
கஜவக்தரம் ஸுரஸ்ரேஷ்டம் கர்ணசாமரபூஷிதம்!
பாசாங்குசதரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்
(யானையின் முகத்தை உடையவரும், தேவச்ரேஷ்டரும், காது களாகிய சாமரங்களால் அலங்கரிக்கப்பட்டவரும்,பாசம், அங்குசம் இவற்றைத் தரித்திருப்பவரும், தேவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீ மஹாகணபதியை நமஸ்கரிக்கிறேன்)
பல்லாண்டுகளுக்கு முன் அபிஜித் என்ற அரசன் தன் நாட்டைச் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். புத்திர பேறு இல்லையே என்பதுதான் அவனது ஒரே குறை! இதனால் மனம் வாடிய அவன், தனது ராஜ்ஜிய நிர்வாகத்தை மந்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு வனவாசம் சென்றான்.
காட்டினுள் நுழைந்த அவன், மகரிஷி வைசம் பாயனரின் ஆசிரமத்தை அடைந்தான்; அவரை வணங்கினான். அவனைக் கண்ணுற்ற முனிவர், ‘அவனுக்கு ஒப்பற்ற ஓர் மகன் பிறக்கட்டும்' என்று ஆசிர்வதித்தார். இதைக்கேட்டு எழுந்த மன்னன் பேரானந்தத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.