எண்ணியதை எல்லாம் நிறைவேற்றி அருளும் புதுச்சேரி ஸ்ரீகாளத்தீஸ்வரர்!

Sri Kalatheeswarar temple, pondycherry...
Sri Kalatheeswarar temple
Published on

ன்னை நாடிவந்தோருக்கு எண்ணியதை எல்லாம் நிறைவேற்றி அருள்பாலித்து வரும் இத்திருத்தலத்தில் உறையும் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானின் திருவருளால் ஈர்க்கப்பட்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே இந்த இறைவியையும், ஈசனையும் தங்களது இதயத்துள் வைத்து “திருமூலர்” கூறியவாறு (இதயக்கோயில்) பூஜித்து வந்தனர். இவ்வாறு பூஜிக்கப் பெற்று வந்த தெய்வங்களுக்கு திருக்கோயில் கட்டிட எண்ணம் கொண்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசியர்கள் மனம் உருகி இறைவன் திருவருளை வேண்டிட இறைவனும் அவர்களின் மேலான அன்புக்கு கட்டுப்பட்டவனாக திருவருள் வழங்கினார்.

இறையருள் கிடைக்கப் பெற்ற அவர்கள் நகரின் நடுவில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் பெருங்கோவில் எழுப்பி அதில் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானுடன் பரிவார மூர்த்திகளையும் அமைத்தனர். அதுமட்டுமின்றி சிவபெருமானின் இடதுபுறம் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும் விக்கிரகத்தினை அமைத்து பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தனர்.

பன்னெடுங்காலத்திற்கு முன்னரே சைவமும் வைணவமும் ஒன்று என்பதற்கு இலக்கணமாக புதுவை வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் சான்றாக இருந்துள்ளார்கள். இன்றளவும் இருந்து வருகிறார்கள். இவ்வாறு போற்றப்படும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி -பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் காலப்போக்கில் எல்லோராலும் அன்புடனும் பெருமிதத்துடனும் “செட்டிக்கோவில்” என்றே அழைக்கப்படுகின்றது.

ராஜகோபுரத்தின் சிறப்பு

கோவிலின் கிழக்கு புறத்தில் ராஜகோபுரம் 5 சிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இதில் என்ன விசேஷம் என்றால் ராஜகோபுரத்தின் முன்புறம் சிவன் அவதாரங்களும், பின்புறம் பெருமாள் அவதாரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சிவன்-பெருமாள் கோவில் இங்கு ஒன்றாக அமைந்து இருப்பதை பறைசாற்றுவதாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
தென்னிந்தியாவின் மதுரா என அழைக்கப்படும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்!
Sri Kalatheeswarar temple, pondycherry...

கன்னி மூலையில் கற்பக விநாயகர்

ராஜகோபுரத்தின் உள் நுழைந்து, அகன்ற சுற்று பகுதியில் (பிரகாரம்) கோவிலை முதல்சுற்று வலம் வந்தால், கன்னி மூலையில் கற்பக விநாயகர் சன்னதியை காணலாம்.

விநாயகர் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம் அஷ்டப்பிரதான் என்று சொல்லுமாறு 8 தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் திருஉருவத்துக்கு எதிரில் மூஞ்சுறு என்று சொல்லக்கூடிய விநாயகப் பெருமானின் வாகனம் மிகவும் சிறியதாக உள்ளது. இதை நோக்கும்போது, “பருத்த விநாயகனுக்கு சிறுத்த மூஞ்சுறு” என்ற தொடர் உண்மையாகவே இங்கு தோற்றம் அளிக்கின்றது. “எளிய பக்தி வலிமையை தாங்கும்” என்பது சொல்லாமல் புலப்படுகின்றது. எந்த காரியத்தை தொடங்கும் போதும், கோவிலை வலம்வரும் போதும், முதலில் விநாயகப் பெருமானை வணங்கியே தொடங்க வேண்டும் என்பது முன்னோர் வகுத்த மரபு ஆகும்.

ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் (செட்டிக் கோவில்) புதுவை பஸ் நிலையத்தில் இருந்து 1 1/2 கிலோ மீட்டர் தூரத்திலும், ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும், விமான நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், முத்தியால்பேட்டை ஆகிய பகுதி களுக்கு செல்லும் டவுன் பஸ்சில் ஏறி செஞ்சி சாலை கார்னர் அம்பலத்தடையார் மடம் வீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com