அகால மரணத்தை நீக்கியருளும் பஞ்சவடீஸ்வரர்!

அகால மரணத்தை நீக்கியருளும் பஞ்சவடீஸ்வரர்!
Published on

யிலாடுதுறை மாவட்டம், ஆனதாண்டபுரம் என்று அழைக்கப்படும் ஆனந்தத்தாண்டவபுரத்தில் அமைந்துள்ளது கல்யாண சுந்தரி மற்றும் பெரியநாயகியர் சமேத பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில். நாவுக்கரசர் பாடிப் பரவிய திருத்தலம், பிள்ளை வரம் அருளும் பரமேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் க்ஷேத்ரம், அருமருந்தாகத் திகழும் சிவகங்கைத் தீர்த்தத்தால் சிறப்புப் பெற்ற ஊர் எனும் பலப் பெருமைகளைக் கொண்டது இந்தப் பதி. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தது. அறுபத்து மூவரில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் அவதாரத் திருத்தலம். இவர் குறித்து பெரிய புராணத்தில் 37 பாடல்களில் சிறப்பிக்கிறார் சேக்கிழார் பெருமான்.

இக்கோயிலில் அருளும் நடராஜ மூர்த்தம் சிற்ப அற்புதமாகும். ஸ்வாமியின் திருமுக மண்டலத்துக்கு நேராக நூல் பிடித்துப் பார்த்தால், இடது திருவடியை திருமேனி சரிபாதியாக மையத்தில் தூக்கி நிறுத்தி அருளும் கோலத்தில் காட்சி தருகிறார். ஸ்வாமியின் மூக்கு நுனியின் நடுப்பகுதியில் இருந்து நூல் பிடித்துப் பார்த்தால், வலது மற்றும் இடது திருவடிகளும் அபய - வரத கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் அடங்குவதாக வடிக்கப்பட்டுள்ளது இந்த நடராஜர் திருமேனி!

ஆலயத்துக்கு முன் அமைந்துள்ள திருக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்றும் பிந்து (அமிர்தத் துளி) தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சிறைப்பட்டிருந்த தாயை மீட்பதற்காக அமிர்தக் கலசத்தைக் கொண்டு சென்ற கருடன், வழியில் கலச அமிர்தத்தின் ஒரு துளி இந்தத் தலத்தில் விழுந்து தீர்த்தமானதாக தல வரலாறு. இந்தத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், புத்திர பாக்கியம் வாய்க்கும் என்பது நம்பிக்கை. அதோடு, சகல பாவ தோஷங்களும் திரும் என்று கூறப்படுகிறது. வாரிசு இல்லாத ஹேம காந்தன் எனும் மன்னன், ஒரு தைப்பூச உத்ஸவக் காலத்தில் இந்த சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடி பஞ்சவடீஸ்வரரை வழிபட்டு புத்திரப் பேறு பெற்றான் என்கிறது புராணம்.

பரத்வாஜ முனிவர் இங்கிருந்த பாரிஜாத மரத்தின் கீழ் தவமிருந்து சிவ தரிசனம் பெற்றாராம். இவரின் வேண்டுகோளுக்கு இணங்க, இரு தேவியருடன் காட்சி தந்தாராம் பெருமான். அதாவது, கல்யாண சுந்தரி என்ற திருநாமத்துடன் இளமையாகவும், திருமணமாகி வயது கூடிய நிலையில் பெரியநாயகியாகவும் இறைவனோடு காட்சி தந்தாளாம் அம்பிகை. ஆகவே, இங்கு இரண்டு அம்பாள் சன்னிதிகள் உள்ளன.

இக்கோயில் சிவபெருமானை பதினொரு முறை வலம் வந்து வழிபட்டால் அகால மரணங்கள் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, இல்லறத்தில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கவும், மன நிம்மதி பெற்று வாழவும் வழிபட வேண்டிய திருத்தலம் இது.

அமைவிடம்: மயிலாடுதுறைக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது கோயில். மயிலாடுதுறை ரயில் சந்திப்பு மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com