நாகம் குடைபிடிக்க பூமியிலிருந்த தோன்றிய சிவலிங்கம்!

மூலவர்
மூலவர்
Published on

குஜராத் மாநிலம், துவாரகையில் இருந்து பேட் துவாரகை செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நாகேஷ்வர் ஆலயம். ‘நாகநாதர் ஆலயம்’ என்றும் இந்தக் கோயிலுக்கு இன்னொரு பெயர் உண்டு. இறைவனை, ‘நாகேஷ்வர் மஹாதேவ்’ என்கிறார்கள் பக்தர்கள். இறைவியின் பெயர் நாகேஸ்வரி ஆகும். சுயம்புவாக உருவான பன்னிரு ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஒன்று.

இருபத்தைந்து அடி உயரத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் ஆலயத்தின் முகப்பிலேயே நாகேஷ்வரப் பெருமானாக சிவபெருமான் காட்சி அளிக்கிறார். தரை மட்டத்துக்குக் கீழே அமைந்துள்ள கருவறையில், லிங்க வடிவில் சிவபெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலில் அமைந்த நந்தவனமும் அழகிய தடாகமும் அனைவர் மனதையும் கொள்ளைகொள்கின்றன. முற்காலத்தில் இந்தப் பகுதியில் ஐந்து நகரங்கள் இருந்திருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.

கோயில் வெளித்தோற்றம்
கோயில் வெளித்தோற்றம்

நாகேஷ்வர் ஆலயம் அமைதிருக்கும் இடம் புராணக் காலத்தில், ‘தாருகா வனம்’ என அழைக்கப்பட்டதாம். இதைப் பற்றி சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருப்பதான நிகழ்வு ஒன்றையும் இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் இங்கே தாருகன் மற்றும் தாருகி என அசுர குலத்தைச் சேர்ந்த கணவன், மனைவி வசித்து வந்தனர். தாருகி, அன்னை பார்வதியின் பரம பக்தை. தாருகன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ஏராளமான இடைஞ்சல்களைச் செய்து வந்தான். ஒரு சமயம் சுப்ரியா என்னும் சிவ பக்தையையும், அவளோடு சேர்த்து இன்னும் பலரையும் அரக்கன் தாருகன் சிறைப்பிடித்து தாருகா வனத்தில் அடைத்துவிட்டான்.

சிறைப்பிடிக்கப்பட்ட சுப்ரியா, தன்னோடு பிடிபட்ட அனைவரையும், ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரத்தை உச்சரிக்கச் செய்தாளாம். அரக்கன் தாருகனுக்கு இந்த விஷயம் தெரிய வர, சுப்ரியாவைக் கொல்ல ஓடுகிறான். அப்போது ஜோதிர்லிங்க வடிவில் சிவபெருமான் அங்கு பூமியில் இருந்து தோன்றி, அசுரன் தாருகனை அழித்து, சுப்ரியாவுக்கு எந்த ஆபத்தும் வராமல் காப்பாற்றினாராம். அசுரன் தாருகன் இறக்கும் முன்பாக, இந்த இடம் தன்னுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ள, அதன்படி நாகர்களின் அரசனாக விளங்கிய அவனது பெயராலேயே, ‘நாகநாத்’என்று இந்த இடம் வழங்கப்படுகிறது.

கோயில் கட்டட அமைப்பு
கோயில் கட்டட அமைப்பு

ந்த ஆலயம் குறித்து மற்றொரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. ‘தாருகாவனம்’ என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் பல ரிஷிகள் தங்களின் மனைவியுடன் வாழ்ந்து வந்தனர். அந்த ரிஷிகள் அனைவரும், இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல், இந்த உலகமே தங்களால்தான் இயங்குகிறது என்று நினைத்துக் கொண்டனர். அவர்களின் கர்வத்தை அடக்க நினைத்த சிவபெருமான், பிட்சாடன மூர்த்தியாக, தாருகாவனத்துக்கு வந்தார். அவரது அழகில் மயங்கிய ரிஷிகளின் மனைவியர் சுய நினைவை இழந்து, சிவபெருமானின் பின்னால் சென்றனர். இதைக் கண்ட ரிஷிகள் கோபம் கொண்டு, சிவபெருமானை கொல்ல முயன்றனர். உடனே சிவபெருமான் அங்கிருந்து ஒரு பாம்பு புற்றுக்குள் சென்று மறைந்தார். ரிஷிகள் புற்றுக்குள் பார்த்தபோது, அங்கு ஜோதிர் லிங்கமாக இறைவன் காட்சி கொடுத்தார். தங்களது தவறை உணர்ந்த ரிஷிகள், இறைவனிடம் மன்னிப்பு கோரினர். லிங்க வடிவில் இருந்த சிவபெருமானுக்கு, நாகப்பாம்பு ஒன்று குடைப்பிடித்தது. இதனால் அவருக்கு நாகநாதர் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நாமதேவர் என்னும் சிவபக்தர், ஊர் மக்களால் விரட்டப்பட்டு ஊரின் தென் திசையில் சென்று அமர்ந்து இறைவனைக் குறித்துப் பாடினார். நாமதேவரின் பாடல்களைக் கேட்கும் விதமாக மூலவர் நாகநாதப் பெருமான் தென்திசை நோக்கித் திரும்பினார் என்று சொல்லப்படுகிறது. இதனால், மூலவர் தென்திசை நோக்கியும், கோபுரம் கிழக்கு திசை நோக்கியும் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் வட இந்தியாவில் அதிகம் காணப்படாத வேப்ப மரங்கள் நிறைய ஓங்கி உயர்ந்து காணப்படுகின்றன. கோயிலில் சனி பகவானுக்கும் சன்னிதி அமைந்துள்ளது. சிவராத்திரி அன்று இந்த ஆலயம் விழாக்கோலம் பூண்டு, பக்தர்களால் நிரம்பி வழிகிறது. இந்த ஆலயம் காலை ஆறு மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கிறது. கோயில் வளாகத்தில் நிறைய நொறுக்குத் தீனி விற்பனைக் கடைகள் இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com