தெலங்கானாவின் கலாச்சாரத் திருவிழா போனாலு!

‘ஆஷாட போனாலு’ விழா
‘ஆஷாட போனாலு’ விழாImage credit - thehansindia.com
Published on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் தனித்துவப் பாரம்பரிய விழாவான ‘ஆஷாட போனாலு’ விழா இந்த வருடம் ஜூலை 7ந் தேதியிலிருந்து ஜூலை 28ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா முக்கியமாக இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்திலும் தெலுங்கானா மாநிலத்தின் பிற பகுதிகளிலும், இந்து தெய்வமான மகாகாளியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா 2014 ஆம் ஆண்டில் தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ மாநில விழாவாக அறிவிக்கப்பட்டது

இந்த திருவிழாவை ஒட்டி ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களில் உள்ள கோயில்கள் மலர்கள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. கோல்கொண்டா கோட்டையில் உள்ள மகாகாளி கோயிலில் முதற்கட்டமாக இந்த விழா துவங்க உள்ளது இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்களென எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான ஏற்பாடுகளும் தெலங்கானா அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்களின் முக்கியப் பங்களிப்புடன் நடைபெறும் போனாலு திருவிழா மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அதிக முக்கியத்துவம் வாய்ந்த தனித்துவமான கலாசார பண்டிகை ஆகும். இது பாரம்பரியம் மற்றும் பெண்ணிய சக்தியுடன் ஆழமாக பின்னிப் பிணைந்த ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

போனாலு என்ற பெயர் விருந்துக்கான தெலுங்கு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது இதில் "போனம்" என்ற சொல் குடும்ப உறவுகள் மற்றும் மரியாதையில் வேரூன்றிய ஒரு இணைப்பைக் குறிக்கிறது. பெண்கள் மிகுந்த பக்தியுடன் தெய்வீக அன்னையான அம்மனுக்கு மண் அல்லது செம்பு பாத்திரங்களில் அரிசி, பால் மற்றும் தயிர் அடங்கிய புனிதமான பிரசாதத்தை படைக்கின்றனர்.

போனாலு திருவிழா கிராம தெய்வங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிராம தெய்வங்களான எல்லம்மா, மைசம்மா, போச்சம்மா, முத்யாலம்மா, பெத்தம்மா உள்ளிட்ட தெய்வங்கள், இந்த விழாவின் போது, மஞ்சள், குங்குமம், மலர்கள், நகைகள் உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப் படுகின்றன. இந்த தெய்வங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பவர்களாக , மக்கள் கருதி வருகின்றனர்

ஹைதராபாத் நகரத்திற்கும் போனாலு திருவிழாவிற்கும் வரலாற்றுத் தொடர்பு உள்ளது. 1869ஆம் ஆண்டு, இரட்டை நகரங்களில் கொள்ளை நோய் தாக்குதலால் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தபோது கிராம தெய்வங்களின் கோபத்தினால்தான் இந்த கொள்ளை நோய் உண்டானதாகக் கருதி மக்கள் போனாலு விழாவைத் துவங்கி வழிபடலானார்கள். 1675ஆம் ஆண்டு லபுல் ஹஸன் குதுப் ஷா ஆட்சிக்காலத்தில் ஹைதராபாத் நகரத்தில் போனம் திருவிழா கொண்டாடப்பட்டதன் குறிப்புகள் இருப்பதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்

மற்றொரு கூற்றின்படி 19 ஆம் நூற்றாண்டில் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் இரட்டை நகரங்களில் பிளேக் மற்றும் அம்மை நோய் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தபோது மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் இருந்து இங்கு முகாமிட்டிருந்த ராணுவப் படை உஜ்ஜைனில் உள்ள மஹாங்கால் கோயிலில் உள்ள தேவியிடம் பிளேக் நோயிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்ததாகவும் மகா காளியம்மன் அருளால் தொற்று நோய் நீங்கி மக்கள் காப்பாற்றப் பட்டதாகவும் கூறப்படுகிறது. காளி தேவியின் சிலை உஜ்ஜயினிலிருந்து கொண்டு வரப்பட்டு செகந்திராபாத் பகுதியில் பிரதிஷ்டை செய்த பின் அங்கு உஜ்ஜயினி காளி கோவில் கட்டப்பட்டது. அப்போதிருந்து மக்கள் போனாலு திருவிழாவைக்,கொண்டாட துவங்கியதாக நம்பப்படுகிறது.

மகாகாளி தேவி
மகாகாளி தேவி

புராணங்களின்படி மகாகாளி தேவி "ஆஷாட மாசம்" அல்லது ஜூன் பிற்பகுதியில் இருந்து ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வரும் நேரம் என்று கூறுப்படுகிறது,.

கலாசார மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் மட்டுமல்லாது போனாலு திருவிழாவிற்கு பருவகால நோய்களை தடுப்பதில் முக்கியப் பங்கு உள்ளதாக மக்கள் நம்புகின்றனர். மழைக்காலங்களில் மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் அதிகமாகப் பரவுகின்றன. இந்த நோய்கள் வர காரணமான கிருமிகளை விரட்டும் மருத்துவ குணம் வேப்பிலைக்கு அதிக அளவில் உள்ளது. போனாலு திருவிழாவின் போது பெண்கள் வேப்பிலைகளாலான பிரசாதத்தை தேவிக்குப் படைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஜெயிக்கும் வரை தோற்கலாம் தவறில்லை!
‘ஆஷாட போனாலு’ விழா

இந்த பாரம்பரிய திருவிழா கோல்கொண்டா கோட்டையில் உள்ள ஜகதாம்பா மகாகாளி கோயிலில் துவங்கி, பின் செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜயினி மகாகாளி கோயில் அதற்குப் பின் லால்தர்வாஜா பகுதியில் உள்ள சிம்மவாஹினி மகாகாளி அம்மாவாரி கோயிலில் விழா நிறைவடைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரமிக்க வைக்கும் திருவிழாவைக் காணவும் பங்கேற்பதற்காகவும் தொலை தூரங்களில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com