

மீன ராசிக்கார்கள் பல காரணங்களால் மிகச் சிறப்பானவர்கள். ராசி நாதன் குரு என்பதால் கருணையும் இரக்கமும் கற்பிக்கும் குணமும் எப்போது பாலில் ஒளிந்திருக்கும் நெய் மாதிரி மனசுக்குள் உட்கார்ந்திருக்கும். இந்த வருடம் ஏழரைச் சனி என்பதாலும் ராசியின் மீது சனி பகவான் நாற்காலி போட்டு அமர்ந்திருப்பதாலும் முயற்சிகளை அதிகப்படுத்துவதோடு தடை தாமதங்களை எதிர்பார்த்துத் தயார் நிலையில் இருங்கள். வெல்வது உறுதி.
பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். அதாவது அப்பா அல்லது தாத்தா வழியில் உள்ள வீடுநிலம் ஆகியவை பற்றி கோர்ட் கேஸ் ஏதாவது இருந்தால் அது நல்லபடியாக முடியுங்க. சுருக்கமாச் சொன்னால்… உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். பூர்வீகச்சொத்து பற்றி மட்டுமல்ல, பொதுவாவே வேறு விஷயங்களிலோ பிசினஸ் பற்றியோ, கோர்ட் கேஸ் சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும்.
இந்த ஆண்டு நீங்கள் பல காலம் விரும்பிக் காத்திருந்தபடியே நான்கு சக்கர வாகனமோ அல்லது இரண்டு சக்கர வாகனமோ வாங்கும் யோகம் உள்ளது. பெண்கள் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லதுங்க. பிடிவாதத்தைச் சற்றே குறைத்துக்கொள்ளலாம். குறிப்பாகக் கணவன் மனைவிக்குள்ளே சண்டை சச்சரவு வராமல் பார்த்துக்குக் கொள்ளுங்களம்மா. ஒரே தட்டிலிருந்து எடுத்துச் சாப்பிடுமளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம் என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.
ஏழரைச் சனி என்பதாலும், உங்கள் ராசியின் மீதே சனி இருப்பதாலும் (அதாவது இதை ஜென்ம சனி என்போம்) எதை எடுத்தாலும் அதில் தடைகளும் தாமதங்களும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதுதான். யாரையாவது பார்க்கக் கிளம்பும்போது வீட்டிலிருந்து கிளம்புவதற்கே நாழியாகலாம் அல்லது வாகனம் தாமதமாகலாம் அல்லது நீங்கள் சந்திக்க வேண்டிய நபருக்குத் திடீரென்று வேறு இடத்துக்குப் போக வேண்டியிருந்த நிகழ்ச்சியை கேன்ஸல் செய்யக்கூடும். எதிர்பாராத அனைத்து வகைத் தாமதங்களையும் எதிர்பாருங்கள்.
பத்திரங்கள் பத்திரமாக உள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். என்னதான் ஏழரைச் சனி என்றாலும் நீங்கள் முப்பது வயதைத் தாண்டியவர் என்றால் ஏழரைச் சனியின் இரண்டாவது சுழற்சியில் சனி வரும் காலமாகும். இக்காலகட்டத்தில் எதிர்பாராத தனலாபம், தொழில் வளர்ச்சி, வீடு, வாகனம் யோகம் போன்ற பொங்கும் நற்பலன்களைத் தரும். எனவே நிறைய உழைப்பீர்கள். உழைப்புக்கேற்ற நற்பலன்களைப் பெறுவீர்கள்.
இரும்பு, எண்ணை மற்றும் வாகனம் சார்ந்த தொழில் செய்வோருக்கு வருடத்தின் ஆரம்பத்தில் சிரமங்களும் செலவுகளும் ஏற்பட்டாலும், போகப் போக அனைத்தும் சரியாகும்.
நிறையப் புண்ணியச் செயல்கள் செய்வீர்கள். பல கோயில்களுக்குப் போய் வருவீர்கள். பிரார்த்தனைகளை முனைந்து நிறைவேற்றுவீர்கள். குறிப்பாகக் குல தெய்வக்கோயிலுக்குச் செல்வதற்கும் உங்கள் மதம் சார்ந்த வழிபாட்டுத் தலத்துக்குச் செல்வதற்கும் தடைகள் ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலை மாறி, நல்லபடியாகச் சென்று வென்று வருவீர்கள்.
உங்க வீட்டில்/ குடும்பத்தில் யாருக்காவது குழந்தை பாக்யம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால்... வீட்டில் இந்த ஆண்டே மழலை சத்தம் கேட்கும் என்று உறுதியாக நம்பலாம். நீங்கள் கலைத்துறையில் உள்ளவரா? எனில், பல வகைகளில் நல்ல வசதி வாய்ப்புகள் தேடி வரும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எழுத்தாளர்களுக்கும் பிரசுரம் செய்பவர்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்.
பிரபலமான பெரிய மனிதர்கள் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு மட்டுமின்றி அவங்கள் மூலம் உதவியும் கிடைக்கும். பல வகைகளில் நல்ல வசதி வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் ஒன்று நிச்சயம். அப்படித் தேடி வரும் வாய்ப்பை நல்ல முறையில் உபயோகித்துக் கொள்வதும் அலட்சியமாக உதறுவதும் உங்கள் கையில்தான் உள்ளது.
மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு வரும். அது உங்களின் கனவு மட்டுமின்றி உங்கள் பெற்றோரின் கனவாகவும் இருக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் தோழிகளிடம் அளவோடு பழகுவது நல்லதும்மா. விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவதோ கொடுப்பதோ கூடவே கூடாது. தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். சந்தோஷம் நீரூற்று மாதிரிப் பொங்கும்.
வீடு அல்லது பிசினஸ் செய்ய முன்பணம் போடுவீர்கள். ஒரு வேளை அது பார்ட்னர்ஷிப் சார்ந்த வியாபாரம் என்றால் உங்கள் இருவரின் ஜாதகங்களையும் நல்ல ஜோதிடம் காண்பித்து ஆலோசனை பெற்ற பிறகே அதில் இறங்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். இதைப் பல ராசிபலன்களில் படிச்சிருப்பீங்க. எனவே அலட்சியமா நினைக்காதீங்க. நெருங்கிய நட்பு வந்து கெஞ்சும்போது உங்களை மறந்து “யாமிருக்க பயமேன்.. அஞ்சேல்” என்று சொல்லிக் கையெழுத்துப்போட்டுவிட வாய்ப்பிருக்கு. ஜாக்கிரதை.
மொத்தத்தில் விழிப்புணர்வோடு இருந்தால் நிச்சயமாக வென்று நிமிர்வீர்கள்.
மற்ற ராசிபலன்களை படிக்க Click Here