செவ்வாய் தோஷம் நீக்கும் நெடுங்குணம் தீர்க்காஜலேஸ்வரர்!

தீர்க்காஜலேஸ்வரர் கோவில்...
தீர்க்காஜலேஸ்வரர் கோவில்...

சுகபிரம்ம முனிவர் தவம் செய்ய ஒரு மலையைத் தேர்ந்தெடுத்தார், அந்த மலை சிவசொரூபமாகவே காட்சி தந்ததை கண்டு சிலிர்த்தார். சிவனாரை எண்ணி கடும் தவத்தில் மூழ்கினார். முன்னதாக விஷ வண்டுகளோ பூச்சிகளோ தாக்காமல் இருக்க தான் அமர்ந்திருக்கும் இடத்தை சுற்றி அரண் அமைக்கவும், தண்ணீரால் சுத்தம் செய்யவும் எண்ணினார். மலை முழுவதும் சுற்றியும் தண்ணீர் கிடைக்க வில்லை. 

இறைவனை நோக்கி மனம் உருகிப் பிரார்த்தித்தார். அங்கே தண்ணீர் மெல்ல ஊற்றெடுத்தது. அந்த நீரை எடுத்துப்பருகினார். சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து அதனை அபிஷேகித்தார். ஈசனை வணங்கிவிட்டு கடும் தவத்தில் மூழ்கினார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் தம்பதி சமேதராக முனிவருக்கு காட்சி தந்தார். தனது மனக்குறையை தீர்த்து வைத்த சிவபெருமானை வணங்கி தொழுதார் சுகபிரம்மர்.

காலங்கள் ஓடின! சோழமன்னன் இந்த வழியாக வந்த போது மலையைக்கண்டான். மலை மீது முனிவர்கள் பலர் சிவ பூஜையில் இருப்பதைக் கண்டான். அவர்களை வணங்கி இந்த மலையின் மாண்பும், சுகபிரம்மருக்கு ஈசன் காட்சி தந்தது குறித்தும் அறிந்தான். இதில் சிலிர்த்த சோழ மன்னன் மலையடிவாரத்தில் கோயில் எழுப்பினால், ஊர் மக்கள் வணங்கிட வசதியாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டு அப்படியே கோயில் எழுப்பினான். ஸ்வாமிக்கு தீர்க்காஜலேஸ்வரர் என்னும் திருநாமமும் சூட்டி மகிழ்ந்தான்.

பாதாள லிங்கேஸ்வரர்
பாதாள லிங்கேஸ்வரர்

மழைப் பொய்த்துப் போனால் விவசாயிகள் திரளாக வந்து சப்த கன்னியருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் இவ்வாறு செய்தால் அந்த வருடம் மழை பொழியும், விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி ஒன்று உள்ளது. முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். இங்கே அழகு கொஞ்சும் ஸ்ரீ சுப்பிரமணியரின் விக்கிரத் திருமேனியையும், பிராகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் மேம்பட இந்த 9 விதிகளை கடைப்பிடியுங்கள்!
தீர்க்காஜலேஸ்வரர் கோவில்...

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் மற்றும் தோஷங்கள் விலகவும் ஞானம் பெறவும் வழிபடுகின்றனர். இங்கு யோக தட்சிணாமூர்த்தி இருப்பது சிறப்பு. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

கோவில் எங்கே இருக்கு…

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும், ஆரணி மற்றும் வந்தவாசியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், சேத்பட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது நெடுங்குணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com