கடன் தொல்லையிலிருந்து நம்மைக் காக்கும் தோரண கணபதி தெரியுமா?

தோரண கணபதி
தோரண கணபதி

-கமலா முரளி

ரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடி விநாயகர் கிரக தோஷங்கள் நீக்குவார். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித்தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரோ  நாள்பட்ட நோய்களைத் தீர்த்தருளுவார். நர்த்தன விநாயகரின் பாதத்தில் நம் தலையை வைத்துச் சரண் அடைந்து துதித்தால், தலையெழுத்து சீராகும் என்ற நம்பிக்கையும் உண்டு.


தோரண கணபதியைத் துதித்தால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!

முடிந்தவரை கடன் இல்லாமல் வாழ்வதுதான் புத்திசாலித்தனம் !

இன்றோ, ’கடன்’ வாங்குவது என்பதுதான் மூலாதார யுக்தியாக இருக்கிறது.

நம் முன்னோர்களும் சில சந்தர்ப்பங்களில் கடன் வாங்கித்தான் காலம் தள்ளியிருப்பார்கள். ‘கடன் வாங்கிக் கல்யாணம்’ எனக் கேள்விப்பட்டு இருப்போம். சில அவசிய நிகழ்வுகளுக்கும், அவசர சூழ்நிலைகளுக்கும் கடன் வாங்குவது என்ற நிலை மாறி, தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவித்து, தங்கள் சமூகக் குறியீட்டை உயர்த்திக் காண்பித்துக்கொள்ளும் மனோபாவத்தில் இன்று மக்கள் உள்ளனர்.

கிரெடிட் கார்டு, லோன் ஆப், எந்த பொருளையும் இ.எம்.ஐ திட்டத்தில் வாங்க, கடன் கொடுப்பவர்களை லிங்கில் வைத்திருக்கும் வணிக யுத்திகள் என… எங்கும் எதிலும்… கடன், கடன், கடன்!

காற்று மாசு போல நம்மைச் சுற்றி இருக்கும் கடன் தொல்லையில் இருந்தும் நாம் எளிதாக வெளிவர முடியுமா?

நிச்சயமாக முடியும் ! தோரண கணபதி துணையுடன்!

யார் இந்த தோரண கணபதி?

சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, பலி பீடத்துக்கு அருகில் அம்பிகைக்கு வலப்பாகத்தின் மேகலையில்  சன்னிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், தோரண கணபதி.

மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

கடன் வாங்கியோருக்கு மட்டுமல்ல, கடன் கொடுத்தோரும் தம் பணத்தைத் திரும்பப் பெற, தோரண கணபதியைத் துதித்து வழிபட்டால், கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.

பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வாரணாசி ஆகிய இடங்களிலும், சிருங்கேரி சாரதா பீடத்துடன் கூடிய சாரதாம்பாள் சந்நதியிலும் தோரண கணேசர் அமர்ந்துள்ளார். சென்னையில் குன்றத்தூர் அருள்மிகு முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இந்தத் திருக்கோயிலில், கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் தோரணகணபதி.

செவ்வாய் கிழமை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் சதுர்த்தி நாட்களில் கோயில்களில் அருள்பாலிக்கும் தோரண கணபதியைத் தரிசிக்கலாம். வீட்டில் விளக்கேற்றி வைத்து, பூஜை செய்து, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் கலந்து வைத்து நைவேத்தியம் செய்து, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டால், உடனடி பலன் கிடைக்கும். நைவேத்தியம் செய்த அரிசியை எறும்புகளுக்கோ, மாட்டுக்கோ உணவாகக் கொடுக்க வேண்டும்.

ஆறு வாரங்கள், தொடர்ந்து வழிபட்டு, தோரண கணபதி ப்ரசன்ன துதியைச் சொல்பவரின் கடன் சுமை அத்தனையும் பனிபோல விலகும்.

தோரண கணபதி ப்ரசன்ன துதி:

`பிரசன்னம்' என்றால் `வெளிப்படுதல்' என்று பொருள். இந்தப் பாடலைப் பாடி வழிபட்டால், பிள்ளையார் பெருமானின் சாந்நித்தியம் வெளிப்பட்டு, அவரின் அனுக்கிரகத்தால் நமது பிரச்னைகள் தீர்த்துவைக்கப்படும் என்பது நம்பிக்கை.

தோரண கணபதி
தோரண கணபதி

1. கடன் தொல்லைகள் நீங்கும்

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்

முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்

காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!

தோரண கணபதியே ! தோன்றிடுக என் முன்னே      (தோரண)

2. துயரங்கள் விலகும்

திருமகள் அருளிருந்தும்  திரவியங்கள் சேராமல்

திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளியின்றி நிற்கின்றோம்

கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே

உடன் வந்தே உபாயங்கள்  காட்டிடுவாய் கரிமுகவாய்!    (தோரண)

3. வீண் விரயங்கள், வீண் பழிச்சொற்கள் விலகும்!

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்

கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே

கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்

விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக      (தோரண)

4. நலன்கள் யாவும் கைகூடும்

மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்

காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்

சேரும் இரவி காலத்திலும்  மலர்தூவிப் படைத்திட்டோம்

தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!   (தோரண)

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
தோரண கணபதி

5. அச்சம் நீங்கும் அல்லல்கள் அகலும்

பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா

தோரண வாயில் அமர்ந்து  துவள்வோரைக் காப்பவரே

சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே

எத்திக்கும் கடன்பட்டோர்  எதிர்வந்து நிற்கையிலே!       (தோரண)

6. ஆனந்தம் பெருகும்

சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்

இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!

குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்

கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்    (தோரண)

இத்துதிப்பாடலை தினமும் மும்முறை சொல்லி வர அனைத்துப் பிரச்னைகளும் தீரும் என்பது உறுதி !

‘ருணம்” அதாவது கடன் என்பது பொருளாதார கொடுக்கல் -வாங்கல் மட்டுமல்ல. தேவ கடன், பித்ரு கடன், இப்பிறவியில் நாம் பிறரிடமிருந்து பெற்ற உதவிக்குக் கைம்மாறு செய்யாத மானுடக் கடன் இவற்றையும் குறிக்கும்.

கணபதி வழிபாடு நமது எல்லாக் கடன்களையும் தீர்த்து, நிம்மதியான வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமேது !

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com