திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் இன்று பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற இடம் என்றால் ஒன்று பழனி மலை அறுபடை வீடுகளில் முக்கியமான மற்றும் அதிக மக்கள் கூடும் இடம் பழனி மலை. இந்த மலை கோவிலில், புகை வண்டி மற்றும் ரோப் கார் போன்ற வசதிகள் உள்ளன நடந்து மலையேற முடியாமல் இருப்பவர்களுக்கு இது மிகவும் உதவும். அனைத்து நாட்களிலும் இந்த கோவில் திறந்து இருக்கும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு காலை 10.45மணிக்கு மேல் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை மற்றும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மேலும், 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருக்கல்யாணம் வருகிற ஏப்ரல் 3ம்தேதியும், பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏப்ரல் 4ம்தேதி புதன்கிழமை அன்றும் நடைபெறுகிறது. 7ம் தேதியன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைகிறது.
திருவிழாவை முன்னிட்டு , காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வந்து பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
முதல் நாளான இன்று காசி, கயா, திரிவேணி சங்கமம் மற்றும் கொடுமுடி ஆகிய ஊர்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.
நிகழ்ச்சியில், பழனி கோவில் அறங்காவல் குழுவினர், இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.