பூர நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய நாலூர் மாடக்கோயில்!

அருள்மிகு பலாசவனேஸ்வரர்
அருள்மிகு பலாசவனேஸ்வரர்

மாடக்கோயில் என்றாலே கோச்செங்கட்சோழன் என்று அறியப்பட்ட கோச்செங்கணான் ஞாபகம்தான் வரும் அல்லவா? இம்மன்னன் காவிரி கரையோரம் எழுபதிற்கும் மேற்பட்ட சிவாலயங்களைக் கட்டியதாக வரலாறு மூலம் அறியப்படுகிறது. இவன் கட்டிய கோயில்களை, 'யானை ஏறா மாடக்கோயில்' என்று கூறுவர்.

மாடக்கோயில் என்றால் என்ன? இக்கோயிலில் ஏன் யானை ஏறக்கூடாது? அதற்கு ஒரு பின்னணிக் கதை உண்டு. திருவானைக்கா காவிரி கரைக்கருகில் மரத்தடியின் கீழ் ஒரு சிவலிங்கம் இருந்தது. ஒரு யானை தினமும் அதற்கு தும்பிக்கையால் நீர் வார்த்து அபிஷேகம் செய்து, புஷ்பம் சாத்தி வழிபட்டு வந்தது.

ஒரு நாள் சிலந்தி ஒன்று, 'ஐயோ இந்த சிவலிங்க மூர்த்தத்துக்கு மேற்கூரை இல்லாமல் இருக்கிறதே. அதனால் மரத்தின் காய்ந்த இலைகள் லிங்கத்தின் மீது விழுகிறதே' என்கிற பச்சாதாபத்தில் வலை ஒன்றை கூறையாகப் பின்னியது. அடுத்த நாள் இதைப் பார்த்த யானை, சிலந்தி எச்சிலால் வேய்ந்த அந்த வலையைப் பிய்த்தெறிந்தது.  சிலந்தி வலையைப் பின்னுவதும், யானை அதை பிய்த்து எறிவதும் தொடர்ந்தது. இதனால் சிலந்திக்கு மிகவும் கோபம் உண்டானது. அதனால் அடுத்த நாள் யானை தும்பிக்கையை சிவலிங்கத்துக்கு நீர் வார்த்தபோது, யானையின் தும்பிக்கைக்குள் சிலந்தி புகுந்து அதைத் துன்புறுத்தத் தொடங்கியது. வலி தாங்க முடியாமல் யானை, தும்பிக்கையைக் கீழே தரையில் அடிக்க யானையும் இறந்தது. சிலந்தியும் இறந்தது.

இருவரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், யானையை கணங்களுக்குத் தலைவனாக்கினார். சிலந்தியை, சுபதேவச்சோழருக்கும், கமலவதி அம்மையாருக்கும் மகனாக, கோச்செங்கட்சோழனாக பிறக்கச் செய்தார். பூர்வஜன்ம வாசனை காரணமாக, கோச்செங்கட்சோழன் யானை ஏறா மாடக்கோயில்களைக் கட்டினார். இறைப் பணிகள் பல செய்து நாயனார் வரிசையில் இடம் பிடித்தார்.

பலாசவனேஸ்வரர் மாடக்கோயில்
பலாசவனேஸ்வரர் மாடக்கோயில்

அப்படி இவர் கட்டிய ஒரு கோயில்தான், பெரியநாயகி சமேத பலாசவனேஸ்வரர் மாடக்கோயில். இது நால்வராலும் பாடல் பெற்ற திருத்தலமாகும். இக்கோயிலின் தல விருட்சம் பலா மரமாகும். தீர்த்தம் சந்திர தீர்த்தமாகும்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவே இத்தலம் வந்து பலாசவனேஸ்வரரை வணங்கி, தனது வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொண்டுள்ளார். ஆகையால், நுழைந்தவுடன், கணபதியையும், மகாவிஷ்ணுவையும் தரை தளத்திலேயே வணங்கிய பின், குறுகிய படிகளேறி, கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் பார்ட்னரிடம் தவறிக்கூட சொல்லக்கூடாத 5 விஷயங்கள்!
அருள்மிகு பலாசவனேஸ்வரர்

கோயிலுக்குப் போகிறவர்கள் முதலில் தல விருட்சமான பலா மரத்திற்கு ஒரு சொம்பு நீரை ஊற்றிவிட்டுச் செல்வது சாலச் சிறந்தது. முக்கியமாக, பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திர தீர்த்தத்தில் நீராடிவிட்டு பலா மரத்திற்கு நீரை வார்த்துவிட்டு பிறகு கோயிலுக்குள் சென்றால் பல வகையான வேண்டுதல்களும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. படிப்பு, வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு இந்த ஈசனை வழிபட சிறந்த பலன்கள் கிடைக்கப்பெறும்.

இக்கோயில் கும்பகோணம் குடவாசல் மார்க்கத்தில் அமைந்துள்ளது. திருவாரூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் நாலூர் நிறுத்தத்தில் நின்று செல்லும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com