போகர் வடிவமைத்த இரண்டாவது நவபாஷான சிலை கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூம்பாறை என்னும் ஊரில் உள்ளது. நாம் பலமுறை கொடைக்கானல் சென்றிருப்போம். அங்கிருக்கும் குறிஞ்சி ஆண்டர் கோவிலுக்கு சென்றிருப்போம். ஆனால் சற்றே தொலைவில் உள்ள பூம்பாறை கோவிலுக்கு சென்றிருக்க மாட்டோம். இது எதேர்ச்சையாக நடப்பது அல்ல. ‘இன்னார் இந்த நாள், இந்த நேரம் என்னை தரிசிக்கலாம்’ என்று பூம்பாறை முருகன் முடிவெடுப்பதால் பலருக்கும் அவனை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை.
பழனி தண்டாயுதபாணி சிலையை வடித்த போகர் பிறகு இரண்டு சிலைகளை வடிதத்துள்ளார். இதில் பூம்பாறை முருகன் நவபாசானத்தில் ஆனவர் என்றும் தசபாசானத்தில் ஆனவர் என்றும் இருக்கருத்து கூறப்படுகிறது.
பூம்பாறை முருகன் பெயர் குழந்தை வேலப்பர். போகர் இந்த முருகனை பூம்பாறையில் பிரதிஷ்டை செய்வதற்கு காரணம் என்னவென்று பார்த்தபோது கோடைக்கானலில் இருந்து பூம்பாறை செல்லும் வழியில் பழனி கோவில் வீவ் பாயின்ட் என்ற இடம் வரும். அங்கிருந்து பார்த்தால் பழனி கோவில் தெரியும். பூம்பாறையும், பழனியும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதால் இருக்கலாம். இக்கோவிலுக்கு ராஜகோபுரம் எதுவுமில்லை. மூலஸ்தானத்தின் மேல் கோபுரம் மட்டுமே உள்ளது. குழந்தை வேலர் மேற்கு திசையை நோக்கி அருள்பாலிக்கிறார். குழந்தை என்பதாலேயே புன்முருவல் பூத்து நிற்கும் அருள் உருவம்.
இக்கோவிலுக்கு மூன்றாயிரம் ஆண்டு புராண வரலாறு உண்டு. கருவறை கட்டப்பட்டிருப்பதை பார்த்தாலே பல ஆயிரம் வருடம் பழமையான கோவில் என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் பூம்பாறை முருகன் கோவில் மகாபாரதத்தோடு தொடர்புடையது. பஞ்சப்பாண்டவர்கள் வனவாசத்தின் போது மேற்கு தொடர்ச்சிமலையில் வசித்த காலத்தில் இந்த பூம்பாறை முருகனை வழிப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் இக்கோவில் மிகவும் பழமையானது என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும், சிலை அழகும் சான்றாக உள்ளது. பூம்பாறை முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடலும் பாடியுள்ளார்.
அருணகிரிநாதர் முருகனை தரிசித்துவிட்டு கோவிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது முருகன் குழந்தை ரூபத்திலேயே அருணகிரிநாதருக்கு காட்சியளித்துள்ளார். இக்கோவிலுக்கு அருகிலேயே அருணகிரிநாதருக்கு சிலையுடன் கோவிலும் உள்ளது. அதைப்போலவே போகரின் திருஉருவப்படமும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. முன்பு சொன்னதுபோல யார் ஒருவருக்கு இந்த முருகன் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அவர் மட்டுமே இந்த ஆலயத்திற்கு செல்லமுடியும் என்பது ஐதீகம்.
அடுத்து மூன்றாவது முருகன் சிலை இருக்கும் மதிகெட்டான் சோலையைப் பற்றி பார்க்கலாம். உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளன அதில் ஒன்றுதான் இந்த மதிகெட்டான் சோலை. கொடைக்கானலில் அமைந்திருக்கும் இந்த மதிகெட்டான் சோலைக்கு செல்ல யாருக்குமே அனுமதி கிடையாது. இந்த பகுதிக்குள் சென்ற 12 பேர் உயிருடன் திரும்பவில்லை இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் ஒரு விசித்திரமான மூலிகை செடி இருக்குமாம். அதை மிதித்துவிட்டால் எப்படி வெளியே செல்வது என்பது கூட தெரியாதவாறு மதி மழுங்கிவிடுமாம். உள்ளே சென்றவர்கள் வெளியே வராததற்கு இதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அங்கு போகர் ஒரு சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் காணப்படவில்லை. ஒன்று, இரண்டு இடங்களில் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஒருவேளை போகர் முருகன் சிலையை பிரதிஷ்டை செய்திருந்தால், அதில் அவர் மிகப்பெரிய சூட்சமத்தை மறைத்த வைத்திருக்க வேண்டும். பழனியில் இருக்கும் நவபாஷாண முருகனை மக்கள் எளிதில் தரிசித்து விடலாம். பூம்பாறை முருகனை தரிசிக்க சற்று சிரமப்பட வேண்டும். ஒருவேளை மதிகெட்டான் சோலையில் முருகன் சிலை இருப்பின் அதை காண்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை.