நம்மை  கண்காணிக்கும் ஒன்பது பேர்!

நம்மை  கண்காணிக்கும் ஒன்பது பேர்!
Published on

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம்.

ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரகசியம்”அல்ல என்பதும், அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்றும் நமக்குத் தெரியும்.

ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

யார் அந்த ஒன்பது பேர்?

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் (வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன், எமன், காலம் (நேரம்).

பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலே, அதனுள் எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்– என்று பொருள் கொள்ளவும் அவை உதவும்.

எமன் என்பவன் யார்? அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திரகுப்தன் என்பர். இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு சித்திரத்தை, படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த = ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் ‘சித்திர’ ‘குப்த’ என்றனர். 

ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது. அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுப்தன் அல்லது எமனுக்குத் தெரியும்.

சித்திரகுப்தன் அல்லது எமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்களையெல்லாம் கூட்டிக் கழித்து, பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.

நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை.

நீரை மந்திரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன் படுத்தினர்.

நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக் கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்னி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும்.

காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக் கொண்டிருப்பதுபோல ஒவ்வொன்றும் கணக் கிடப்படுகிறது.

ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும். நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com