பரமன் கேட்ட பிள்ளைக்கறி!

பரமன் கேட்ட பிள்ளைக்கறி!

நாயன்மார்கள் ஒவ்வொருவரும் சிவனைத் தொழுது சேவை செய்வதே தங்கள் வாழ்வாகக் கருதி வாழ்ந்ததுடன் சிவன் அடியவர்களையும் போற்றி வணங்கி அவர்களுக்கு தினமும் திருவமுது படைத்துப் பின்னரே தாங்கள் உண்ணும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். இவர்களின் பக்தியை சோதிக்க சிவபெருமானே மனித உருவில் வந்த நிகழ்வுகள் ஏராளமாக பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் வைத்தியர் மரபில் பரஞ்சோதியார் என்பவர் பிறந்தார். அவர் சிறந்த போர் வீரராக விளங்கியதுடன், வடமொழி நூல்களையும், மருத்துவ நூல்களையும் கற்று, சிறந்த அறிஞராகவும் விளங்கினார். அந்த நாட்டு படைத் தளபதியாக இரண்டாம் புலிகேசியை வாதாபியில் வென்று அங்கிருந்து பொன்னும் மணியும், யானைகளையும் குதிரைகளையும் கொணர்ந்தார். அவர் வீரர் மட்டுமல்லாமல் சிறந்த சிவ பக்தராகவும் இருப்பதால் அவரை யாராலும் வெல்ல முடியாது என்று அனைவரும் கூறியதைக் கேட்ட மன்னன் அவரைப் பணிந்து, "இனி தாங்கள் என்னிடம் பணி செய்யலாகாது. தங்கள் ஊர் சென்று தாங்கள் விரும்பிய வண்ணம் சிவத்தொண்டு புரியுங்கள்" என்று நிறைய நிலங்களையும், நிதிகளையும் கொடுத்து அனுப்பினார்.

பரஞ்சோதியார் திருச்செங்காட்டாங்குடி வந்தார். அங்கே திருவெண்காட்டுமங்கை என்னும் பெண்மணியை மணம் செய்து, அவர்களுக்கு சீராளன் என்னும் மைந்தனும் பிறந்தான். அவர் சிவனடியார்களை வழிபட்டு  தினமும் யாராவது ஒரு சிவனடியாருக்காவது உணவு படைத்த பின்னே உண்ணும் வழக்கம் கொண்டிருந்ததனால் மக்கள் அவரை, 'சிறுத்தொண்டர்' என அழைத்தனர்.

ரு நாள் சிவனடியார்கள் யாரும் வராததால், தானே சென்று யாராவது அமுதுண்ண வருவார்களா என்று பார்த்து வர சிறுத்தொண்டர் வெளியே சென்றார். அப்பொழுது அவரை சோதிக்க சிவபெருமான் பைரவர் வடிவத்தில் அவர் வீட்டுக்கு வந்தார்.  வீட்டில் சிறுத்தொண்டரின் மனைவி மட்டுமே இருந்ததால், அவர் வீட்டுக்குள் வர மறுத்ததோடு, ‘தான் கணபதி ஈச்சுவரத்தில் உள்ள அத்தி மரத்திற்குக் கீழே உட்கார்ந்திருப்பதாகவும், சிறுத்தொண்டர் வந்தால் அவரை அங்கே வரச் சொல்லிவிட்டு’ சென்றார். வெளியே அடியவர் யாரும் காணாமல் சோர்ந்து போய் வீடு திரும்பிய சிறுத்தொண்டர் மனைவி கூறியதைக் கேட்டதும் மிக்க மகிழ்ச்சியுடன் கணபதி ஈச்சுவரம் சென்று பைரவ சன்யாஸியின் பாதங்களில் பணிந்து தன் வீட்டில் அமுதுண்ண அழைத்தார்.

அதற்கு பைரவர், "நான் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஒரு பசுவை உண்பேன். அந்த நாள் இன்றுதான்.  நான் உண்ணும் பசு ஐந்து வயதுக்குட்பட்ட மனிதப்பசு. அதுவும் ஒரு குடும்பத்துக்கு ஒரே புதல்வனாய் இருக்க வேண்டும். தாய் பிடித்துக்கொள்ள தந்தை அவனை அரிந்து சமைத்துக் கொடுக்க வேண்டும்" என்றார். பைரவர் சொன்ன எல்லா லட்சணங்களும் பொருந்திய குழந்தையை எங்கே போய் தேடுவது என்று ஒரு நொடி கவலைப்பட்ட சிறுத்தொண்டர், அடுத்த நொடியே தன் குழந்தை சீராளன் இருக்கிறானே என்று அகமகிழ்ந்து போனார். துணைவியாரிடம் பைரவர் சொன்னதை சொல்ல, அவரும் மகிழ்வுடன் தன் குழந்தையை பிடித்துக்கொள்ள தந்தை அவனை அரிய, கறி சமைக்கப்பட்டது.

உணவருந்த அமர்ந்த பைரவர், "நான் தனியாக சாப்பிட இயலாது. யராவது அடியவர் இருந்தால் கூப்பிடுங்கள்!" என்றார். "நானும் ஒரு அடியவர்தான்!" என்று சட்டென்று சிறுத்தொண்டர் தனக்கும் ஒரு இலையைப் போடச் சொன்னார். உடனே பைரவர், "நாம் தனியாக எப்படி உண்பது.  நான் வீட்டுக்குள் வந்தபொழுது பார்த்த தங்கள் மைந்தனை அழையுங்கள். அவனுடன் நாம் உண்ணலாம்!" என்றார்.

சிறுத்தொண்டர் கதிகலங்கிப் போனார். பிள்ளைக்கறிதான் சமைத்தேன் என்றால் பைரவர் உண்ணாமல் போய் விட்டால் என் செய்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்தார். அதற்குள் பைரவர், "நான் இங்கே உணவு உண்ண வந்ததே உங்கள் மைந்தனுடன் உணவு உண்ணத்தான். போய்க் கூப்பிடுங்கள்!" என்று கடுமையாகக் கூறினார். செய்வதறியாமல் சிறுத்தொண்டரும் அவர் துணைவியாரும் வீட்டு வாசலுக்குச் சென்று கண்களில் கண்ணீர் மல்க, "சீராளா! அடியவருடன் அமுதுண்ண வருவாய்!"  என்று அழைத்தனர்.

சிவபெருமான் அருளால் வேதபாடசாலையிலிருந்து  வருபவன் போல் வீட்டுக்குள் சிரித்த முகத்துடன் ஓடி வந்த சீராளனை தூக்கி கணவரிடம் கொடுத்தார் மனைவி. இருவரும் மிகவும் மனமுவந்து, "இன்று நம் வீட்டில் சிவனடியார் அமுது செய்து அருளுவார்!" என்று உள்ளே வந்து பார்த்தபோது திகைத்துப் போனார்கள்.  பைரவரைக் காணவில்லை. பரிமாறப்பட்டிருந்த கறியமுதமும் காணாமல் போயிருந்தது. அப்போது பார்வதி தேவியோடும், முருகப்பெருமானோடும் விடை மீது அமர்ந்து சிவபெருமான் அவர்களுக்குக் காட்சியளித்தார். பக்தர்களை சோதித்து ஏற்றுக்கொள்ளும் எம்பெருமானை தரையில் வீழ்ந்து பணிந்தார்கள் சிறுத்தொண்டரும் அவர் மனைவியாரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com