மகாலட்சுமியை வீட்டுக்குள் வரவழைக்கும் ஒருவரி மந்திரம்!

மகாலட்சுமியை வீட்டுக்குள் வரவழைக்கும் ஒருவரி மந்திரம்!

பொதுவாக, ஒரு வீட்டில் பணக்கஷ்டம், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையின்மை, சண்டை, சச்சரவு இருக்கிறதென்றால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் இல்லை என்றுதான் பொருள். மகாலட்சுமியை வீட்டுக்குள் வரவழைக்க எளிதான ஒரு மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை தினமும் பெண்கள் சொல்லி வாயில் கதவை திறக்க, அந்த வீட்டில் மகாலட்சுமி வருகை தந்து, அந்த வீட்டில் வாசம் செய்வாள்.

முதலில் பெண்கள் படுக்கையில் இருந்து காலையில் கண் விழித்ததும், தெய்வத்தை வணங்கிய பிறகு, கண்ணாடி முன்பு சென்று அவர்களுடைய தலையை சரிசெய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு பல் தேய்த்து முகம் கை, கால் அலம்பி காலை கடன்களை முடித்துவிட்டு, குளிக்கவில்லை என்றாலும் நெத்திக்கு இட்டுக்கொண்டுதான் நிலைவாசல் கதவைத் திறக்க வேண்டும். அப்படி நிலைவாசல் கதவை திறக்கும்போது வாசலைக் கூட்ட துடைப்பம், குப்பை கூடை போன்றவற்றை கையில் எடுத்துச் செல்லக்கூடாது. இரண்டு கைகளையும் நிலை வாசல் கதவில் வைத்து திறக்கும்போது, கோயிலின் வாசல் கதவை திறப்பதாக நினைத்து திறக்க வேண்டும். ‘வரலட்சுமியே வருக வருக’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தைச் சொல்லி கதவைத் திறக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் வீட்டு வாசலில் நிற்கும் மகாலட்சுமி, வரலட்சுமியாக உங்கள் வீட்டுக்குள் நுழைந்து விடுவாள். தினம் தினம் மகாலட்சுமியை இப்படி வரவேற்கக் கூடிய வீட்டில் வறுமை என்பது நிச்சயம் இருக்காது. தினமும் இதை நீங்கள் பின்பற்றி வரலாம். முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை மட்டுமாவது இதைத் தொடர்ந்து செய்து வர, வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.

வெள்ளிக்கிழமை அதிகாலை வாசல் தெளித்து, கோலம் போட்டுவிட்டு மகாலட்சுமியின் பாதங்களை நிலை வாசலில் வரைவது வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை வரவழைக்கும். அதேபோல், எக்காரணத்தைக் கொண்டும் முந்தைய நாள் உங்களுடைய வீட்டில் எவ்வளவு பெரிய பிரச்னை நடந்திருந்தாலும் சரி, அடுத்த நாள் காலை கண்விழிக்கும்போது அந்தப் பிரச்னையை நினைத்துக் கொண்டு, வீட்டில் இருக்கும் பெண்கள் கண் விழிக்கவே கூடாது. முந்தைய நாள் பிரச்னை முந்தைய நாளுடன் முடிந்து விட்டது. முடிந்து போன முந்தைய நாளை நினைத்து, மறுநாள் நாம் கஷ்டப்பட்டால், அன்றைய தினத்தின் சந்தோஷத்தையும் இழக்க நேரிடும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த மனநிலையில் கண் விழிக்கிறார்களோ, அவர்களைப் பார்த்துதான் வீட்டில் இருக்கும் மற்றவர்களும் அந்த நாளை தொடங்குவார்கள். வீட்டில் இருக்கும் பெண் முகவாட்டத்தோடு, மனக் கஷ்டத்தோடு இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்களின் வேலையும் அந்த நாள் முழுவதும் சரியாக செல்லாது. வீட்டுப் பெண்கள் எப்போதும் மன மகிழ்ச்சியோடும் புன்னகையோடும் இருக்கும்போது, அந்த வீடே ஒரு கோயிலாக மாறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com