பாவக்கணக்குல வராத பணம்!

பாவக்கணக்குல வராத பணம்!
Published on

கிருஷ்ணா நதிக்கரையில் மகாபெரியவா முகாமிட்டிருந்த காலம் அது. அந்த நதியில் தொடர்ந்து ஒரு மண்டலம் ஸ்நானம் செய்யத் தீர்மானித்தார் மகாபெரியவர். அதன்படி, தினமும் அதிகாலையிலேயே புனித நீராடப் புறப்பட்டுவிடுவார் அந்தப் புண்ணியன். அவரோடு வேத விற்பன்னரான சாஸ்திரி ஒருவரும் கூடவே செல்வார்.

மகான் புனித நீராடிவிட்டுக் கரை ஏறும் சமயத்தில் சில பக்தர்கள், அவரது திருவடியில் காசு, பணத்தைக் கொட்டிவிட்டு கும்பிட முயற்சித்தபோது, சட்டென்று அவர்களைத் தடுத்த சாஸ்திரிகள், ஒரு பெரிய மூங்கில்தட்டை எடுத்து நீட்டி, காசை அதில் போட்டுவிட்டு, பெரியவாளை தள்ளியிருந்து கும்பிடச் சொன்னார்.

நாற்பத்து எட்டாவது நாள். வழக்கம் போல நீராடிவிட்டுக் கரை ஏறிய மகான், சாஸ்திரிகளைப் பார்த்தார். "இன்றோடு மண்டல ஸ்நானம் முடிவடைகிறதே... இத்தனை நாட்களாக வசூல் செய்தாயே அந்தப் பண மூட்டை பத்திரமாக இருக்கா?" என்று கேட்டார்.

அப்படியே நடுங்கிப் போனார் சாஸ்திரிகள். "பெரியவா... நான் யார்கிட்டேயும் பணம் வசூலெல்லாம் பண்ணலை... அவா கொண்டு வந்து உங்க முன்னால கொட்டினதை அப்படியே தட்டுல வாங்கினேன்... அவ்வளவுதான். அதை ஸ்ரீமடத்துல ஒப்படைக்கத்தான் கணக்குப் போட்டு மூட்டையா கட்டி பத்திரமா எடுத்து வைச்சிருக்கேன்...!" தழுதழுப்பாகச் சொன்னார் சாஸ்திரி.

"பதற்றப்படாதே... உனக்காக பணம் வசூல் பண்ணிண்டேங்கற அர்த்தத்துல நானும் சொல்லலை. ஆனா, அந்தப் பணத்தை நீ மடத்துக்குத் தர வேண்டாம்!" என்று சொன்னார் மகாபெரியவர்.

"அப்படின்னா, யாருக்காவது தானமா குடுத்துடட்டுமா?" என்று கேட்டார் சாஸ்திரி.

"வேண்டாம்... அதைக் குடுத்தவங்க, பாவம் தொலையுதுன்னு நினைச்சுத்தானே கொடுத்திருக்காங்க... பணத்தை தானமா தந்துடலாம். அந்தப் பாவத்தை என்ன பண்ணுவே?" மகாபெரியவா கேட்க, குழம்பித் தவித்தார் சாஸ்திரிகள்.

"பெரியவா... நான் இப்படி தர்மசங்கடத்துல மாட்டிக்கிட்டேனே... என்னை முதல் நாளே நீங்க தடுத்திருக்கலாமே... எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியலையே...“ தழுதழுத்தார் சாஸ்திரிகள்.

"சரி, சரி... பயப்படாதே... போ... போய், யாகம், ஹோமம் எல்லாம் செய்யற கனபாடிகள் யாரிடமாவது மொத்தப் பணத்தையும் கொடு. இந்தக் காசுல ஹோம திரவியங்கள் (யாகப் பொருட்கள்) வாங்கிப் பயன்படுத்தச் சொல். அக்னியில் சேர்ற எதுவும் பாவக் கணக்குல வராது. அதனால உனக்கும் பாவம் இல்லை. பணத்தை கொட்டினவர்களோட பாவமும் போயிடும்!"

மகாபெரியவா சொல்ல, அதை அப்படியே செய்து முடித்தார் சாஸ்திரிகள். அதன் பிறகு வந்து வணங்கியவரை கை உயர்த்தி ஆசிர்வதித்தார் மகான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com