சோழ வள நாட்டை வளமாக்குவது காவிரியெனில், அத்தல மக்களை வளமுறச் செய்து வாழ வைப்பது அரணார் குடிகொள்ளும் அளப்பரிய பதிகள். அவ்வகைத் தலங்களுள் ஒன்றாய் அருள் பரப்புகின்றது திருநெல்வாயில். தற்போது இத்தலம் சிவபுரி என்று அழைக்கப்படுகின்றது. உச்சி எனில் தலை என்று பொருள். அகிலத்துக்கும் தலைவனாய் விளங்கும் தயாபரனாான பரமேஸ்வரன் இங்கு உச்சிநாதர் என்கிற பெயரோடு விளங்குகின்றார்.
திருஞானசம்பந்தர் கோடைக் காலத்தில் உச்சி வேளையில் தனது 60,000 அடியார்கள் புடைசூழ பசியோடு இத்தலம் வருகையில், அவர்கள் அனைவருக்கும் உணவளித்து அருள் செய்துள்ளார், இத்தலத்தில் உறையும் சிவபெருமான். பெருமான் இட்ட அமுதினால் பசியாறியத் தொண்டர்கள், இத்தல ஈசரை வழிபட்டு மகிழ்ந்தனர். சம்பந்தரோ, பதிகம் பாடி இன்புற்றார். சோழவள நாட்டின் காவிரி வடகரைத் தலங்களுள் 3வது தலமாகத் திகழும் இந்த திருநெல்வாயில் கன்வ மகரிஷி நற்கதி பெற்ற திருத்தலமாகும்.
ஊரின் நடுவே ஆலயம் அழகுற அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே தீர்த்தக் குளமான கிருபாசமுத்திர தீர்த்தம் எழிலுடன் காட்சியளிக்கின்றது. திருக்குளத்தின் நடுவே நீராழி மண்டபமும் உள்ளது. ஆலயம் கிழக்கு பார்த்தவாறு ஒரே பெரிய சுற்று கொண்டு ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. முகமண்டபம் தூண்களுடன் உயர்ந்து காணப்படுகின்றது. தரையிலிருந்து ஐந்தடி உயரத்துக்கு மேல் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப்பெற்ற ஆலயங்களுள் இதுவும் ஒன்று. மிகவும் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ள ஆலயம். ஒரே மகாமண்டபம். அவற்றைக் கொண்டு, ஸ்வாமி சன்னிதி வடக்கு நோக்கியும், அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கியும் அமையப்பெற்றுள்ளது. ஸ்வாமி இங்கு சிறிய லிங்கத் திருமேனியராக, ஸ்ரீ உச்சிநாதர் என்கிற பெயரோடு அருள்புரிகின்றார். கருவறையின் பின்புறச் சுவற்றில் அம்மையும் அப்பனும் மணக்கோலத்தில் மாண்புடன் வீற்றுள்ளனர். அம்பிகை இங்கு கிழக்கு முகம் கொண்டு
ஸ்ரீ கனகாம்பிகை என்கிற திருநாமத்துடன் பேரருள் புரிகின்றாள். மகா மண்டபத்துள் கலைநயம் மிகுந்த நடராஜர்-சிவகாமியை வணங்குகின்றோம்.
கோயிலை வலம் வருகையில் கோஷ்ட தெய்வமான ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிற்ப வேலைபாடுகள் கொண்ட சிம்ம தூண்களுடன் சன்னிதி கொண்டுள்ளார். அஷ்ட புஜங்களுடன் துர்கை அதியற்புதத் தோற்றத்தில் அருள்புரிகின்றாள். ஏனைய கோஷ்ட தெய்வ மூர்த்தங்களும் இங்கு கலாரசனையுடன் காணப்படுகின்றன. சில லிங்கத் திருமேனிகளும் இங்குள்ளது. ஆலயம் எங்கும் கலைநயம் கொட்டிக் கிடக்கின்றது. தூண்களும் அழகிய சிற்பங்களைத் தாங்கி நிற்கின்றன.
இத்தலத்தில் பிரதோஷம், ஆருத்ரா, சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருஞானசம்பந்தர் குரு பூஜை, வைகாசி விசாகத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு என அனேக விசேஷங்கள் சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்தக் கோயிலில் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
தரிசன நேரம்: காலை 6 முதல் 10 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
அமைவிடம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் - பேராம்பட்டு சாலையில் சிதம்பரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது.