நாகனும் கருடனும் சேர்ந்து பூஜித்த முக்தீஸ்வரம்!

நாகனும் கருடனும் சேர்ந்து பூஜித்த முக்தீஸ்வரம்!

செங்கற்பட்டு மாவட்டம், பாலாற்றின் கரையில் அமைந்த பல ஆலயங்களில் ஆத்தூர் ஸ்ரீதர்மசம்வர்தினி அம்பாள் சமேத ஸ்ரீமுக்தீஸ்வரர் ஆலயம் சரித்திரப் புகழ் வாய்ந்தது. முற்காலத்தில் இவ்வூர், ‘ஊற்றுக்காட்டுக் கோட்டத்து ஆற்றூர் நாட்டு ராஜராஜ நல்லூர்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. கோயில் பிராகாரச் சுவர்களில் 13ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரையிலான 28 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து இக்கோயில் தொடர்பான பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

முற்காலத்தில் நாகனும் கருடனும் சேர்ந்து பல காலம் இத்தலத்து ஈசனை பூஜித்து வந்ததாகப் புராண வரலாறு தெரிவிக்கிறது. நாகராஜனும் கருடனும் பகைமை பாராட்டாது, சேர்ந்து வழிபட்ட காரணத்தினால் இத்தலத்து ஈசனை வழிபடுவர்களுக்கு பகைவர் தொல்லை இருக்காது என்று கூறப்படுகிறது.

நீண்ட மதில்களின் மீது ஆங்காங்கே நந்திகள் அமைந்திருக்க, ராஜகோபுரம் இன்றி நுழைவாயில் காட்சி தருகிறது. உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் ஒரு சன்னிதியில் வராக முகத்துடன் நான்கு திருக்கரங்களோடு அமர்ந்த கோலத்தில் வாராகி அம்மன் காட்சி தருகிறாள். வெளித்திருச்சுற்றில் விநாயகர் சன்னிதியும் அதையடுத்து வள்ளி தெய்வானை ஆறுமுகன் சன்னிதியும் தொடர்ந்து ஜேஷ்டா தேவி சன்னிதியும் அமைந்துள்ளன. பிரதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி ஜேஷ்டா தேவியை வணங்கினால் நினைத்தது நிச்சயம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தில் பைரவர் சன்னிதி மற்றும் நவக்கிரகங்கள் சன்னிதியும் அமைந்துள்ளன.

தெற்கு வாயில் வழியாக பதினாறு கால் மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் கணபதி, சிவசூரியன், பிராகார நந்தி, நால்வர் காட்சி தருகின்றனர். கருவறை மீது அமைந்துள்ள விமானம் கமல விமானம். கருவறையில் மூலவர் முக்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி லிங்க சொரூபத்தில் நாகாபரணத்துடன் காட்சி தருகிறார்.  லிங்க பாணத்தின் நடுவில் உச்சியிலிருந்து தண்டு போன்ற ஒரு புடைப்பு சரிபாதியாக கீழிறங்கி ஆவுடையாரை அடைகிறது. இதனால் இத்தலத்தில் ஈசன் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். பாணத்தில் சந்திர பிறையும் சூரிய முத்திரையும் காணப்படுகின்றன. கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்கை ஆகியோர் காட்சி தருகிறார்கள். கோயிலில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும் அமைந்துள்ளது.  அம்பாளுக்கு தர்மசம்வர்த்தினி என்ற திருநாமம். தனிச் சன்னிதியில் பாசம் அங்குசம் அபய வரத ஹஸ்தம் என நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அம்பிகை காட்சி தருகிறாள்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் நாளன்று சில மணித்துளிகள் சூரிய பகவானின் கதிர்கள் லிங்கத்திருமேனியில் பட்டு ஒளிரும் அதிசயம் நடைபெறுகிறது.   தினமும் ஐந்து கால பூஜைகள் நடைபெறும் இத்தலத்தின் தல விருட்சம் மாமரமாகும்.  இத்தலத்தில் கருட தீர்த்தம் மற்றும் நாக தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

சித்திரையில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீநடராஜர் அபிஷேகம், வைகாசி விசாகம், ஆடிபூரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி ஊஞ்சல் உத்ஸவம், ஐப்பசி அன்னாபிஷேகம், ஐப்பசியில் ஸ்ரீமுருகன் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உத்ஸவம், கார்த்திகை சோமவாரத்தில் ஸ்ரீமுக்தீஸ்வர ஸ்வாமிக்கு சங்காபிஷேகம், கார்த்திகை மகா தீபம், மார்கழியில் தனுர் பூஜை, ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரியில் ஸ்ரீமுக்தீஸ்வரருக்கு ஆறு கால சிறப்பு அபிஷேகம், பிரதோஷ வழிபாடு என பல வழிபாடுகள் இத்திருத்தலத்தில் நடைபெறுகின்றன.

அமைவிடம்: செங்கற்பட்டு காஞ்சிபுரம் சாலையில் செங்கற்பட்டிலிருந்து ஆறு கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ள ஆத்தூரில் இத்தலம் அமைந்துள்ளது. செங்கற்பட்டிலிருந்து ஷேர் ஆட்டோ வசதி நிறைய உள்ளது.

தரிசன நேரம்: காலை 6 முதல் மதியம் 11 மணி வரை. மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com