
ஏகதந்தம் மஹாகாயம் தப்தகாஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்
(ஒரே தந்தத்தை உடையவரும், பெருத்த சரீரத்தைக் கொண்டவரும், உருக்கிய தங்கத்துக்கு ஒப்பானவரும், தழைத்த வயிற்றை உடையவரும் அகன்ற கண்களை அடைந்தவரும், பூத கணங்களுக்கு தலைவருமான ஸ்ரீமகா கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்)
விநாயக புராணத்திலிருந்து ஓர் ஏடு.
காசிபமுனிவருக்கு மனைவியர் பதிமூன்று பேர். அவர்களில் வினதை, கத்துரு என்ற இருவருக்கும் தீராத பொறாமையும், குரோதமும் இருந்து வந்தது. ஒருமுறை கத்துருவின் தூண்டலால் அவள் மகன் ஆதிசேஷன், தன்னுடன் அஷ்டநாகர்களான வாசுகி, அனந்தன், தக்கன், சங்க பாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்கோடகன் இவர்களைச் சேர்த்துக்கொண்டு வினதை குமாரர்களுடன் போர் தொடுத்தான். இறுதியில் வினதையின் புத்திரர்களான சடாயு, சம்பாதி, சேனன் மூவரும் தோற்றுச் சிறைப்பட்டனர். இதைக் கண்ட வினதை மிக்க துக்கமடைந்தாள்.