
இன்று 16.12.2022 மார்கழி மாதம் முதல் நாள் தேய்பிறை அஷ்டமியில் பிறக்கிறது. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தெய்வங்களுக்கேற்ற வழிமுறைகளை நம் முன்னோர்கள் ஆன்மிகத்தில் முறைபடுத்தி வைத்துள்ளனர். அதன்படி தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் வழிபாடு வெற்றி தரும். பைரவர்கள் 64 பேர் இருந்தாலும், பிரபஞ்சத்தில் இருந்து நம்மை ஆட்டிப்படைக்கும் நவக்கிரகங்களின் அம்சமான நவபைரவர்களின் வழிபாடு அவசியமாகிறது. நவபைரவர்கள் மற்றும் அவர்களின் விபரங்கள் மற்றும் வழிபாடுகளைக் காண்போம்.
சூரியன் - ஸ்வர்ணாகர்ஷண பைரவர் (தங்கம்): ஞாயிறு வழிபாட்டுக்குரிய இவருக்கு ஏழு எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் அரசு உத்தியோகம், அரசியல் பதவி, ஆண் வாரிசு மற்றும் பொருளாதார வசதிகளுக்குத் தீர்வு காணலாம்.
சந்திரன் - கபால பைரவர் (மண்டை ஓடு, காளி): திங்கள் வழிபாட்டுக்குரிய இவருக்கு ஒன்பது எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் மனம் சார்ந்த பிரச்னைகள், மனக்குழப்பம், பயம் போன்றவைகள் அகலும்.
செவ்வாய் - சண்ட பைரவர் (போர்க்கோலம், சண்டீஸ்வரி): செவ்வாய்க்கிழமை வழிபாட்டுக்குரிய இவருக்கு 15 எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, போர் குணங்கள் மறையும்.
புதன் - உன்மத்த பைரவர் (கையில் பாத்திரம் ஏந்தி அமர்ந்து இருப்பவர்): புதன்கிழமை வழிபாட்டுக்குரிய இவருக்கு 18 எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் ஏவல், பில்லி, சூன்யம் கோளாறுகள் நீங்கும். குறிப்பாக, இவருக்குத் தேங்காய், பூசணியில் விளக்கு ஏற்றினால் சிறப்பு. இதனால் கடன் தீர்வு, வழக்கு தீர்வுகள் ஏற்படும்.
குரு - அசிதாங்க பைரவர் (கையில் வேதம் இருக்கும்): வியாழக்கிழமை வழிபாட்டுக்குரிய இவருக்கு மூன்று எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் குழந்தைகளை நல்லபடி காப்பார். மேன்மையான அறிவு மற்றும் கல்வியைத் தருவார்.
சுக்ரன் – ஸ்ரீ ருரு பைரவர் (சிவாம்சம், சரபேஸ்வரர் அம்ச நிலை): வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குரிய இவருக்கு 15 எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் உயிர் கண்டத்தில் உள்ளவரை காப்பாற்றுவார். பெரிய நோய்களிலிருந்து குணமாக்குவார். கடன் நிவாரணமும் பெறலாம். இவர் எந்தப் பிரச்னைக்கும் உடனடி தீர்வு கொடுப்பவர்.
சனி - குரோதன பைரவர் (பெருமாள் போல் அமர்ந்திருப்பவர்): சனிக்கிழமை வழிபாட்டுக்குரிய இவருக்கு 11 எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் நீண்ட கால பகை, உறவுகள் இடையேயான கசப்புகள், நீண்ட நாள் வழித்தட பிரச்னைகள், வஞ்சகம், சூழ்ச்சி போன்றவற்றுக்குத் தீர்வு கிடைக்கும்.
இவர்களுடன் அவரவர் ஜாதகத்தில் தற்போது எந்த தசாபுத்தி நடக்கிறதோ, அந்த தசாபுத்தி பைரவரை வழிபட, வெற்றி காணலாம். கூடவே ராகு-கேது பைரவர்களையும் வழிபட்டால் மேலும் நன்மைகள் பெறலாம்.
ராகு - சம்ஹார பைரவர் (முருகன் அம்சம். எது பிடிக்கவில்லையோ அதை அழித்தல்): செவ்வாய்க்கிழமை வழிபாட்டுக்குரிய இவருக்கு 9 எண்ணிக்கையில் எலுமிச்சை, பூசணி, தேங்காய் தீபங்களை ஏற்றி வழிபடலாம்.
கேது – பீஷ்ண பைரவர்: ஞாயிறு வழிபாட்டுக்குரிய இவருக்கு 9 எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் பயம், தடை, தாமதம், பரம்பரை நோய்கள், வாராக்கடன் போன்றவற்றுக்குத் தீர்வு காணலாம்.
சேலம், தலைவாசல் அருகில் ஆரகளூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அஷ்ட பைரவர் ஆலயம் போல், ஒவ்வொரு ஊரிலும் பைரவருக்கான ஆலயங்களும் பூஜைகளும் நிச்சயம் இருக்கும். அங்கு சென்று வழிபட்டு வாழ்வில் நிம்மதி பெறுவோம்.