இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த கர்நூல் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீயாகந்தி உமாமகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் 15ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் சங்கம வம்சத்தின் மன்னரான ஹரிஹர புக்கராயரால் வைஷ்ணவ மரபின் கீழ் கட்டப்பட்டது.
இப்பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த சித்தப்பா என்னும் சிவபக்தர் ஒருவர் இறைவனைக் காணவேண்டி தவம் இருந்தார். அவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த இறைவன் புலி உரு கொண்டு அவர் முன் தோன்றினார். இதை அறிந்த சித்தப்பா ‘நேனு சிவனே கண்டி’ (நான் சிவனை கண்டுகொண்டேன்) என்று கூவி ஆனந்தக் கூத்தாடினார். அதுதான், ‘நேனுகண்டி’ என்றாகி, பின் ‘யாகந்தி’ என்று மருவியது. ஒவ்வொரு ஆண்டும் ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் பலரும் மகாசிவராத்திரியை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடியதாக இக்கோயில் குறித்த கதை ஒன்று நிலவுகிறது.
இக்கோயில் குறித்து நிலவும் மற்றொரு கதை: அகத்திய மாமுனிவர், வேங்கடேச பெருமாளுக்கு ஒரு கோயில் கட்ட விரும்பினார். ஆனால், சிலையில் ஒரு குறை. பல முறை முயன்றும் சிலை முழுமை பெறவில்லை. அதனால் கோயிலை அவரால் அமைக்க முடியவில்லை. அகத்தியர் சிவபெருமானை எண்ணி தவம் செய்தபோது, சிவபெருமான் தோன்றி, ‘இது கயிலை போல் உள்ளதால் விஷ்ணுவுக்கு உகந்த இடமில்லை’ என்று கூற, முனிவர், மகேஸ்வரரிடம் அவருடைய தேவியுடன் அங்கேயே தங்குமாறு இறைஞ்சினார். சிவபெருமானும் உமாமகேஸ்வரராக ஒரே கல்லில் ஓருருவாக அங்கே எழுந்தருளினார். இத்தலத்தில் மூலவர் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தருகிறார்.
கட்டடக்கலை (புஷ்கரணி): இந்தக் கோயிலில் புஷ்கரணி என்னும் ஒரு சிறிய குளம் உள்ளது. மலையடிவாரத்தில் இருந்து வரும் நீர் நந்தியின் வாய் வழியாக புஷ்கரணியில் விழுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் சுவையாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளது. இதன் சிறப்பம்சமாக ஆண்டு முழுவதும் ஊற்று நீர் குளத்தில் விழுந்தபடி உள்ளது. இந்த புஷ்கரணியில் குளிப்பது, புனிதமாகவும், நன்மை தரக்கூடியதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
யாகந்தி கோயிலைச் சுற்றி காணப்படும் குகைகள்:
1. அகத்தியர் குகை: இது அகத்தியர் சிவனை நோக்கி தவம் செய்த குகை. இந்த குகையைக் காண 120 செங்குத்தான படிகளைத் தாண்டி செல்ல வேண்டும். குகைக்குள் தேவியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
2. வேங்கடேஸ்வரர் குகை: இந்தக் குகையில் வேங்கடேஸ்வரரின் சிதைந்த சிலை உள்ளது. இது அகத்தியர் குகையை விட மிகப் பெரியது. இதன் வழி குறுகலாக உள்ளதால் குனிந்து சென்றால்தான் உள்ளே செல்ல இயலும். இங்குள்ள சிலையானது திருமலை வேங்கடேஸ்வரர் கோயிலுக்கு முற்பட்டது என்று கூறுகின்றனர்.
3. வீர பிரம்மேந்திரர் குகை: இந்தக் குகை துறவி ஸ்ரீ குபேரபுரி வீர பிரம்மேந்திர ஸ்வாமி தனது காலஞான கவிதைகளை எழுதிய குகையாகும். குகையின் முகப்பு உயரம் குறைவாக உள்ளதால் குனிந்தபடியே உள்ளே செல்ல வேண்டும்.
பிரபலமான நம்பிக்கைகள்:
வளரும் நந்தி: கோயிலின் முன்பு உள்ள நந்தி சிலையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதன் வளரும் தன்மைக்கும், இந்த சிலை செதுக்கப்பட்ட பாறை வகைக்கும் தொடர்புள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் 20 ஆண்டுகளில் 1 அங்குலம் உயரம் வளர்ந்திருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
காகங்கள் இல்லாமை: அகத்திய முனிவர் இங்கு தவத்தில் ஈடுபட்டிருந்தபோது காகங்கள் அவரை தொந்தரவு செய்ததால், அந்தக் காகங்களை அங்கு நுழையக் கூடாது என்று சபித்தார் என்று கூறுகின்றனர்.
அழகு, அருள் வரலாறு, இருப்பிடம் என எல்லா வகையிலும் வசீகரிக்கும் ஸ்ரீ யாகண்டி மஹேஸ்வரரை ஒரு முறை தரிசிக்கச் சென்றால் மீண்டும் செல்ல வேண்டும் என்கிற ஆவல் தானாகவே வரும்.