பொங்கும் பரிவு!

பொங்கும் பரிவு!
Published on

ரு சமயம் வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. மறுமையில் தேவையானதை நாம் இம்மையிலேயே தேட வேண்டாமா? இந்தப் பிறவி முடிந்த உடனே நாம் அடைய வேண்டிய மோட்சத்துக்கான வழிகளை நாம் இந்தப் பிறவியிலேயே தேட வேண்டாமா? அப்படி என்றால் யார் பரத்தத்துவம், எந்த தெய்வத்தை நாம் வணங்க வேண்டும்? இதுதான் அவனுடைய கேள்வியும் சந்தேகமும்.

இந்த சந்தேகத்தை யார் தீர்த்து வைக்கிறார்களோ அவர்களுக்கு பொற்கிழி பரிசு என்று அறிவித்திருந்தான். பெரியாழ்வார் திருமாலின் அனுகிரகத்தினாலே பாண்டியனுடைய அரசவைக்குச் சென்று அந்த சபையிலே அவனுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்தார். நாராயணனே பரம்பொருள் என்றும் நாராயணனை வணங்கினால் மோட்சத்தை அடையலாம் என்றும் பரத்தத்துவம் செய்தார். உடனே தலைக்கு மேலே கட்டி இருந்த பொற்கிழி தானாக அறுந்து பெரியாழ்வாரின் மடியின் மேலே விழுந்தது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பாண்டிய மன்னன் பெரியாழ்வாரை யானை மீது அமர்த்தி அம்பாரியில் ஊர்வலமாக வலம் வந்தான். இப்படி தன்னுடைய பக்தன் ஒருவன் கொண்டாடப்படுகிறான் என்பதைக் காண சந்தோஷத்தில் சாட்சாத் அந்த ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கருட வாகனத்தில் பெரியாழ்வாருக்குக் காட்சி தந்து அனுகிரஹம் செய்தார். பெருமாளைப் பார்த்த உடனே பெரியாழ்வாருக்கு அளவிட முடியாத ஆனந்தம். ஆனால், அந்த ஆனந்தமும் சந்தோஷமும் சிரிது நேரம்தான் நீடித்தது. சற்று நேரத்தில் அந்த நிலை மாறி பெரியாழ்வார் ஒரு தாயாக மாறிவிட்டாராம். நமக்கெல்லாம் பெருமாள் காட்சி தருவாரா என்று தெரியாது. ஒருவேளை அப்படி தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால் நாம் என்னவெல்லாம் கேட்போம்? ஒரு கோயிலுக்குச் சென்றாலே, ’இதை கொடு, அதை கொடு’ என்று நாம் பெருமாளிடம் வேண்டுகிறோம்.

ஆனால், பெரியாழ்வார் பெருமாளை பார்த்த உடனே அவருக்கு ஒரு தாயைப்போல ஒரு பாசம்தான் வந்தது. காரணம், அவரது ஆழ்ந்த பக்தி. அந்த பக்தி பெருகி அன்பாக மாறி, பின் அதுவே பரிவாகப் பொங்கி எழுந்தது. எப்படி என்றால் பெருமாளை பார்த்தவுடனே ஆஹா இவ்வளவு அழகாக இருக்கிறாரே. இவரை எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்களே. அவர்கள் பார்வையினால் பெருமாளுக்கு ஒரு குறை வந்துவிடக்கூடாது. யாருடைய கண்ணும் பெருமாள் மீது பட்டு விடக்கூடாது. அவருக்கு கண் திருஷ்டி வந்துவிடக்கூடாது என்று நினைத்த பெரியாழ்வார் பெருமாளுக்கு பல்லாண்டு பாடினார்.

’பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பல கோடி நூறாயிரம் மல்லாண்ட

திண்தோள் மணிவண்ணா உன்

சேவ்வடி செவ்வித் திருகாப்பு’

என்று பெருமாளுக்கு பல்லாண்டு பாடி, மங்களாசாசனம் செய்தாராம். ’பெருமாளே நீ வந்தது போதும்… உன் மேல் யாராவது கண் பட்டு கண் திருஷ்டி ஆகிவிடும். நீ மறுபடியும் வைகுண்டத்துக்கே சென்றுவிடு’ என்று வழி அனுப்பி வைத்து விட்டாராம். இங்குதான் அந்த அன்பு மிகுதியாகி பொங்கும் பரிவு ஒரு தாயைப் போல அவருக்கு தோன்றியது.  ’பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் எனும் பெயர்’ என்று அவருக்கு பின்னால் வந்த பெரியவர்கள் எல்லாம் பெரியாழ்வாரை கொண்டாடினார்கள். அவருக்கு அதுவரை விஷ்ணு சித்தர் என்ற பெயர்தான் இருந்தது. அதன் பிறகுதான் பெரியாழ்வார் என்ற பெயர் அவருக்கு வந்தது. ஆழ்வார்களிலேயே பெரியாழ்வார் சற்று ஏற்றம். பெரிய ஆழ்வார், பெரிய மனசுக்காரர். அதனால் அவருக்கு பெரிய ஆழ்வார் என்ற பெயர் வந்தது.

இந்தப் பொங்கும் பரிவு நிலைக்கு இன்னொரு உதாரணமும் உண்டு. காஞ்சிபுரத்தில் வரதகுரு என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வரதராஜ பெருமாள் கோயிலில் தினமும் வேதபாராயணம் செய்பவர். ஒரு சமயம் வரதகுரு பாராயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் வரதராஜப் பெருமாளுக்கு கோயில் அர்ச்சகர் சூடான பாலை ஆவி பறக்க நிவேதனம் செய்ய கொண்டு போய்க் கொண்டிருந்தார். இதை பார்த்த வரதகுரு, அர்ச்சகரே ஒரு நிமிடம் பாலை என்னிடம் கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு அர்ச்சகர், ’இது பெருமாளுக்கு… நிவேதனம் செய்ய போய்க்கொண்டு இருக்கிறேன். இதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள்?’ என்று அர்ச்சகர் கேட்டார். வரதகுரு கட்டாயப்படுத்தவே அர்ச்சகர் அந்த சூடானப் பாலை அவரிடம் கொடுத்தார். அந்தப் பாலை வரதகுரு வாங்கி சூடு தணிய அதை ஆற்றினாராம். ’இவ்வளவு சூடான பாலை நிவேதனம் செய்கிறீர்களே, பெருமாளுக்கு நாக்கு சுட்டு விடாதா?’ என்று கேட்டாராம். அப்போது அர்ச்சகர், ’வரதகுருவே நீங்கள் தினமும் வேதபாராயணம் செய்கிறீர்கள். புருஷ சூக்தம் படிக்கிறீர்கள். அதில் பெருமாளுடைய நாவில்தான் அக்னி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்க, பெருமாளுக்கு எப்படி நா சுடும்’ என்று கேட்டாராம். அதற்கு வரதகுரு, ’நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். வேதம் படிக்கும்பொழுது பெருமாள் பெரியவர் அதனால் ஒன்றும் தோன்றவில்லை. ஆனால், அதன்பிறகு கம்பீரமாகவும் அழகாகவும் சௌந்தர்யமாகவும் இருக்கக்கூடிய பெருமாளை பார்க்கும்பொழுது அவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது, ஒரு குறையும் வந்து விடக்கூடாது என்று எனக்கு தோன்றுகிறது’ என்று ஒரு தாய், தனது குழந்தைக்கு பாலையாற்றிக் கொடுப்பது போல அவர் பாலை ஆற்றிய பின் பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்தார்களாம்.

உடனே பேரருளாளனாகிய வரதராஜ பெருமாள் சன்னிதானத்தில் இருந்து, ’அம்மா’ என்று ஒரு குரல் எழுந்ததாம்‌. வரதகுருவுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. ’’வரதகுருவே, ஒரு தாயைப் போல என்னை நீங்கள் பார்த்துக் கொண்டீர்கள். எனக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது. ஒரு தாய் எப்படி குழந்தைக்கு பாலை ஆற்றிக் கொடுப்பாளோ அதுபோல உங்களுடைய பொங்கும் பரிவு, ஒரு தாய் நிலையில் இருந்து நீங்கள் எனக்கு காட்டிய அன்பு. அதனால்தான் அம்மா என்று கூப்பிட்டேன்’’ என்று பெருமாள் சொன்னாராம். எவ்வளவு பெரிய ஒரு அனுக்கிரகமும் பாக்கியமும் வரதகுருவுக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து அவருடைய இயற்பெயரான வரதகுரு மாறி அவருடைய ஊரான நடாதூர் உடன் அம்மா சேர்ந்து நடாதூரம்மாள் என்ற பெயர் மருவியது.

இப்படி இந்தப் பொங்கும் பரிவு ஆழ்வார்களுக்கே உரித்தான பரிவு. அதாவது பெருமாள் மீது ஆழ்ந்த பக்தியினாலே ஆழ்ந்தார்கள். அதனால் அவர்கள் ஆழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படி ஆழ்வார்களுடைய பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com