பாதியில் பாதி!

பாதியில் பாதி!
Published on

றைவனை விட மேலாகக் கருதப்படுவது, அந்த இறைவனின் திருவடிகளே ஆகும். இறைவனின் திருவடிச் சிறப்பைக் கூறுகையில், ‘நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை’ என்கிறது பரிபாடல். அதேபோல், ‘மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்று பெரிய புராணமும், ‘அன்னவர்க்கே சரண் நாங்கள்’ என்று கம்ப ராமாயணமும், ‘ஈசன் அடி போற்றி, எந்தை அடி போற்றி’ என அடிக்கு அடி திருவாசகமும் பரம்பொருளின் பாதக் கமலங்களையே பாடுகின்றன.

திருவள்ளுவர் தமது திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தின் பத்துக் குறட்பாக்களில் ஏழு குறள்களில் மீண்டும் மீண்டும் கடவுளின் பாதங்களையே போற்றிப் பாடுகின்றார். ‘வாலறிவன் நற்றாள், மாணடி, அடி சேர்ந்தார்க்கு, தாள் சேர்ந்தார்க்கு, அறவாழி அந்தணன் தாள், எண் குணத்தான் தாள், இறைவன் அடி’ எனும் வார்த்தைகள் இடம்பெறும் குறட்பாக்களே அவை.

விராஜ பண்டாரத்தையா என்னும் புலவர், திருக்குற்றாலநாதரின் திருவடிப்பேறு தனக்கு வேண்டும் என்பதை விரும்பிப் பாடுகையில், ‘பாதியில் பாதி தா’ என
பா நயம் சிறக்கப் போற்றிப் பாடுகின்றார்.

‘அருவித் திரிகூடத்தையா உனை நான்
மருவிப் பிரிந்திருக்க மாட்டேன்!
ஒரு விமலைக் காதியிலே பாதி தந்தாய்;
அத்தனை வேண்டா மெனக்குப்
பாதியிலே பாதி தந்து பார்!’

‘விமலையாகிய பார்வதி தேவிக்கு உனது உடலின் பாதி பாகத்தைத் தந்து அர்த்தநாரீசுவரராய்த் திகழ்ந்தாய். எனக்குப் பாதி வேண்டாம். பாதியில் பாதி அதாவது, ‘கால்’ தந்தருளினாலே போதும்’ என வேண்டுகிறார். ‘பாதியில் பாதி’ என்பது கால்தானே! அதைத் தந்தருளுங்கள். உங்கள் காலடிகளே இந்தக் கவிஞனுக்கு கதி! என வேண்டுகிறார். இறைவனை விட, அவனது கமலத் திருப்பாதங்களுக்கு அவ்வளவு மகத்துவம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com