
கணநாதம், மஹேஸ்வரம், அம்பிகாம், விஷ்ணும், ஆதித்யம் கௌமாரம் என்ற ஒரு வழக்கு உண்டு. இதையே ஷண்மத ஸ்தாபனம் என்பர். அதாவது கணபதி வழிபாடு, சிவனைத் துதித்தல், தேவியைப் போற்றுதல், நாராயணனை சரணாகதி அடைதல், சூரியனை ஆராதித்தல், முருகனை பிரார்த்தித்தல் எனும் ஆறு வகை வழிபாடுகளைப் பாகுபடுத்தி, வெகு எளிதாக இறைவன் அருளைப் பெற ஆதிசங்கரர் வழிகாட்டியுள்ளார். இத்தகைய வழிபாடுகளில் முதலாவது காணாபத்யம்.
மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமரகர்ண விலம்பித ஸுத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே!
'ஓம்' காரம் எனும் பிரணவ ஸ்வ ரூபியே ஸ்ரீவிக்ன விநாயகமூர்த்தி.ஜீவ ராசிகளின் மூலாதாரத்தில் அமர்ந்து ஜீவனைப் பாதுகாப்பவரும் அவரேதான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் தோன்றியது இந்த பிரபஞ்சம் என்று எல்லோரும் ஒருமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள். அந்த பஞ்ச பூதங்களின் அதிபதியாகவும், நிர்குண பிரம்மத்தின் வடிவமாகவும், சகலத்தையும் தம்முள் அடக்கிக்கொண்ட பிரணவ மூர்த்தியாகவும் காணாபத்யர்கள் உள்ளத்தில் விநாயர் உறைவதாக நம்பப்படுகிறது.