புராணக் கதை - புத்த சைதன்ய வழி!

புத்தபெருமான்...
புத்தபெருமான்...
Updated on

-கே. நிருபமா

குசி நகரத்தின் உத்தியான வனம். இரு சால விருக்ஷங்களின் நடுவே, தமது பிரதான சீடன் ஆனந்தன் அமைத்துக் கொடுத்திருந்த படுக்கையில் புத்தர் படுத்திருக்கிறார். சுற்றிலும் கவலை தோய்ந்த முகத்துடன் சிஷ்யர்கள். கௌதம புத்தரின் அவதாரம் நிறைவடைகிற நேரம். தாம் மஹாநிர்வாணம் அடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த புத்தர், தன்னைச் சுற்றிக் குழுமியிருந்த சிஷ்யர்களிடம், ''எனது அந்திமக் காலம் சமீபித்துவிட்டது. உங்களில் யாருக்காவது, என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமென்றால் கேளுங்கள்" என்றார்.

துக்கத்தால் துவண்டிருந்த சிஷ்யர்கள், "இல்லை சுவாமி! இத்தனை காலம் உங்களுடன் இருந்ததில் யாதொரு ஐயமோ, கேள்வியோ எங்களுக்கு பாக்கியில்லை" என்றனர்.

அமைதியே உருவாக இருந்த புத்தர் மீண்டும் ஒரு முறை மெல்லிய குரலில், அதே கேள்வியைக் கேட்டார், "யாருக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் கேட்டுவிடுங்கள். இன்னொரு வாய்ப்பு கிடைக்காது" என்றார்.

சீடர்களிடம் இருந்து மறுபடியும் அதே பதில்; "ஒரு சந்தேகமும் இல்லை சுவாமி!"

அதைக் கேட்ட புத்தபெருமான்,  நிதானமாக தமது கண்களை மூடிக்கொண்டார். பருவ காலம் இல்லாத சமயத்திலும், சால மரங்கள் பூத்துச் சொரிந்து அவர் மீது மலர் மாரி பொழிந்தன. வானிலிருந்து மந்தார மலர்கள், மணமிகு சந்தனத் தூள் அவர் மீது விழுந்தன.

தம்மைச் சுற்றிலும் நின்று துக்கப்படும் சிஷ்யர்கள், பூத்துச் சொரிந்துகொண்டிருந்த மரங்கள்,  இதமாக வீசிய தென்றல், தெளிந்த நீல வானம் - இவை எதுவுமே புத்தபெருமானின் நினைவில் இல்லை. அவரது நினைவு தேகபாவத்தை மீறி, உள்நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தீவிர சாதனைகளின் பலனாக அவரது மனம் விருப்பு, வெறுப்பற்று வெறுமையாக இருந்தது. நிர்மலமான, நிர்விகாரமான அவரது மனம் இன்னும்... இன்னும் ஆழமாக உள்ளே போயிற்று.

அங்கே இருந்தது அன்பும், கருணையும் நிறைந்த அவருடைய இதயம்! ஒரு கணம் நின்றார் புத்தர். பரம விராகியின் இதயம்தான் இப்படி இருக்கும். தன்னுள் பொங்கிய அன்பினால் உலகின் கண்ணீரைத் துடைத்த தமது இதயத்தை ஒருகணம் முழுமையாக நின்று பார்த்தார். அவரது ஆத்மா ஆனந்தத்தில் கலந்து, விஸ்வ சைதன்யத்தில் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.

அந்த நேரத்தில் ஒருவன் ஓடோடி வந்து, ''ஐயா! ஒரு கணம் நில்லுங்கள். எனக்கொரு கேள்வி இருக்கிறது" என்றான். அங்கே கூடியிருந்த சிஷ்யர்களுக்கு பயம் ஏற்பட்டது. 'புத்தர் மஹாநிர்வாணம் அடையும் தறுவாயில் இதென்ன தடை?' என்று நினைத்து வந்தவனிடம், "நாற்பது வருடங்களாக பகவான் புத்தர் மனிதர்களின் கஷ்டங்களுக்கு இரங்கியிருக்கிறார்; வழிகாட்டி யிருக்கிறார். இத்தனை காலம் வாளாவிருந்து விட்டு இந்த நேரத்தில் வந்திருக்கிறாயே?" என்று குற்றம்சாட்டும் தொனியில் சொன்னார்கள்.

"நாற்பது ஆண்டுகளாகப் பல தடவை கேட்க வேண்டும் என்றே இருந்தேன். ஆனால், வியாபாரம், விவகாரம், திருமணம், குடும்பம், கேளிக்கைகளில் காலம் போனதே தெரியவில்லை! குரு இருக்கிறார்; கேட்டால் போயிற்று என்று மெத்தனமாக இருந்துவிட்டேன். ஆனால், இப்போது அவர் நம்மை விட்டு அகலும் நேரம் வந்துவிட்டதை அறிந்து, காரியம் மிஞ்சிப் போவதற்குள் கேட்டு விட எண்ணி வந்தேன்" எனக் கண்ணீர் விட்டான்.

புத்தபெருமான்...
புத்தபெருமான்...

கருணையே உருவான புத்தரின் முகத்தில் மெல்லிய புன்னகையொன்று அரும்பிற்று. "என்ன கேட்க வேண்டும். கேள்" என்றார் மெல்லிய குரலில். "சுவாமி ! நீங்கள் இந்த உடலை விட்டுப் போனாலும், உங்களை நிரந்தரமாக மனதால் கண்டுணர்வது எப்படி?  நான் அதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று வினவினான்.

புத்த சைதன்யத்தின் வழிகாட்டலைப் பெறுவது எங்ஙனம்?  என்பதே இவன் கேள்வி. குரு என்பவர், சிஷ்யர் மற்றும் பக்தர்களுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவே குருவுக்கும் சிஷ்யன் அவசியமானவன்; பிரியமானவன்.

இது முக்கியமான கேள்வி. புத்தர் என்கிற மனிதர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் புத்தத்வம் நிலையானது. (மனித குலத்தை உய்விப்பதற்காகப் பிறவி எடுத்து, மனிதர்களிடையே வாழ்ந்து மறைந்த
ஸ்ரீ ராம கிருஷ்ணர்,  சுவாமி விவேகானந்தர், ஸ்ரீமத்வர், ஸ்ரீ ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர்... என பலப்பல மகான்களுக்கும் பொருந்தும்.)

இதையும் படியுங்கள்:
டென்ஷன் இன்றி கூலாக வாழ்க்கையை நகர்த்த சில ஆலோசனைகள்!
புத்தபெருமான்...

புத்தபெருமான் அவனுக்கு விபஸ்ஸனா தியானத்தை உபதேசித்தார். தியானம், மூச்சுப் பயிற்சியின் மூலம் தன்னைப் பற்றிய அறிவு, அதன் மூலம் பிரபஞ்சத்தின் அறிவும் கிட்டும் எனும் ரகசியத்தைப் போதித்தார்.

'வயதான காலத்தில்தான் ஆன்மிகத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்; முதலில் உலக இன்பங்களை அனுபவிக்கலாம். பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம்' என்பதே நம்மில் பலரது எண்ணம். ஆனால், மரணம் எப்பொழுது, எப்படி சம்பவிக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதனால், அன்றாட வாழ்க்கையிலேயே ஆன்மிகத்தையும் கலப்பதுதான் சரி. பல கோடி மனிதர்களில் ஒருவருக்குத்தான் கடைசி நேரத்திலாவது இந்தத் தேடல் வரும். அப்போது, குருவானவர் திரும்பி வந்து அருள்வார்.

logo
Kalki Online
kalkionline.com