
ஏப்ரல் 30-நரசிம்மர் ஜெயந்தி (Narasimha Jayanti): பக்தர்களின் மனக்குறைகளை போக்கும் நரசிம்மர் ஆலயங்கள்...!
திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திலுள்ள மூலவர் தோற்றம் மிகவும் அரியதான ஒன்றாகும். மூலவர் நரசிம்மரின் இடது தொடையில் அமர்ந்துள்ள லட்சுமி தாயார் அவரை இரு கைகளும் கூப்பி வணங்கிய நிலையிலுள்ளார். இந்த ஆலயத்தில் அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களோடு இருப்பதும் ஓர் அரிய காட்சியாகும். இந்த ஆலயம் 1300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இத்தனை அற்புதங்களை கொண்ட லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்னை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக தாயாருடன் காட்சிதரும் இத்தல நரசிம்மரை புரட்டாசி சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.
சீர்காழியிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், திருவெண்காட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, திருகுறையலூர் உக்கிர நரசிம்மர் கோவில். மிகவும் பழமையான இத்தலத்தை 'ஆதி நரசிம்மர் தலம்' என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம ஷேத்திரம் என்பதால் 'தட்சிண நரசிம்மர் தலம்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள். திருமங்கையாழ்வார் அவதரித்த தலம் இது. பஞ்ச நரசிம்ம தலங்களில் முதலாவது இத்தலம். கருவறையில் உக்கிர நரசிம்மர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது, வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். மன நலம் குன்றியோர் அஷ்டமி, சுவாதி நட்சத்திர தினங்களில் இத்தல நரசிம்மருக்கு பானகம் நிவேதித்து வழிபட அதிலிருந்து நிவாரணம் பெறலாம் என்கிறார்கள்.
நாகப்பட்டினத்தில் உள்ள சவுந்தரராஜப் பெருமாள் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள நரசிம்மப் பெருமாள் 8 கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். பிரகலாதனை ஆசிர்வதிப்பதுபோல் ஒரு கரமும், அபய முத்திரை காட்டியபடி ஒரு கரமும், மற்ற கரங்கள் இரண்யனை வதம் செய்தபடியும் அமைந்துள்ளன. இவரை வழிபட, எதிரிகளை வெல்லும் ஆற்றல் பிறக்கும், எதிர்ப்புகள் நீங்கும். பயம், கஷ்டங்கள் மற்றும் மன உளைச்சல் நீங்கி, மன அமைதி கிடைக்கும். தீராத நோய்கள் தீரும், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் திருவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது அமைந்துள்ளது. இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
அதோடு இந்த கோவிலில் யோக நரசிம்மர் இயந்திரத்தோடு காட்சி தருகிறார். வேறு எந்த கோயிலிலும் இந்த இயந்திரத்தோடு யோக நரசிம்மர் காட்சி தருவதில்லை. இயந்திரத்தோடு காட்சி தருவதால் செய்வினை போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வணங்கினால் பலன் நிச்சயம்.
திருநெல்வேலி டவுன், மேல மாடவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க 1300 ஆண்டு பழமையான தலம். இது நெல்லையப்பர் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. நீதிமன்ற வழக்குகள், வீடு நிலம் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்ப்பதில் வல்லவர் இத்தல நரசிம்மர். இங்கு ஒரு தட்டில் அரிசியை பரப்பி, அதில் உடைத்த தேங்காய் மூடிகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுகிறவர்களின் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூரில் அதன் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வீர நரசிம்மர் கோயில், 108 திவ்ய தேசங்களாகப் போற்றப்படும் மூன்று கோயில்களில் ஒன்றாகும். இங்கு, இருபுறமும் தேவியர்களுடன் நரசிம்மப் பெருமான் அருள் பாலிக்கிறார். இங்கே யோக பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரின் இரு புறமும் இரணியன், பிரகலாதன் உள்ளனர். இந்த அபூர்வ கோலத்தை இங்கு மட்டுமே காணலாம். ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் பிரதோஷ காலத்தில் வீர நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்து வந்தால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம். இந்த திவ்ய தேசக் கோவிலில் கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீ வீர நரசிம்மர், மண்டபத்தில் ஸ்ரீ யோக நரசிம்மர், நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், கருடாழ்வாரின் விமானம் மற்றும் கம்பத்தில் ஸ்ரீ அபயவ நரசிம்மர் ஆகிய ஐந்து நரசிம்மர்கள் உள்ளனர்.