புராண கதை: சீதா தேவி அனுமனுக்குக் கூறிய கரடி கதை தெரியுமா?

Purana Kathai: Do you know the story of the bear that Sita devi told Hanuman?
Purana Kathai: Do you know the story of the bear that Sita devi told Hanuman?https://saleroivs.live

சீதை அசோக வனத்தில் இருந்தபோது அரக்கிகள் அவருக்கு பலவித துன்பம் கொடுத்தார்கள். ராவண வதம் முடிந்தது. சீதையை துன்புறுத்திய அரக்கிகளுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தான் அனுமன். அதற்கு அவன் சீதையிடம் அனுமதி கேட்டான். அப்போதுதான் சீதா தேவி அனுமனுக்கு இந்த கரடி கதையைக் கூறினாள்.

வேடன் ஒருவன் வேட்டைக்காக காட்டிற்கு சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக புலி ஒன்று வேடனை துரத்தியது. வேடன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக்கொண்டான். வேடன் ஏறிய மரத்தின் மேல் கிளையில் கரடி ஒன்று உட்கார்ந்திருந்தது.

கரடியை பார்த்த வேடன் அதனிடம், “புலி ஒன்று என்னை துரத்தி வருகிறது. இந்த ஆபத்திலிருந்து என்னை நீதான் காப்பாற்ற வேண்டும். நான் உன்னிடம் சரண் அடைகிறேன்” என்று கூறினான். தன்னிடம் சரணடைந்த வேடனிடம் கரடி, “பயப்படாதே! உன்னை நான் காப்பாற்றுகிறேன்!” என்று வாக்குறுதி அளித்தது. இதற்குள் வேடனை துரத்தி வந்த புலி அந்த மரத்தின் கீழ் வந்து நின்றது.

சிறிது நேரம் ஆயிற்று. வேடனுக்கு தூக்கம் வந்தது. வேடன் கரடியின் மடியில் தலை வைத்து தன்னை மறந்து தூங்கினான். அப்போது மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த புலி, கரடியிடம் “நண்பனே, நாம் இருவரும் மிருகங்கள். ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். நம் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால், இவன் மனிதன். அதிலும் வேடன். நம் இருவருக்கும் ஜன்ம பகைவன். இவன் நம்மை கொல்வதைத்தான் தொழிலாகக் கொண்டிருக்கிறான். இவன் நமது இனத்தைச் சேர்ந்தவனும் அல்ல. இன்றைய தினம் நீ இவனைக் காப்பாற்றினாலும் அதை மறந்து நாளைய தினமே இவன் உன்னை கொல்வதற்கு முயற்சி செய்வான். எனவே, நீ இந்த வேடனை என்னிடம் பிடித்துத் தள்ளிவிடு. அதனால் நமக்கு பெரிய ஒரு ஆபத்து நீங்கும்” என்று கேட்டது.

அதற்கு கரடி, “இது என்ன அநியாயம்? நான் இருக்கும் இடத்தைத் தேடி வந்து இந்த வேடன் என்னிடம் சரண் அடைந்திருக்கிறான். இவனை நான் கைவிடக்கூடாது. கைவிடவும் மாட்டேன். அப்படி நான் இவனை கைவிட்டால் எனக்கு இந்த உலகத்தில் நண்பனுக்கு துரோகம் செய்தவன் என்ற கெட்ட பெயர் ஏற்படும். அதோடு மறு உலகத்தில் கடுமையான நரகமும் கிடைக்கும். எனவே, நீ சொல்வது போல் செய்யமாட்டேன்” என்றது.

சற்று நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த வேடன் உறக்கம் கலைந்து எழுந்தான். இப்போது கரடிக்கு தூக்கம் வந்தது. அது வேடன் மடியில் தலையை வைத்து தூங்க ஆரம்பித்தது. அப்போது மரத்தின் கீழே இருந்த புலி வேடனிடம், “முட்டாளே, என்னிடமிருந்து தப்ப வேண்டும் என்று நீ போயும் போயும் ஒரு கரடியிடம் சரணடைந்திருக்கிறாயே. கரடி என்ன உன் மனித இனத்தைச் சேர்ந்தா? அது உன்னுடைய நண்பனா? கரடி உன்னுடைய பகைவன் என்பதை நீ சரியாகப் புரிந்து கொள். நான் எப்போது இந்த மரத்தை விட்டுப் போவேன் என்று கரடி காத்துக் கொண்டிருக்கிறது. நான் இங்கிருந்து சென்றதும் கரடி உன்னை கொன்று விடும். கரடியின் தூக்கம் கலைவதற்கு முன்பு அதைப் பிடித்து என்னிடம் தள்ளி விடு. நான் உனக்கு பதிலாக கரடியை தின்றுவிட்டு இங்கிருந்து சென்று விடுகிறேன். அதனால் நம் இருவருக்கும் நன்மை ஏற்படும்” என்று கூறியது.

புலியின் வார்த்தையில் வேடன் மயங்கினான். அவனுக்கு கரடியிடமிருந்த நம்பிக்கை போய்விட்டது. எனவே, அவன் கரடியை மரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டான். கீழே விழும்போது கரடிக்கு தூக்கம் கலைந்தது. ஆனால், அது தனது தனி இயல்பு காரணமாக மீண்டும் ஒரு கிளையை பிடித்துக்கொண்டு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டது.

இதைப் பார்த்த வேடனுக்கு, ‘கரடிக்கு நான் செய்த துரோகம் தெரிந்து விட்டது. அதனால் அது இப்போது என்னை கொன்று விடப்போகிறது’ என்று நினைத்து பயந்து நடுங்கினான். வேடன் பயப்படுவதை கரடி புரிந்து கொண்டது. உடனே அது வேடனிடம், “நண்பனே பயப்படாதே. நீ எனக்கு துரோகம் செய்தாய் என்று நான் நினைக்க மாட்டேன். நான் உன்னை காப்பாற்றுவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அதை நிச்சயம் காப்பாற்றுவேன். நான் வாக்கு தவற மாட்டேன்” என்று கூறியது.

இதையும் படியுங்கள்:
மரவள்ளிக் கிழங்கில் மறைந்திருக்கும் மகத்துவம் தெரியுமா?
Purana Kathai: Do you know the story of the bear that Sita devi told Hanuman?

அப்போது புலி, கரடியிடம் “நண்பனே, நான் கூறியது போலவே நடந்ததை நீயே பார்த்தாய் அல்லவா? இந்த வேடன் நன்றி இல்லாதவன். நண்பனுக்கு துரோகம் செய்யும் இவன் மீது இனியும் நீ இரக்கம் காட்டாமல், என்னிடம் தள்ளி விடு” என்றது. அதற்குக் கரடி, “தீய இயல்பு உடையவர்கள் மற்றவர்களுக்கு தீமை செய்தாலும் அறிவுள்ள ஒருவன் தீமை செய்தவர்களை பகைத்துக் கொள்வானா? நான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதுதான் எனக்குப் பெரிதே தவிர, எனது உயிர் எனக்குப் பெரிதல்ல. உலகில் பிறவி எடுத்தவர்களுக்கு அணிகலனாக இருப்பது சத்தியம் மட்டுமே” என்று பதில் கூறியது. மேலும், சொன்னபடியே கரடி, வேடனை காப்பாற்றியது.

இந்தக் கதையை சீதா தேவி, அனுமனுக்குக் கூறிவிட்டு, “ஆஞ்சனேயா நான் என்ன மிருகத்தை விட தாழ்ந்தவளா? நமக்கு நன்மை செய்தவரிடம் நாம் எப்படி அன்பு பாராட்டி அவர்களுக்கு உதவி செய்கிறோமோ, அதைப்போலவே நமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நாம் உதவி செய்ய வேண்டும். நமக்கு உதவி செய்தவர்களுக்கு நாம் உதவி செய்வதில் ஆச்சரியம் இல்லை. நமக்கு தீமை செய்தவர்களுக்கு உதவி செய்வதுதான் சிறப்புக்கு உரியது” என்று கூறி அரக்கியர்களை மன்னிக்கும்படி கூறினாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com