்தில், ‘வெண்ணைபிரான்’ சன்னிதி உள்ளது. சிங்காரவேலர் உத்ஸவமூர்த்தி உள்ள சன்னிதியும் உள்ளது. கோயிலுக்கு முன்புறம் ஏழுநிலை கோபுரம் அமைந்துள்ளது. வாயிலைக் கடந்ததும் வரும் கார்த்திகை மண்டபத்தில் மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை எழுந்தருளச் செய்து அபிஷேக, ஆராதனைகள் செய்வது வழக்கம்.

இதையும் படியுங்கள்:
தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!
Sikkal Sinkaravelar

ஒரு சமயம் திருவானைக்கா ஆலயத்தில் யானையும் சிலந்தியும் ஈசனை பூஜை செய்து வந்தன. சிலந்தி தனது வாயிலிருந்து வரும் நூலால் வலை பின்னலை சிவலிங்கத்திற்கு மேல் அமைத்து இருந்தது. யானை காவிரி நீரை தனது துதிக்கையால் முகர்ந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தபோது தனது வலைப்பின்னல் அறுந்து போனதை எண்ணி கோபம் கொண்ட சிலந்தி, அதைப் பழி வாங்க யானையின் துதிக்கையில் புகுந்து யானையும் சிலந்தியும் உயிரை விட்டன. சிவபெருமான் யானைக்கு முக்தி கொடுத்தார். சிலந்தியை சோழர் குலத்தில் அரசனாகப் பிறக்கச் செய்தார். அவ்வரசனே கோச்செங்கோட்சோழன். பிறக்கும்போதே இவரது கண்கள் சிவந்திருந்தமையால் செங்கணான் என்றும் அழைக்கப்பட்டான். போன ஜன்மப்பகை காரணமாக அச்சோழ மன்னன் யானை புகாத 70 மாடக் கோயில்கள் அமைத்தான். அக்கோயில்களில் சிக்கல் சிங்காரவேலர் ஆலயமும் ஒன்றாகும். இது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.

வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலரையும், வெண்ணெய் பிரானையும் வணங்கி வழிபட்டால் வாழ்வில் சகல சிக்கல்களும்  தீர்ந்து நன்மைகள் பெறலாம் என்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com