புராணக்கதை - அனந்த விரதம்!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்
Published on

சிஷ்டர் பரம்பரையில்  வந்தவர் ”மந்தர். அவரது மகள் சீலா. அவளைக் கௌண்டின்ய மகரிஷிக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். புகுந்த வீட்டுக்குச் செல்லும் வழியில், ஒரு நதிக்கரையில் ஏராளமான பெண்கள் பூஜை செய்து, வலது கையில் சரடு கட்டிக் கொள்வதைப் பார்த்தாள் சீலா. அதுபற்றி விசாரித்தாள்.

“இது அனந்த விரதம். இந்த விரதத்தைக் கடை பிடித்து, அனந்த பத்மநாப ஸ்வாமியை தியானித்தால் நாகதோஷம், ராகு - கேது தோஷம் நீங்கும்” என்றார்கள். சீலா பக்தியுடன் அனந்த விரதத்தைக் கடைபிடித்தாள். இதனால் அரசாங்கப் பண்டிதர் பதவி கௌண்டின்யரைத் தேடி வந்தது. பூ தானமும் கோ தானமும் நிறையக் கிடைத்தது. வயலில் முப்போகம் விளைந்தது.

ஒரு நாள் கௌண்டின்யர் உணவருந்துகையில் சீலா கையிலிருந்த கயிற்றைப் பார்த்து, “இதென்ன அழுக்குக் கயிறு?” என்று கேட்டார். சீலா அனந்த விரத மகிமையைக் கூறி, “அந்த அனந்தனாலேயே இத்தனை பாக்கியங்களும் கிடைத்தன” என்றாள்.

“ஓ, என் பாண்டித்தியத்தால் எதுவும் கிடைக்கவில்லை என்கிறாய்!” என்று கூறி, அக்கயிறை அறுத்து அக்னி ஹோத்திரச் சட்டியில் வீசினார். அன்றிரவு திருடர்கள், கொட்டிலில் இருந்த மாடுகளைக் களவாடிச் சென்றனர். அறுவடைக்குத் தயாராயிருந்த பயிருக்கு பொறாமைக் காரர்கள் தீ வைத்தனர். உறவினரோடு மனஸ்தாபம் ஏற்பட்டது. கௌண்டின்யர் செய்த ஹோமத்தில் பண்டிதர்கள் குற்றம் கண்டுபிடித்ததால் அரசாங்க பதவி பறி போனது.

“சீலா! உன் நகைகளை விற்று மீண்டும் பயிரிடலாம்” என்றார் மகரிஷி. சீலா, “இதுவரை தொலைத்தது போதும். தாங்கள் அரண்மனை நாட்டிய நங்கையரிடம் மையல் கொண்டிருப்பதை நான் அறிவேன்” என்று கூறி, தனது பிறந்த வீட்டுக்குப் போய்விட்டாள்.

கடல் கடந்து யாகங்கள் நடத்த கௌண்டின்யரை அழைத்துப் போனார்கள். நடுவிலே புயல் வீசி கப்பல் உடைந்தது. கட்டையைப் பிடித்து ஒரு தீவில் கரையேறினார் மகரிஷி. அத்தீவின் குகையில் ஒரு அரக்கன், காசி இளவரசி ரத்னாவளியைத் தூக்கி வந்து வைத்திருந்தான். இதையறிந்த அரக்கனின் மனைவி, “நான் இருக்க இன் னொரு பெண்ணா?” என்று சண்டையிட்டாள். “உணவு வேண்டாமா? இளசாயிருந்தால் மாமிசம் ருசியாயிருக்குமே” என சமாளித்தான் ராட்சதன்.

ரத்னாவளி அரக்கியிடம், தன் நிலையைக் கூறி அழுதாள். அவள் தப்பிப் போக உதவினாள் அரக்கி. அப்போது கௌண்டின்யர் கரையோரம் களைப்பாய் உறங்குவதை இருவரும் பார்த்தனர். அரக்கன், “நான் சிரமப்பட்டுக் கொண்டு வந்த உணவை நீ தப்ப விட முனைகிறாய்!” என்று ஆத்திரப்பட்டான்.

இதையும் படியுங்கள்:
வெப்பம் நம்மை மட்டுமா சுடும்? ஐந்தறிவு ஜீவன்கள் என்ன செய்யும்?
ஓவியம்; சேகர்

“ஒரு வேதியர் கடற்கரையில் கிடக்கிறார். தூக்கி வருகிறேன்” என்று சமாதானம் செய்தாள் அரக்கி. கௌண்டின்யர், ‘நோன்புக் கயிறை அறுத்தது எத்தனை பெரிய தவறு’ என்பதை உணர்ந்து வருந்தினார். அரக்கி, “நீ வாலிபனாய், அழகனாய் இருக்கிறாய். என்னைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல், இந்திரனிடமிருந்து பெற்ற சக்தியாயுதத்தைத் தருகிறேன். இதை எறிந்தால் ராட்சதன் மாண்டு விடுவான். என் கோரிக்கையை மறுத்தால் எங்களுக்குப் பட்சணமாக வேண்டியதுதான்” என அச்சுறுத்தினாள்.

இதைக் கேட்ட அரக்கன், கௌண்டின்யரைக் கொல்லப் பாய்ந்தான். சக்தியாயுதத்தை வீசினார் மகரிஷி. அரக்கன் மடிந்தான். அரக்கி பெண் யானையாக வடிவெடுத்து காசி நகரத்துக்கு ரத்னாவளியையும், முனிவரையும் அழைத்துச் சென்றாள். ரத்னாவளியை கௌண்டின்யருக்கு மணமுடித்துக் கொடுத்தான் காசிராஜன். இதற்கெல் லாம் காரணம், சீலா பிறந்த வீட்டில் அனந்த விரதம் அனுஷ்டித்ததே என்று உணர்ந்த கௌண்டின்யர், இரு மனைவியரிடமும் சமமாக அன்பு செலுத்தி, சுகமாக வாழ்ந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com