கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது வெள்ளியங்கிரி மலை. இது மேகங்கள் சூழ வெள்ளியால் வார்க்கப்பட்டது போல் காட்சி அளிப்பதால் இது வெள்ளியங்கிரி என்று அழைக்கப்படுகிறது. இது ஏழுமலை தொடர்களைக் கொண்டதாகும். இதன் ஏழாவது மலையில்தான் வெள்ளியங்கிரிநாதர் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார்.
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை சிவபெருமானின் ஏழுமலை என்றும் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளியங்கிரி மலை பூண்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. பசுமையும் அழகும் கொண்ட வனங்கள் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் அமைந்திருக்கும் சிவத்தலமான இந்த வெள்ளியங்கிரி மலையில் உள்ள கோயிலுக்கு சுமார் 50 கிலோ மீட்டர் நடை பயணம் கொண்ட புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு செல்ல முடியாதவர்கள் இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கோயிலிலேயே வழிபட்டு திரும்பலாம். பிரசித்தி பெற்ற புண்ணியத் தலமாக விளங்கும் இந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் சுயம்பு லிங்கமாக சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.
நீர், நிலம், அக்னி, வாயு மற்றும் ஆகாயம் என பஞ்சபூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற தலமாக இது விளங்குகிறது. இங்கே சிவன் பஞ்சலிங்கேசனாக ஆறடி அகலம் உள்ள சிறிய குகையில் அருள்புரிகிறார். ஏழுமலை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது திருப்பதி திருமலைதான். ஆனால், சைவ கடவுளான சிவபெருமானுக்கும் ஏழுமலை திருத்தலமாக திகழ்கிறது வெள்ளியங்கிரி மலைக் கோயில்.
இது சிவபெருமானின் காலடி பட்ட மலை என்றும் இங்கு சில காலம் ஈசன் தனது மனைவி பார்வதி தேவியுடன் தங்கியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் வெள்ளியங்கிரிநாதர் கோயில் அமைந்திருக்கிறது. சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவு செல்லும் இதன் பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டிச் சுனை, கைத்தட்டி சுனை, சீதை வனம், அர்ஜுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்கள் இருக்கின்றன. மலையின் அடிவாரப் பகுதி பூண்டி என்று அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரிநாதர் சௌந்தரநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இவர்களுடன் விநாயகர் முருகப்பெருமான் உள்ளிட்ட இன்னும் பிற தெய்வச் சிலைகளும் காணப்படுகின்றன.
இந்தப் புனிதப் பயணம் மேற்கொள்ள கடுமையான முயற்சிகள் வேண்டும். ஆதிசங்கரர் வழிபட்ட இடமாகவும் இது போற்றப்படுகிறது. சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடம் இது என்பதால் சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம் புரிந்தும் வாழ்ந்தும் வருவதாகச் சொல்கிறார்கள்.
இந்த மலை ரத்தினகிரி, தட்சிண கயிலாசம், பூலோக கயிலாயம் என்றெல்லாம் மற்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இந்த மலையில்தான் உமையாள் பார்வதி தேவியின் கோரிக்கைக்கிணங்க பிரணவ தாண்டவத்தை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சித்திரா பௌர்ணமி பண்டிகையின்போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருகின்றனர்.
வெள்ளியங்கிரி மலையில் அதிகாலை நிகழும் சூரிய உதயம் நாம் தவற விடக் கூடாத விஷயங்களில் ஒன்றாகும். படர்ந்திருக்கும் பனி மெல்ல விலக இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியன் தனது கரம் பரப்புவது பார்க்கக் கண்கொள்ளக் காட்சியாக இருக்கும்.
வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரண காரியம் அல்ல. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் இருப்பவர்களும் 40 வயதுக்கு மேலானவர்கள் இந்த வெள்ளியங்கிரி மலை ஏறுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்கின்றனர். இந்த மலை ஏற்றத்திற்கு சுமார் ஐந்து மணி நேரமாவதாகக் கூறப்படுகிறது. வெள்ளியங்கிரி மலையில் ஏறுவது சுலபம், இறங்குவது மிகவும் கடினமான காரியம். அதனால் இறங்கும்போது மூங்கில் கம்பு ஒன்றை உடன் கொண்டு செல்கின்றனர்.
கோயம்புத்தூர் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு காந்திபுரத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன.