பயத்தை விரட்டும் பைரவாஷ்டமி வழிபாடு!

பயத்தை விரட்டும் பைரவாஷ்டமி வழிபாடு!
Published on

ஷ்டமி திதியில் சம்பவிக்கும் சில முக்கியப் பண்டிகைகளான, கோகுலாஷ்டமி, துர்காஷ்டமி, பீஷ்மாஷ்டமி போன்றவற்றுக்குச் சற்றும் மதிப்பு குறைவின்றி விளங்குவது ஶ்ரீ காலபைரவாஷ்டமி ஆகும். இதுவே மகேசனின் அவதாரமான ஶ்ரீ காலபைரவருக்கு உகந்த நன்னாளாகும். சிவ பக்தனான அவந்திகாபுரி அரசன் வேதப்ரியன் சிவபூஜையில் ஆழ்ந்திருந்தபோது அவனைக் கொல்ல வந்த அசுரன் தூஷணனை வதம் செய்து ஸ்ரீ மஹா காலேஸ்வரராக உஜ்ஜயினியில் அருள்பாலிப்பவரும், தீய சக்திகளை அடக்கி வீரப் பராக்கிரமச் செயல்களைப் புரிந்து தென்னகத்தில் அட்ட வீரட்டானத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் மகேசன் எடுத்தச் சொரூபங்களே பைரவத் திருக்கோலங்கள் எனப் போற்றப்படுகின்றன.

பைரவர் என்றால் தன்னை அண்டியவர்களுக்கு உண்டாகும் பய உணர்வைப் போக்குபவர், கெடு மதியுடையோர் அஞ்சி நடுங்கும் வண்ணம் பயமுறுத்துபவர் என்பதைக் குறிப்பதாகும். தமிழகத்தில் காலபைரவர் அல்லது வைரவர், கர்நாடகாவில் அன்னதானி, வட இந்திய மாநிலங்களில் பைரோன், பைராத்தியா, பேரூஜி எனவும் இவர் அழைக்கப்படுகிறார். இப்பெருமானை புது தில்லியிலுள்ள ஒரு கோயிலில் தரிசிக்கலாம், வாருங்கள்.

காபாரதப் போருக்குப் பின் இந்திர பிரஸ்தத்தில் முடிசூடிக் கொண்ட தருமர், தனது சகோதரர்களுடன் அந்தப் பிராந்தியத்தில், புரான கிலாவை (பழைய கோட்டை) ஒட்டி இரட்டை பைரவர் கோயில், கன்னாட் சதுக்கத்திலுள்ள பால ஹனுமான் ஆலயம், குதுப்மினாருக்கு அருகேயிருக்கும் கிருஷ்ணரின் சகோதரி யோகமாயா கோயில், தெற்கு தில்லி கல்காஜியின் சுயம்பு காளி கோயில், யமுனை நதியின் நிகம்போத் படித்துறைக்கருகிலுள்ள ‘நீலி சத்ரி (நீலநிற குடை வடிவ) மகாதேவ் கோயில் ஆகிய ஐந்து முக்கிய ஆலயங்களை நிர்மாணித்தார். இவற்றில் முதல் ஆலயத்தைத்தான் தரிசிக்கப் போகிறோம்.

‘பாண்டவர் காலத்து ஶ்ரீ கில்காரி பைரவ் மந்திர்’ என்ற வாசகத்துடன் அலங்கார நுழைவு வாயில் கண்களில் படுகிறது. நடுவில் நீண்ட தடுப்புடன் இருக்கும் இருவழிப் பாதை, கோயில் வெளிப் பிராகாரத்துக்கு அழைத்துச் செல்லும். அவ்விடம் எங்கும் சுற்றித் திரியும் நிறைய ‘ஸ்வானங்’களிடம் (நாய்களிடம்) ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனாலும், அவற்றை யாரும் துன்புறுத்துவது கிடையாது. ‘கில்காரி’ என்றால் மகிழ்ச்சிக் கூக்குரல் எனப் பொருள். பக்தர்கள் ‘ஜெய் போலேநாத் பைரோன் ஜி கீ!’ என எழுப்பும் ஆரவாரக் கோஷம் எங்கும் எதிரொலிக்கிறது. அண்டை மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் பழங்காலம் தொட்டு சைவ சமயத்தின் உட்பிரிவினரான கபாலிகர், காளாமுகர், அகோர வகுப்பினர் கால பைரவரை தங்கள் தெய்வமாகக் கொண்டாடி வந்துள்ளனர். சுரா எனும் மதுவருந்தி, புலால் உண்டு, அவற்றையே பைரவருக்குப் படைத்து வழிபடுவதை, இந்திர பிரஸ்தத்துக்கு இடம் பெயர்ந்தபோதும் வழக்கமாய்க் கொண்டிருந்தனர். அதுவே இன்றும் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும் படையலில் மதுபானம் முக்கிய இடம் வகிப்பதற்கு ஒரு காரணம்! பைரவர் பிரசாதத்தை வெளியே விநியோகிக்கக் கூடாது, முக்கியமாக நாய்களுக்குப் போடக் கூடாது என்று எச்சரித்து இருந்தாலும், அதைப் பெரும்பாலும் எவரும் கடைபிடிப்பதில்லை!

ஆலயம் பழைமை வாய்ந்ததாக இருந்தாலும், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்புதான் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. முண்டியடித்துச் செல்லாமலிருக்கவும்,
சன்னிதிக்கு வரிசையாக நகரவும் தடுப்பு வேலி அமைத்துள்ளனர். கருவறை நுழைவாயிலின் இருபக்கமும் பெரிய நாய்ச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சன்னிதானத்தின் மத்தியில் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டுக் கழுத்தளவு பைரவர் அருள்பாலிக்கிறார். நீலக்கல் பதிந்துள்ள பெரிய, விரிந்த நயனங்கள் நம்மை உற்றுப் பார்க்கின்றன. மூலவர் ஒரு கிணற்றின் மீது பீடம் அமைத்து அதில் வீற்றிருக்கிறார். இதன் காரணத்தை தல புராணத்தில் படித்தறியலாம். அபிஷேகத் தீர்த்தம் கிணற்றின் உள்ளேயே விழும்படிச் செய்து, குழாய் வழியே வெளி வருகிறது. அதை அருந்தினால் உடல் உபாதைகள் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு, ‘பாண்டவர்களின் கிணறு’ என்ற பெயரும் உண்டு.

பைரவர் சிரசின் மேல் விரிந்த குடையும், கையில் சூலமும் உள்ளன. பீடத்தின் கீழே அமர்ந்திருக்கும் கருமை நிற அசிதாங்க பைரவர் சிலைக்கு முழு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அடுத்து சிறிய வடிவில் பைரவர் மூர்த்தி. அதற்கு மேற் சுவரில் பீமன் தன் தோளில் பைரவரை தூக்கி வரும் சித்திரம் வரையப்பட்டுள்ளது. அதையடுத்து பெரிய பீமன், அம்மன் சிலைகள் உள்ளன. ஆலயத்தையொட்டி வலப்புறம் சிறிது தொலைவு சென்றால் ‘துதியா’ (பால்) பைரவர் கோயில் அமைதியாய் காட்சி அளிக்கிறது. பாண்டவர்களின் அன்னை குந்தி தேவியின் பெயரைத் தாங்கி நிற்கும் நுழைவாயில். முன்புறம் நெடிதுயர்ந்த பைரவர் கொடிமரம். அருகில் புராதன அரச மரம். இரு அடுக்குகள் கொண்ட விமானத்தில் நாற்புறமும் உள்ள பிறைமாடங்களில் விநாயகர், ஈசன், பைரவர் மற்றும் பல தெய்வங்களின் சுதைச் சிற்பங்களைக் காண முடிகிறது. வாயில் இடப்புறச் சுவர் ஓவியத்தில் யமதர்மன் பாசக்கயிற்றுடன் எருமை வாகனமேறி வருவதைப் பார்க்கலாம்.

ஆலயத்தின் உள்ளே வலப்புறத்தில் கருவறையைக் காண்கிறோம். கீழ்த்திசை நோக்கி அதே கில்காரி பைரவர் வீற்றிருக்கிறார். காய்ச்சாத பால் கொண்டு அபிஷேகம் செய்வதாலும், சாம்பல் பூசியுள்ளதாலும் வெண்ணிறமாகவே காட்சி தருகிறார். மூலவருக்கு வலப்பக்கம் நின்ற கோலத்தில் பேரூஜி, இடப்பக்கம் மகேசன் அருளுகிறார். பிராகாரத்தில், காளி, சிவன், விநாயகர், கல்கி அவதாரச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு வெளியே இடப்பக்கம் இருக்கும் பெரிய ஆலமரத்தின் அருகே சனீஸ்வரர் மண்டபம், அதில் மற்ற எட்டு கிரகங்களும் உள்ளன.

துஷ்ட, தீய சக்திகளிடமிருந்து வனாந்தரப் பிரதேசமாக விளங்கிய இந்திர பிரஸ்தத்தைக் காக்க, பைரவரின் அருள் வேண்டும் என மாதவன் அறிவுறுத்தினார். அதன்படி காசி மாநகர் சென்று அசிதாங்கப் பைரவரை உபாசித்து, அவரது ஆசியுடன் பைரவர் மூர்த்தியைப் பெற்று வரும்படி பீமசேனன் அனுப்பி வைக்கப்பட்டான். பீமனின் உபாசனையால் மனமகிழ்ந்த அசிதாங்கப் பைரவர், தன் சக்தி உருவேற்றப்பட்ட இரு பைரவத் திருமேனிகளைப் பெற்றுச் செல்ல, ‘போகும் வழியில் சிலைகளை எங்கும் கீழே இறக்கி வைக்கக் கூடாது, மீறினால் அவ்விடத்திலேயே அவை நிலைபெற்று விடும்’ என்ற ஒரு நிபந்தனையுடன் சம்மதம் அளித்தார்.

அவனும் அதற்கேற்ப அச்சிலைகளைத் தன் தோள் மீது சுமந்து வந்தான். நாட்டின் எல்லையை அடைந்தவுடன், சிரமப் பரிகாரம் செய்ய நினைத்து, நிபந்தனையை மறந்து ஒரு சிலையை அருகிலிருந்த கிணற்றின் மீதும், மற்றதை வேறொரு இடத்திலும் வைத்தான். பின்னர் எடுக்க முனையும்போது அவை அங்கேயே நிலை கொண்டுவிட்டதைக் கண்டுத் திகைத்து, உளமாற பைரவரை தொழுதான். அப்போது, “கவலைப்படாதே! நாங்கள் இங்கிருந்தவாறே உங்களைக் காத்தருளுவோம். தீய சக்திகளை அனைவரும் கேட்டு நடுங்கும் அமானுஷ்ய கூக்குரலிட்டு விரட்டுவோம். எல்லாம் மங்கலகரமாக நிறைவடையும்!” எனும் அசரீரி வாக்கு எழுந்தது. அவ்வாறே பாண்டவர்கள் அவ்விடத்திலேயே அவருக்குக் கோயில் எழுப்பி வழிபட்டு வெற்றிகரமாக ராஜதானியை நிர்மாணித்தனர்.

கிருஷ்ண, சுக்லபட்ச அஷ்டமி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. புரான கிலாவைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் இவ்வாலயங்களைத் தரிசிக்காமல் போவதில்லை. இன்றும் நாளையும் காலபைரவாஷ்டமி வழிபாடு. இத்தினத்தில் பைரவரை வணங்கி பைரவர் அருள் பெற விழைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com