பேசும் வார்த்தையே வாழும் வாழ்க்கை!

பேசும் வார்த்தையே வாழும் வாழ்க்கை!

நாம் வாழும் வீடு கோயிலைப் போன்றது. கோயிலுக்குச் செல்லும்போது எப்படி மனத்தூய்மையோடும், உடல் தூய்மையோடும் இருக்க வேண்டும் என்று நினைப்போமோ, அதேபோலத்தான் வீட்டில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நல்ல எண்ணத்துடனும் நல்ல மனதுடனும் செய்யும்போது, அதன் பிரதிபலிப்பு நிச்சயம் நம் வீட்டிலும் பரவத் தொடங்கும். சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமது வாழ்வை படுகுழியில் தள்ளி விடும்.

ஒரு வீடு சுபிட்சமாக இருக்க லட்சுமி கடாட்சம் வேண்டும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை அந்த வீட்டில் இருப்பவர்கள் வாயிலிருந்து தோன்றும் ஒவ்வொரு வார்த்தையும். ‘எண்ணங்கள் எப்படியோ அப்படியே வாழ்வு அமையும்’ எனும் வாசகத்தை பல இடங்களில் கேள்விப்பட்டதுண்டு. ஏனென்றால், நம் எண்ணத்துக்கு அத்தனை சக்தி இருக்கிறது. ஒருசில வார்த்தைகளை நம் வீட்டில் பேசவே கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. இதை மீறி இந்த வார்த்தைகளை பேசும் வீட்டில் கண்டிப்பாக நீங்கள் எத்தனை பூஜை, புனஸ்காரங்கள், வழிபாடு செய்தாலும் அந்த வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்.

வீட்டில் குழந்தைகளை, ‘சனியனே’ என்று ஒருபொழுதும் திட்டவே கூடாது. இது மிகவும் அமங்கலமான வார்த்தை. சனி பகவான் கடவுளாகவே இருந்தாலும் இப்படிப் பேசும்போது, ‘அவர்கள் நம்மை அழைக்கிறார்கள்’ என நினைத்து வீட்டுக்கு வந்து விடுவார் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அதேபோல், பிள்ளைகளை திட்டும்போது விளக்குமாறு, செருப்பு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டக் கூடாது.

அனைத்தையும் விட முக்கியமான விஷயம், நம் வீட்டில் இருந்து கொண்டு நாம் பிறருக்கு எந்த சாபமும் கொடுக்கவே கூடாது. ஏனென்றால், சாபம் கொடுப்பது, பேசுவது வேண்டுமானால் யாருக்கோ இருக்கலாம். ஆனால், வரும் வார்த்தை உங்களுடைய வாயிலிருந்து, உங்கள் வீட்டில் இருந்து வருகிறது. பொதுவாக வீட்டில், ‘ததாஸ்து’ என்ற தேவதை வாழ்ந்து கொண்டிருப்பதாக ஐதீகம் உண்டு. அவர்கள் நாம் என்ன பேசினாலும், ‘ததாஸ்து’ (ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள்) என்று நம்மை வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வரும்போது அவர்களின் வாழ்த்து உங்களுக்குத் தான் பலிக்கும். எனவே, எந்தக் காரணத்தை கொண்டும் இதுபோன்ற வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது.

தேபோல், சில வீடுகளில் எப்போதும் பெரியவர்களையோ அல்லது குழந்தைகளையோ, ‘நீ நல்லவே இருக்க மாட்ட, விளங்காம போவ, உருப்பட மாட்ட’ போன்ற வார்த்தைகளையும் பேசக் கூடாது. நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் நல்ல வார்த்தைகளாகவே இருக்க வேண்டும். நீங்கள் அபசகுணமான வார்த்தைகளைப் பேசும்போது அந்த ததாஸ்து தேவதை வாழ்த்தினால் என்னவாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதனால்தான் நாம் எப்போதும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசி வர வேண்டும். இதனால் அந்த தேவதையின் வாழ்த்து பலித்து, உங்கள் வாழ்க்கை பல மடங்கு உயரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ததாஸ்து தேவதையின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்தாலே மற்ற தெய்வங்களின் அனுக்கிரமும் உங்களுக்கு எளிதில் கிடைத்து விடும். இனி, நல்லதையே பேசி நல்லதையே நினைத்து நல்ல முறையில் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com