நாகை மாவட்டம், சீர்காழிக்கு அடுத்துள்ள திருநாங்கூரில் அமைந்துள்ளது ஸ்ரீ மதங்கீஸ்வரர் ஆலயம். இக்கோயில் மூலவராக ஸ்ரீ மதங்கீஸ்வரரும், ஸ்ரீ ராஜமாதங்கீஸ்வரி அஞ்சனாட்சி அம்பிகையும் அருள்பாலிக்கிறார்கள். சகல கலைகளுக்கும் அதிபதியாக இத்தல அம்பிகை விளங்குகிறாள். மகாசரஸ்வதிக்கே இத்தல ஈஸ்வரி வித்யாப்யாசம் செய்த பெருமை பெற்றவர் என்பதால், இக்கோயில் அம்பிகையை வழிபடுவோர் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்.
நான்கு திருக்கரங்களோடு அருள்பாலிக்கும் அம்பிகையின் மேல் இரு கரங்களில் பத்மமும் சக்கரமும் விளங்க, கீழ் இரு கரங்கள் அபயவரதஹஸ்தமாக விளங்குகிறது. பிறந்து பல மாதங்கள் ஆகியும் சரியாக பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்களின் நாக்கில் தேனைத் தடவி, அம்பிகையின் மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் அனுபவத்தில் கண்ட பக்தர்கள்.
இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. ஆலயத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆனந்த மகாகாளியை வழிபட்டால் ஆனந்த வாழ்வைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோயிலில் இரு நந்திகள் வீற்றிருக்கின்றன. கிழக்கு நோக்கியுள்ளது சுவேத நந்தி என்றும். மேற்கு நோக்கியுள்ளது மதங்க நந்தி எனவும் அழைக்கப்பெறுகிறது.
108 வைணவத் திருப்பதிகளில் பதினொன்று திருநாங்கூரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசைக்கு மறுதினம் 11 கருட சேவை உத்ஸவம் இங்கே நடைபெறுவது விசேஷம். இந்தப் பதினொரு திவ்ய தேசப் பெருமாளையும் ஒருசேர தரிசிப்போர்க்கு ஸ்ரீவைகுண்டம், திருக்கயிலாய தரிசனம் செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும். பதவி, பட்டம், புகழ், செல்வாக்கு, செல்வங்கள் என அனைத்து நல்ல விஷயங்களை பெற ஸ்ரீ ராஜமாதங்கியையும் ஸ்ரீ மதங்கீஸ்வரரையும் வழிபடுவது சிறப்பு. இறைவனின் திருவருள் பெற்றவர் மட்டுமே இத்திருத்தலத்தை தரிசிக்க முடியும் என்பது ஐதீகம்.