பிதாமஹர் பீஷ்மர் சர சயனத் தலம்!

பிதாமஹர் பீஷ்மர் சர சயனத் தலம்!

ர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் மகத்தான தீர்ப்பினைத் தந்தது குருக்ஷேத்ரமாகும். இந்த வீர மண்ணிலே அன்னையின் முழங்கை விழுந்திருக்கிறது. சக்தி பீடங்களின் வரிசையில் குருக்ஷேத்ரம் இடம் பெறுவதோடு, அம்பிகை பத்திரகாளியாக இங்கே எழுந்தருளியுள்ளாள். தட்சனின் ஆணவப் போக்கினையும் ஆண்டவனையே மதிக்காத அவனுடைய அறியாமையையும் கண்ட தாட்சாயணியின் கோபத்திலிருந்து மாகாளி தோன்றினாள். தட்சனுடைய யாகம் அவளால் அழிந்தது. தட்சனின் தலையும் கீழே உருண்டது. ஆண்டவனை மதியாதவன் செய்கிற யாகத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லாம் அழிந்தனர். அதேபோல், ஆணவமும் கயமைத்தனமும் கொண்டிருந்த துரியோதனன் கூட்டத்தாரை ஒழித்துக் கட்டிய போர்க்களமாம் குருக்ஷேத்ரத்திலே அன்னை பத்திரகாளியாக கோயில் கொண்டிருப்பது விசேஷம்!

தாட்சாயணியின் கோபத்திலே உருவானவள் மாகாளி. பெண் என்றும் பாராமல் திரௌபதியின் சேலையினைத் துகில் உரித்த துரியோதனர் கூட்டத்தாரை அழித்த இடத்திலே பத்ரகாளி. மிகவும் பொருத்தமான இடத்தில், பொருத்தமான பெயரினை இங்கே அன்னை கொண்டிருக்கிறாள். குருக்ஷேத்ரம் என்ற பெயரிலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. டெல்லி அம்பாலா மார்க்கத்தில் டெல்லிக்கு வடக்கே 97 மைல்கள் தொலைவில் இந்த குருக்ஷேத்ரம் உள்ளது. 48 கோசம் (பத்தாயிரம் முழம்) சுற்றளவு உள்ள பாகம் குருக்ஷேத்ரம் என்ற பெயருடன் மகாபாரதக் காலம் முதல் புனித இடமாக இருந்து வருகிறது.

பாரதத் திருநாட்டில் பாரம்பரிய இதிகாசப் பெருமையினை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகும் பறைசாற்றிக் கொண்டிருக்கிற வீர பூமியாக இது திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த குருக்ஷேத்ர பூமியிலேதான் உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய பகவத் கீதையினை ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். அன்னையின் கருணையானது குருக்ஷேத்ரத்தில் பாண்டவர்களுக்கு ஆதரவாகவே இருந்தது. இந்த குருக்ஷேத்ரத்தில்தான் அன்னை பத்ரகாளியாக திருக்கோயில் கொண்டு திகழ்கிறாள். இந்த க்ஷேத்ரத்தில் 360 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான தீர்த்தங்களாக விளங்கக்கூடியவை தானேஸ்வர சரஸ்வதி தீர்த்தம், ஸ்தானுஸாரம். அன்னை எழுந்தருளியுள்ள பத்ரகாளி கோயில், பஞ்சப்ராசி, ஸரோவரம், ஸன்னி ஹித தலால், பானி கங்கா, பெஹோவா, ஜ்யோதிஸாரம் ஆகிய தீர்த்தங்களாகும். குருக்ஷேத்ரத்தின் எந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தாலும் சாஸ்வதமான பிரம்மலோக பிராப்தி ஆகுமென்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தப் புனித க்ஷேத்ரத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

சூரிய கிரஹணத்தில் குருக்ஷேத்ரத்தில் உள்ள ஸன்னி தீர்த்தக் குளத்தில் ஸ்நானம் செய்வது புண்ணியத்தைத் தரும் என்பது பிரஸித்தமாகும். இதனால் சூரிய கிரஹணத்தின்போது குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்கான மக்கள் நீராடுகிறார்கள். இங்கு ஏராளமான தடாகங்களும் காட்சியளிக்கின்றன. அந்த நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான அழகிய வெண்தாமரை மலர்களும் செந்தாமரை மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. குருக்ஷேத்ர யுத்தத்திலே இறந்த போர் வீரர்களே இவ்வாறு தாமரை மலர்களாக மலர்ந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. யுத்தக் களத்திலே உயிர் துறப்பவர்கள் வீர சொர்கத்தினை அடைவார்கள். அதனால்தான் யுத்த களத்தினை சொர்க்கத்தில் வாயில் என்று அழைக்கிறார்கள். இங்கே இறந்தவர்கள் இந்த மண்ணிலே கலந்து தாமரை மலர்களாக காட்சியளிக்கிறார்கள் என்பதே இங்குள்ளவர்களின் நம்பிக்கை ஆகும்.

இத்தலத்தில் நீராட வேண்டிய முக்கியமான இடம் புஷ்கரணி என்று அழைக்கப்படும் தாமரை மலர்கள் நிறைந்த தடாகம் ஆகும். இந்த இடத்தில்தான் சக்தி பீட நாயகியாக விளங்கக்கூடிய அன்னை பத்ரகாளியின் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகில் இருக்கும் தானேஸ்வர மகாதேவ் திருக்கோயில் நாம் காண வேண்டிய முக்கியமான திருத்தலம் ஆகும். மேலும், லட்சுமி குண்டு, துர்க்ககூவ், சதுர்முக பிரம்மத் தீர்த்தம், பிராயசீர் தீர்த்தம், சரஸ்வதி நதி, குபேர் குண்டு, குரங்கு குண்டு பாணகங்கா ஆகிய இடங்களும் குருக்ஷேத்ரத்தில் நாம் பார்க்க வேண்டிய இடங்களாகும். ஜோதீஸ்வார் என்ற இடம்தான் சரித்திரப் புகழ் பெற்ற பகவத் கீதை உதித்த இடமாகும். இங்கே ஒரு பழைமையான ஆலமரம் இருக்கிறது. இந்த இடத்தில்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையின் உட்பொருளை விளக்கியதாகக் கூறப்படுகிறது.

தர்மத்தை அழிப்பதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு கருவியாகவே செயல்பட்டு இருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. தேவியின் உடற்கூறு விழுந்த இடத்திலேயே கௌரவர்கள், பாண்டவர்கள் ஆகியோருக்கு இருந்து வந்த தீராத பகைக்கு ஒரு தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. அத்தகைய மகத்தான தீர்ப்பு எழுதப்பட்ட க்ஷேத்ரத்தில் அன்னை பத்ரகாளியாக திருக்கோயில் கொண்டிருக்கிறாள். தர்மத்தின் திருவுருவமாக விளங்கியும் செஞ்சோற்றுக் கடனைத் தீர்ப்பதற்கு பீஷ்மர் துரியோதனனுக்கு ஆதரவாகப் போர் புரிந்தார். அதனால் யுத்தக் களத்திலே அவரும் சாய்ந்தார். அம்புப்படுக்கையில் (சர சயனம்) அவர் இருந்த இடமும் குருக்ஷேத்ரத்தில் காண வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.

துரியோதனக் கூட்டம் முற்றிலும் அழிந்த பிறகு தர்ம புத்திரன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் இங்கு வந்து பீஷ்மரிடம் உபதேசங்களைப் பெற்றிருக்கிறார். பீஷ்மர் நிகழ்த்திய இந்த ஞானோபதேசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒரு அரசன் நாட்டினை எவ்வாறு ஆள வேண்டும் என்பதை எல்லாம் அவர் மிகவும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். உலகத்து ஆட்சி முறைக்கே வழிகாட்டும் வகையிலே சர சயனத்திலே அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் பாரத தேசத்துக்கு தனிப்பட்ட பெருமையைத் தருவதாக விளங்குகிறது. இத்தனை சிறப்புகளுக்கும் காரணமாக அமைந்த அன்னை இந்த குருக்ஷேத்ரத்தில் பத்ரகாளியாக தனிச் சன்னிதி கொண்டுள்ளாள். குருக்ஷேத்ர மண்ணிலே அன்னையின் கருணையைப் பெறுவோம். கணக்கில்லா நன்மைகளைப் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com