ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று காலங்கழிப்பதல்ல வாழ்க்கை. நமது ஆத்மாவும், வாழ்க்கையும் நன்றாக இருப்பதற்கு புண்ணியங்களைத் தேடிக் கொள்ள வேண்டும்.
மார்கழி மாதம் விசேடமான மாதமாகும். தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாகும். இந்த மாதத்தில் வரும் 'வைகுண்ட ஏகாதசி' விரதம் சிறப்பானதாகும். வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஆனால் மார்கழியில் வரும் ஏகாதசிக்கு 'மோட்ச ஏகாதசி' என்றழைக்கப்படுகிறது.
இது ஆண்டுதோறும் மார்கழி மாதம் வளர்பிறை பதினோராம் நாளில் வருகிறது. இந்த நாளில் எவர் ஒருவர் விரதமிருந்து பெருமாளை வணங்குகிறார்களோ அவர்களின் பாவங்கள் தொலைவதோடு மட்டுமல்லாமல் மோட்சமும் கிடைக்கும். விரதங்கள் என்பது மனிதர்களைப் பக்குவப் படுத்துவதாகும். பக்குவப்பட்ட மனிதர்கள் பாவங்களைச் செய்யமாட்டார்கள். உடல் உபாதை உள்ளவர்கள், மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுபவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்து விரதம் இருக்கலாம்.
மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள், கோவிலுக்குப் போகாமல், பூஜையறைக்குள் செல்லாமலும் விரதம் இருக்கலாம். பெருமாளின் நினைத்து ஸ்லோகங்கள் சொல்வதும் தவறில்லை.
வரும் ஆண்டு 2023ல் வைகுண்ட ஏகாதசி விரதம், ஜனவரி மாதம் 2ந்தேதி வருகிறது. அதாவது தசமி, ஏகாதசி, துவாதசி என்ற திதிகளில் சேர்ந்து ஏகாதசி விரதம் இருக்கவேண்டும்... முதல் நாள் ஜனவரி 1ந்தேதி, தசமி அன்று, பகல் உணவை முடித்து உண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்., இரவு எளிமையான உணவை உண்ணவேண்டும். மறுநாள் 2 ந்தேதி அதிகாலையில் பெருமாள் கோவிலில் நடைபெறும் 'சொர்க்க வாசல்' திறப்பு பரமபத நிகழ்ச்சிக்குச் சென்று, எம்பெருமானை மனதார வணங்க வேண்டும்.
பின்பு அன்று பகல் முழுதும் உபவாசம் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். தண்ணீரில் துளசி இருப்பது சிறப்பு. சிறுவயது உள்ளவர்களுக்கு, பால், பழச்சாறு போனறவைகளை கொடுக்கலாம். முடியாதவர்கள் அவல், பொரி, கடலை போன்றவற்றையும் சாப்பிடலாம். பகலில் அமைதியாக இருந்து பெருமாளைத் தியானிக்க வேண்டும். உறங்குதல் கூடாது. மாலை ஆலயங்களுக்கு சென்று விஷ்ணுவைத் தரிசிக்கலாம்.
அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். விஷ்ணு ஸகஸ்ரநாமம், விஷ்ணு நாமாவளி, நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவைகளை பாராயணம் செய்ய வேண்டும். இல்லையெனில் 'ஒம் நமோ நாராயணாய', என்ற மந்திரத்தை முடிந்த வரை உச்சரிக்கலாம்.
உறங்காமலிருப்பதற்கு, இரண்டு காட்சித் திரைப்படம் பார்ப்பதும், விளையாட்டுக்களில் லயிப்பதும், தொலைக்காடசி, கைப்பேசிகளில் மூழ்கியிருப்பதும் விரதமாகாது.
மறுநாள் 3 ந்தேதி துவாதசி அதிகாலையிலேயே 21 காய்கள் போட்டு சமையல் செய்து, பெருமாளுக்குத் 'தளிகை'ப் போட்டு, பெருமாளைக் கும்பிட்டு விட்டு உணவருந்த வேண்டும். இதுவே 'பாரணி' என்று அழைக்கப் படுகிறது.உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் போன்றவை இருக்க வேண்டும். பகலில் வழக்கம் போல சாப்பிடலாம். உறங்கக்கூடாது. மாலையில் விளக்கேற்றிப் பரந்தாமனை வணங்கியபின் உறங்கச் செல்லலாம்
ஓம் நமோ நாராயணாய..!