ரயிலுக்கு வந்த நரசிம்மர்!

ரயிலுக்கு வந்த நரசிம்மர்!
Published on

க்தியுடன் அழைத்த நொடியில் பக்தர்களைக் காக்க ஓடி வருபவர் பகவான் ஸ்ரீ நரசிம்மர். அந்த அனுபவத்தைப் பல முறைப் பெற்ற, நரசிம்ம சுவாமியின் தீவிர பக்தையான சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கீதா, தனது மறக்க முடியாத ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

“நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும்போதெல்லாம் எனது குருவின் வழிகாட்டலின்படி ஶ்ரீ நரசிம்ம சுவாமியை பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டு பூஜித்து வருகிறேன். எந்தவொரு இக்கட்டான நேரத்திலும் அவரை மனதார அழைத்தால் ஓடி வந்து காப்பார் நரசிம்ம பெருமாள் என்பது எனது அனுபவம்.

ஒரு முறை நான் சென்னையிலிருந்து மதுரைக்கு அவசர வேலையாகச் செல்ல வேண்டி வந்தது. ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை. மிகுந்த முயற்சிக்குப் பின் இரவு நேர ரயிலில் கூபே டிக்கெட்தான் கிடைத்தது. என்னுடன் பயணித்த நபரின் நடவடிக்கை, பேச்சு எல்லாம் அவர் குடி போதையில் இருப்பதைக் காட்டியது.  ‘நரசிம்ம சுவாமியே! இந்த இரவில் மதுரை வரை இவருடன் எப்படிப் பயணம் செய்வேன்’ என்று எனது மனம் புலம்பியது. கூடவே பயமாகவும் இருந்தது. ‘நரசிம்மா… நீ தானப்பா உடன் வந்து உதவ வேண்டும்’ என வேண்டினேன்.

சிறிது நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தேன். நான் எதிர்பார்த்தபடி டிக்கெட் பரிசோதகர் கதவைத் தட்டவில்லை. நெற்றியில் பெரிய திருநாமம் அணிந்த ஒருவர் அங்கே புன்னகையுடன் நின்றிருந்தார். என்னுள் ஒரு அதிர்வு. அடுத்த கம்பார்ட்மென்டில் ஒரு இடம் காலியாக இருப்பதாகக் கூறி என்னை அங்கு அழைத்துச் சென்று, குடும்பமாகப் பயணம் செய்த அந்த கம்பார்ட்மென்டின் காலியான இடத்தில் அமரச் செய்தார். நான் எனது பையை வைத்து விட்டுத் திரும்புவதற்குள் அவர் மாயமாய் மறைந்து விட்டார். பிறகு வந்த டிக்கெட் பரிசோதகர் எனக்கு அந்த இடத்தை மாற்றித் தந்தார். அவருக்கும் திருநாமம் அணிந்து வந்தவரின் விவரம் எதுவும் தெரியவில்லை. எனது பயணம் முடியும் வரை அவரை நான் அந்த ரயிலில் மீண்டும் பார்க்கவேயில்லை.

நான் வணங்கும் எனது நரசிம்மப் பெருமாளே, எனக்காக உதவ அன்று ஓடி வந்தார் என்பதாகவே நான் உணர்ந்தேன். இதேபோல், பல சந்தர்ப்பங்களில் பகவான் ஸ்ரீ நரசிம்ம சுவாமியின் அருளைப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com