படுக்கையோடு கோவர்த்தன கிரிவலப் புண்ணியப் பயணம்!

படுக்கையோடு கோவர்த்தன கிரிவலப் புண்ணியப் பயணம்!

கோவர்த்தனம் ஸ்ரீ கண்ணனின் மகிமைகள் நிரம்பி வழியும் புண்ணிய பூமி. மதுராவில் முதல் நாள் தங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் கோவர்த்தனம் புறப்படலாம். ‘கோ’ என்றால் பசு என்றும், ‘வர்த்தன்’ என்றால் பராமரிப்பு என்றும் பொருள். மதுராவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கோவர்த்தனம். கோயிலை அடுத்து ஒரு மிகப்பெரிய குளம் அழகாகத் தென்படுகிறது. ’மானச கங்கா’ என்று அதற்குப் பெயர். இங்கு அனுமனுக்கும் சன்னிதி இருக்கிறது.

கோயிலுக்குள் நுழைந்தவுடன் மிகப் பெரிய மண்டபம் ஒன்று நம்மை வரவேற்கிறது. சுவர்களில் இருக்கும் மாடங்களில் ஹனுமன், ஸ்ரீநாத், விநாயகர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. ராதா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் பளிங்குச் சிலைகள் அழகுறக் காட்சி அளிக்கின்றன. பிரசாதங்கள் அங்கேயே தயாராகின்றன. எதிரில் கோவர்த்தன மலையைத் தன்னுடைய சுண்டு விரலால் தூக்கி நிறுத்தும் ஸ்ரீ கிருஷ்ணர். குன்றுக்கு அடியில் பசுக்களும் மனிதர்களும் பாதுகாப்பாக நிற்கின்றனர். சன்னிதிக்கு முன்பு நீர் இல்லாத குளம் ஒன்று காட்சி தருகிறது.

ஆதிசேஷன் குடைபிடிக்க, வசுதேவர் கூடை ஒன்றில் ஸ்ரீ கிருஷ்ணரைச் சுமந்து செல்லும் சிற்பம் ஒன்றும் காட்சி தருகிறது. கோயிலுக்கு எதிரில் சுமார் 50 மீட்டர் தொலைவில் கிரிவலப் பாதை தென்படுகிறது. ’சரி! கோவர்த்தன கிரியையும் தரிசித்து விடலாமே’ என்று அருகில் போனால், சிறிய குன்று தெரிகிறது. அதுதான் கோவர்த்தன கிரி. சுற்றிலும் கம்பி வேலி போட்டு வைத்திருக்கிறார்கள். பன்றிகளும், குரங்குகளும், பசுக்களும் இங்கே மிக அதிகமாக நடமாடிக்கொண்டு இருக்கின்றன.

கோவர்த்தனத்தைத்தான் குடையாகப் பிடித்து இந்திரனின் சீற்றத்தால் கொட்டிய கடும் மழையில் இருந்து மக்களையும் பசுக்களையும் ஸ்ரீகிருஷ்ணர் காப்பாற்றினாராம். இதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அப்பகுதியில் வாழ்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்திரனுக்கு பலவற்றையும் காணிக்கையாகச் செலுத்தி அவனை வழிபட்டு வந்தார்களாம். அதைக் கைவிடுமாறு ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்த, அப்படியே மக்களும் இந்திரனுக்கு செய்து வந்த பூஜை புனஸ்காரங்களை நிறுத்தி விட்டனராம். இதனால் கோபம் கொண்ட இந்திரன் பெருமழையைப் பொழிவித்துத் தள்ள ஆரம்பித்தாராம். அந்தப் பெருமழையில் இருந்து மக்களையும் விலங்குகளையும் காப்பாற்ற ஒரு குடை தேவைப்பட்டது. கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்து மக்களையும் பசுக்களையும் ஸ்ரீ கிருஷ்ணர் காத்தார். அதன் பிறகு இந்திரனும் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணனை அடிபணிந்தான். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்கு மறுநாள் கோவர்த்தன தினம் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இங்கே பக்தர்கள் பலரும் கிரிவலம் செய்து வருவதைக் காண முடிகிறது. சிலர் கையில் பாய் அல்லது மெத்தையை வைத்துக்கொள்கிறர்கள். அதைத் தரையில் விரித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, பிறகு எழுந்து பழையபடி நான்கைந்து காலடி நடந்து மீண்டும் சாஷ்டாங்க நமஸ்காரத்தைத் தொடர்கிறார்கள். பதினான்கு கிலோ மீட்டர்கள் கிரிவலத்தை இப்படியே  நமஸ்கரித்தபடி கடக்கிறார்கள். குரு பூர்ணிமா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கோவர்த்தனத்தில் குவிந்து கிரிவலம் செய்து புண்ணியம் பெறுகிறார்கள்.

’இவ்வளவு பெரிய மலையை இடைவிடாது தூக்கிக்கொண்டு இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரின் கை விரல்கள் களைப்படையவில்லை; நகங்களும் மாறுபாடு அடையவில்லை; அழகோ கொஞ்சம்கூடக் குறையவில்லை! இது மாயாஜாலம் போல இருக்கிறதே!’ என்று பெரியாழ்வாருக்கு ஏற்பட்ட வியப்பு நமக்கும் ஏற்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com