திருப்பதி வேங்கடாஜலபதிக்கு செய்யப்படும் நவநீத ஆரத்தி!

திருப்பதி வேங்கடாஜலபதிக்கு செய்யப்படும் நவநீத ஆரத்தி!
Published on

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக நாள் முழுவதும் திறந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும், சம்பிரதாயத்துக்காக சற்று நேரம் கோயில் நடையை சாத்தி திறப்பது வழக்கத்தில் உள்ளது. தினமும் அதிகாலை மூன்று மணிக்குத் திறக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3.30 மணி வரை சுப்ரபாத தரிசனம் நடைபெறும்.

அதன்பின், சுவாமியை எழுப்புவதற்காக இரண்டு அர்ச்சகர்கள், இரண்டு கோயில் ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்க ஒருவர் மற்றும் வீணை வாசிக்கும் ஒருவர் என ஆறு பேர்கள் கருவறை சன்னிதி முன்பு உள்ள தங்க வாசல் அருகே வந்து சேருவார்கள். முதலில் அவர்கள் துவாரபாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒருவர் கோயில் ஊழியரிடமிருந்து கருவறை சாவியை வாங்கி சன்னிதியை திறப்பார். அதன் பின் சுவாமியை வணங்கி, சன்னிதியின் கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்த நேரத்தில், ‘கௌசல்யா சுப்ரஜா ராம….’ என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் குழுவினரால் பாடப்பட்டுக் கொண்டிருக்கும்.

கருவறையின் உள்ளே சென்றவர்களில் தீப்பந்தம் கொண்டு சென்றவர் சன்னிதியில் உள்ள விளக்குகள் அனைத்தையும் ஏற்றுவார். பின்னர் வீணை வாசிப்பவர் வாசிக்கத் தொடங்க, அர்ச்சகர்கள் முதல் நாள் இரவு தொட்டிலில் சயனித்திருக்க வைத்திருக்கும் போக ஸ்ரீனிவாச மூர்த்தி விக்ரகத்தைக் கொண்டு வந்து மூலவர் வேங்கடாசலவதி அருகில் அமர்த்துவார்கள். அப்போது சுப்ரபாதம் பாடி முடிக்கப்பட்டதும் கருவறை சன்னிதி திறக்கப்படும்.

பின்னர் சுவாமிக்கு பாலும் வெண்ணையும் படைத்து ஆரத்தி காண்பிக்கப்படும். அதுவே, ‘நவநீத ஆரத்தி’ எனப்படும். இந்த ஆரத்தியை திருமலையில், ‘விஸ்வரூப தரிசனம்’ என்றும் சொல்கிறார்கள். இந்த சுவாமி தரிசனம் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது. காணக் கிடைக்காத இந்த சுவாமி தரிசனத்தைப் பெற மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com