பிரசாதங்கள் உணர்த்தும் தத்துவம்!

பிரசாதங்கள் உணர்த்தும் தத்துவம்!
Published on

கற்கண்டு: அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளக்கூடிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது கற்கண்டு. இது சுக்ர கிரகத்துடன் தொடர்புடையது. பூஜையில் நெய்வேத்தியமாக கற்கண்டு வைத்து வழிபடுவதால் குடும்பத்தின் நிதி நிலைமை பலப்படுவது மட்டுமல்லாமல், உடலும் உள்ளமும் வலிமை பெறுகிறது.

மோதகம்: பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமான பதார்த்தம் மோதகம். வெள்ளை மாவினால் மூடப்பெற்று மையத்தில் இனிப்பான பூரணத்தைக் கொண்டதே மோதகம். ஆசை, பந்தங்கள், கர்வம் ஆகியவற்றை விலக்கினால் இனிமையான பரம்பொருள் ஆனந்தத்தை அறியலாம் என்பதை மோதகம் உணர்த்துகிறது.

அவல்: மிக எளிமையான பிரசாதமான இது கண்ணனுக்குப் பிடித்தமானது. நெல்லை நீரில் நன்றாக வேக வைத்து உலக்கையால் மோதபெற்று உருவாவதுதான் அவல். அதுபோன்று சம்சாரத்தில் உழன்று வேதனையுற்று கஷ்டங்களோடு மோதி நாம் அடையும் மனோவிருத்தியை அவல் உணர்த்துகிறது.

நெற்பொறி: இது நெருப்புச் சூட்டில் பொரிக்கப்படும் பதார்த்தம். நாமும் நமது வழிபாட்டு தத்துவத்தினால் பக்குவம் பெற்று பூரணமாக வேண்டும் என்பதை நெற்பொறி உணர்த்துகிறது. கார்த்திகையில் நெற்பொறி பிரசாதம் படைக்க கவலைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

சத்துமா: ஏழு வித தானியங்களைப் பொடித்து உருவாகும் சத்துமா எனப்படும் இந்த பிரசாதம், மனத்தை இந்திரியங்களால் இழுக்கும் சப்தாதி விஷயங்களை, மனோ தைரியத்தால் பொடிப்பொடியாக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

கரும்புச்சாறு: உடலை வருத்தி பக்தி செய்து இனிமையான இறை நேரத்தை பெறுவதை கரும்புச்சாறு உணர்த்துகிறது. அம்பிகைக்கு மிகவும் உகந்தது கரும்புச்சாறு.

தேங்காய்: நம்மைச் சூழ்ந்துள்ள அகங்காரம் என்னும் ஆணவ ஓட்டினை சிதறச் செய்தால் வெண்மையான பரம்பொருள் முக்தியைக் காணலாம் என்பதை தேங்காய் உணர்த்துகிறது.

வாழைப்பழம்: மனது பக்குவம் அடைவதைக் குறிப்பதுதான் வாழைப்பழம். எளிமையான இந்த வாழைப்பழத்தை இறைவனுக்கு அர்ப்பணித்தாலே போதும் அனைத்துப் பிரசாதங்களையும் அர்ப்பணித்த பலன் கிடைக்கும்.

சர்க்கரைப் பொங்கல்: அரிசியும் வெல்லமும் இணைந்து உருவாகும் சர்க்கரைப் பொங்கல் போல, நமது கஷ்டங்கள் அனைத்தையும் விலக்கி, அருளைப் பெற்றுத் தருவது சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியதின் சாராம்சம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com