Vighnahar Temple, OzarImg Credit: Ashtavinayak
தீபம்
பிரணவ மூர்த்தி 8 - விநாயகர் 'விக்னராஜர்' ஆனது எப்படி?
விக்னராஜர் என்ற பெயருடன், விநாயகர் எழுந்தருளிய தலம் ஓஜர். புனே நகரத்திலிருந்து 85 கி.மீ. தொலைவில் உள்ளது. அஷ்டவிநாயகர் ஆலயங்களில் இக்கோயிலில்தான் தங்க கூரையையும், தங்க கலசத்தையும் கண்டுகளிக்கலாம்.
-ஜபல்பூர் நாகராஜ சர்மா
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை ஸ்ஸதா!
ஸ்தூயமானம் மகாத்மானம் வந்தேஹம் கண நாயகம்!!
(யக்ஷர், கின்னர், கந்தர்வர், ஸித்தர், வித்யாதரர் இவர்களால் எப்போதும் துதிக்கப்படுகிறவரும், மஹாத்மாவும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நான் நமஸ்கரிக்கிறேன்)
கலகப் பிரியரான நாரத முனிவர் ஒருமுறை தேவேந்திர சபைக்கு வந்தார். இந்திரனிடமே, தனது கைவரிசையைக் காட்டலானார்: "தேவேந்திரா! இமயமலைக்கும் விந்திய பருவதத்துக்கும் இடையில் ஏகவதி என்ற ஒரு நகரம் உள்ளது. அந்நகரத்து அரசனான அபிநந்தன் மாபெரும் வேள்வி ஒன்றை தொடங்க முன்வந்துள்ளான். பல மக ரிஷிகளும், பல மாமுனிவர்களும், அநேக வேத விற்பன்னர்களும் பங்கேற்கும் இந்த யாகத்தின் தொடக்கத்திலேயே உன் பதவியை நீ இழக்க நேரிடலாம்!"