நெல்லையப்பர் கோயில் அப்பர் தெப்போத்ஸவம்!

நெல்லையப்பர் கோயில் அப்பர் தெப்போத்ஸவம்!

திருநெல்வேலி மாவட்டம், அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் திருக்கோயிலில் வரும் மார்ச் மாதம் 6ம்தேதி நடைபெற உள்ள மாசி மகம் அன்று அப்பர் பெருமான் தெப்ப உத்ஸவம் நடைபெற் உள்ளது. இரவு ஏழு மணிக்கு நடைபெற உள்ள இந்த தெப்போத்ஸவம் திருக்கோயில் உள்ளே உள்ள பொற்றாமரைக் குளத்தில் நடைபெறும். இந்த தெப்போத்ஸவத்துக்கு பின்னணியில் ஒரு சுவைமிகு வரலாறு சொல்லப்படுகிறது.

முன்பொரு காலத்தில் சைவ சமயத்துக்கும் சமண மதத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமண மதத்தினர் சைவ சமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் விதமாக அவரை கல்லில் கட்டி கடலில் வீசினர். அப்போது அப்பர் பெருமான்,

’கற்றுணை பூட்டியோர்

கடலினிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமசிவாயவே’

என்று சிவபெருமானை நினைத்துப் பாடினார். அப்போது அந்தக் கல்லானது ஒரு தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. இதன் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவபெருமானின் அருள் சிறப்பை உலகுக்கு உணர்த்தி, இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்ற தத்துவம் விளக்கப்படுகிறது.

தெப்போத்ஸவத்தின் முதலில் அப்பர் பெருமான் நன்கு அலங்கரிக்கப்பட்டு பொற்றாமரைக் குளத்துக்கு நேரே உள்ள விநாயகர் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். பிறகு தெப்ப மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் சுவாமி நெல்லையப்பர் கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி வீற்றிருப்பார்கள். அப்பர் பெருமான் அந்த இடத்துக்கு வரும் வழியில் கோயில் யானை காந்திமதி, அப்பர் பெருமானை வணங்கி மரியாதை செய்யும். பிறகு அப்பர் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி ஒன்பது முறை வலம் வருவார். பிறகு சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெறும். இன்று அப்பர் பெருமானுக்குக் காட்சி தரும் சுவாமி மற்றும் அம்பிகையைக் காணக் கண் கோடி வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com