
மௌஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாக யஜ்ஞோபவீதினம்
பாலேந்துவிலஸன் மௌலிம் வந்தேஹம் கணநாயகம்
(முஞ்ஜப்புல், மான்தோல் இவற்றைத் தரித்திருப்பவரும், ஸர்பத்தை பூணூலாகக் கொண்டவரும், பாலச்சந்திரன் பிரகாசிக்கிற சிரஸை உடையவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீ மஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்)
ஒருமுறை பகவான் நாராயணன் அனந்த சயனத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, அவரது செவிகளிலிருந்து இரு அரக்கர்கள் தோன்றினர். மது, கைடபர் என்ற அவர்கள், வளைந்த கோரைப்பற்களுடன் பயங்கர தோற்றத்துடன் விளங்கினர். இவ்விருவரும் தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பல இன்னல்களைக் கொடுத்து வந்தனர். அச்சமுற்ற பிரம்மதேவன் உள்ளிட்ட இந்திராதி தேவர்கள் திருப்பாற்கடல் சென்று பரந்தாமனிடம் சரணடைந்தனர். ஆனால் அனந்தன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அவர்களின் இன்னல்களை அறிந்த நித்ராதேவி, விஷ்ணுவின் கண் தழுவலை விட்டு விலகிச் சென்று விட்டாள்.