அட்சய திருதியை நாளில் ஸ்ரீ லட்சுமி குபேரர் வழிபாடு!

அட்சய திருதியை நாளில்
ஸ்ரீ லட்சுமி குபேரர் வழிபாடு!

செல்வத்துக்கு அதிபதி மகாலக்ஷ்மி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர பூஜை செய்து வர, நிலையான செல்வம் உண்டாகும். இழந்த செல்வத்தையும் பெற்று புகழோடு வாழலாம். சென்னையை அடுத்துள்ள ரத்தினமங்கலத்தில் அருளும் குபேரையும் ஸ்ரீ மகாலட்சுமியையும் ஒருசேர ஒருமுறை தரிசித்தாலே அவர்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும்  என்பதில் ஐயமில்லை. அட்சய திருதியை நாளில் இவர்களை வழிபட்டால் வளமான வாழ்வு அமையும்.

சிவ பக்தனான குபேரன் தவத்தில் ஈடுபட்டு சிவலிங்கத்தை பூஜித்து வந்தான். அவனது பக்திக்கு மெச்சிய சிவபெருமானும் பார்வதியுடன் அவனுக்குக் காட்சியளித்தார். அழகே வடிவான பார்வதியை கண்டதும், ‘ஆகா இப்படி ஒரு தேவியை இது நாள் வரை நான் பார்த்ததில்லையே‘ என்று மனதுக்குள் குபேரன் எண்ணினான். இதை அறிந்த பார்வதி கோபித்து அவனின் பார்வையை மங்கச் செய்தாள். அதன் பின் பார்வதி தேவியிடம் மன்னிப்பு கேட்டு குபேரன் பார்வை கிடைக்கப் பெற்றான். சிவன் அருளால் எட்டு திசை காவலர்களில் ஒருவராகவும் மகாலட்சுமி அருளால் தனம், தானியத்தின் அதிபதியாகவும் குபேரனுக்கு பதவி வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே சென்னை ரத்தினமங்கலத்தில் குபேரனுக்கு கோயில் உருவாக்கப்பட்டது. சிரித்த முகம், இடது கையில் சங்க நிதி வலது கையில் பதுமநிதி வைத்தபடி குபேரன் இங்கு காட்சி தருகிறார். மகாலட்சுமி தாயார் குபேரனின் மனைவி சித்திரணியுடன் இருக்கிறார். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி உடன் குபேரரை தரிசிப்பதால் செல்வம் பெருகும், இழந்த பணம் சொத்து மீண்டும் கிடைக்கும். இந்தியாவிலேயே ஸ்ரீ லட்சுமி குபேரருக்கு என்று தனியாக உள்ள ஒரே கோயில் என்ற பெருமையை ரத்தினமங்கலத்தில் உள்ள கோயில் பெற்றுள்ளது. திருப்பதி செல்லும் முன்பு ரத்தினமங்கலம் குபேரனை வழிபட்டு செல்வது மிகவும் சிறப்பானது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயிலைச் சுற்றி உள்ள பிராகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோகா ஆஞ்சனேயர், நவகிரகங்கள் உள்ளன. கோசாலையும் உள்ளது. பணத்துக்கும் தானியத்துக்கும் அவர் சொந்தக்காரர் அல்ல. அவற்றைக் கண்காணிப்பது மட்டுமே அவரது பொறுப்பு. கொடுப்பது அன்னை மகாலஷ்மிதான். ரத்தினமங்கலம் ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலில் அட்சய திருதியை நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தங்கள் கொண்டுவரும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை குபேர லட்சுமியின் அருகில் வைத்தும் அட்சய திருதியை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஆசி பெறலாம்.

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் காலை 6 மணிக்கு விஸ்வரூப  தரிசனத்துடன் கோ பூஜை செய்யப்படுகிறது. அப்போது சுக்கிரனின் அதிதேவதையான குபேர லட்சுமி ஆராதனையும் அதைத் தொடர்ந்து மகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகமான ஸ்ரீ சூக்தம் மற்றும் லட்சுமி அஷ்டகம் படித்து அந்த நாள் முழுவதும் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்லோகம் சொல்லி பக்தர்கள் பூஜை செய்வார்கள். பூஜையில் அமரும் பக்தர்களுக்கு நாணயங்களும் சிறிய குபேரன் சிலையும் பச்சை நிற குங்குமத்துடன் கூடிய அட்சய திருதியை சிறப்புப் பிரசாதமான ஹரிபலம் என்று அழைக்கப்படும் நெல்லிக்கனியும் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.

ரத்தினமங்கலம் ஸ்ரீ லட்சுமி குபேரர் சன்னிதியில் ஒவ்வொரு அமாவாசையிலும் விசேஷ பூஜைகள், ஹோமம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. விஸ்வரூப தரிசனத்துடன் நடை திறக்கப்பட்டு கோ பூஜை அட்சய பாத்திரம், அதிர்ஷ்ட லட்சுமி பூஜை நாணயத்தால் குபேர பூஜை செய்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் நடைபெறும் லட்சுமி குபேர பூஜையில், விருப்பங்கள் நிறைவேற திருமஞ்சனம், வஸ்திரம் சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

’ஓம் யஷாயாய  குபேராய வைஸ்ரவனாய

தனதாந்யாதி பதயே தனதான்ய:

ஸம்ருத்திம்மே தேஹி தபாய ஸ்வாஹா!’

என்ற குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வர, வாழ்வு செழிக்கும். அட்சய திருதியை நன்னாளில் இந்த மந்திரத்தை ஜபித்து நீங்காத செல்வம் பெற்று செழித்து வளம் பெறுவோம்.

அமைவிடம்: வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் பாதையில் ரத்தினமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com