புராண கதை: தூய மனமே இறைவன் உறையும் கோயில்!

Purana Kathai: A pure mind is the temple where the Lord resides
Purana Kathai: A pure mind is the temple where the Lord resideshttps://naadopaasana.wordpress.com

கவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது அளவற்ற பக்தியும் மதிப்பும் கொண்டவர் விதுரர். ஒரு சமயம் அவர் வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே போயிருந்தார். அப்பொழுது பகவான் கிருஷ்ணர் விதுரர் வீட்டில் இல்லை என்பது தெரியாமல் அவரது வீட்டுக்கு வருகை தந்தார்.

பகவானை கண்ட விதுரரின் மனைவி அவரை மிகவும் அன்புடன் வரவேற்று உபசரித்தாள். அவளது மனதில் மிகவும் சந்தோஷம் பொங்கியது. தன்னை மறந்து பம்பரமாக சுழன்று பகவானுக்கு பலவிதமான பணிவிடைகளைச் செய்தாள். அவள் தன்னை மறந்து பகவானின் சேவையில் ஈடுபட்டிருந்தாள். அந்த நிலைமையில் வாழைப் பழங்களை பகவானுக்கு அளிக்க நினைத்து, அவற்றின் தோலை உரித்து பழங்களை தூர எறிந்து விட்டு, பழத்தின் தோலை பகவானுக்குக் கொடுத்தாள். பகவான் கிருஷ்ணரும் அன்புடன் அவள் கொடுத்த அந்தப் பழத்தோலை பரிவுடன் ஏற்று புசித்தார்.

அந்த வேளையில் வெளியே சென்ற விதுரர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அங்கே நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். “உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? பகவானுக்கு பழத்தை கொடுப்பதற்கு பதிலாக பழத்தோலை கொடுக்கிறாயே” என்று சினத்துடன் கடிந்து கொண்டார். அவர் அவ்வாறு கேட்ட பிறகுதான் அந்த அம்மையாருக்கு தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வந்தது.

அதன் பிறகு விதுரர் பகவானுக்கு நல்ல கனிந்த பழங்களைக் கொடுத்து உபசரிக்க நினைத்தார். அப்போது, “விதுரா, உனது மனைவி கொடுத்த பழத்தோல்கள், பழத்தை விட எனக்கு மிகவும் ருசியாக இருந்தது. எனக்கு பழம் தேவையில்லை” என்று பகவான் சொன்னார்.

பகவானுக்கு நாம் எதைக் கொடுக்கிறோம் என்பதைக் காட்டிலும், எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதைத்தான் பகவான் நோக்குகிறார். ஆணவத்துடன், அகங்காரத்துடன், சுயநலத்துடன், பெயர், புகழுக்காகக் கொடுக்கும் மதிப்பில் அடங்காத பணம், பொருள், செல்வத்தைக் காட்டிலும், சுயநலம் சிறிதுமின்றி அகங்காரம், ஆணவம் எதுவும் இன்றி தூய மனதுடன், உண்மையான பக்தியுடன் நாம் பகவானுக்கு அளிக்கும் ஒரு பூ, இலை, ஜலம் போன்ற எந்தப் பொருளையும் பகவான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறார். தூய மனமே இறைவன் உறையும் கோயிலாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com