12 மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது புரட்டாசி சனி விரதம், செப்டம்பர் 21ஆம் தேதி. அடுத்தடுத்து வருகின்ற சனிக்கிழமைகளில் நம்பர் 28 மற்றும் அக்டோபர் 5, அக்டோபர் 12 ஆகிய சனிக்கிழமைகளில் விரதம் இருந்து திருமாலின் அருளைப் பெறலாம். சனி தோஷம் நீக்கம் பெறலாம். திருமலை வேங்கடவனுக்கு புரட்டாசியில் தான், பிரமோற்சவம் நடத்தப்படுகிறது.
வெங்கடேஸ்வர புராணத்தில் உள்ள சனி வார கதை சொல்வது என்ன?
மகா விஷ்ணுவை விரதமிருந்து வழிபடும் முறை பற்றி நாரதர், பிரம்மாவிடம் கேட்டார். அதற்கு பிரம்மா, 'வெங்கடாசலத்தில் விஷ்ணு வெங்கடேஸ்வரராக இருக்கிறார். கலியினால் பீடிக்கப்பட்டவர்கள் அவர் அருளால் மேன்மை அடைவார். ஏழையும் செல்வந்தன் ஆவான். எல்லா தேவதைகளும் அவரையே வணங்குகின்றன. எல்லா தேவர்களின் சக்தியும் திரண்ட வடிவம் அது. அவரை வணங்கினால் உத்தம கதி அடைவர். இந்த மலை விந்தியத்தின் சிகரமாக இருந்தது. அகத்தியர் வரும்போது அவரை வணங்கியது. இன்றும் இந்த மலையில் பல தேவர்கள் வசிக்கின்றனர். கலியை நீக்கவும், பக்தர்களை காக்கவும் இங்கு அருள் பாலிக்கிறார் சுவாமி. புஷ்கரணி தீரத்தில் வெங்கடேஸ்வரர் அருள் செய்கிறார். மற்ற சேத்திரங்களில் எல்லாம் கலிகாலத்தில் தெய்வக் கலைக்குறையும். ஆனால் திருத்தணி திருவேங்கடத்தில் மட்டும் கலிகாலத்திலும் தோஷம் ஏற்படாது. தெய்வ கலையும் குறையாது.
சுப்பிரமணிய சேத்திரத்தில் குமாரன் என்றும் வேங்கடத்தில் விஷ்ணு என்றும் ஒரே சைதன்யம் தான் விளங்குகிறது. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை நாட்களில் இவர் இன்னும் அதிக அருளை வழங்குவார். சனிக்கிழமை ஒரு பொழுது மட்டும் உண்டு, எவர் ஒருவர் விரதம் இருந்து வெங்கடேசனை அர்ச்சிக்கிறாரோ, அவர் எல்லாவற்றையும் அடைவார் என்பதில் ஐயமில்லை. எல்லா தேவர்களையும் வணங்கி பெறும் பலனை, புரட்டாசி சனிக்கிழமை ஒன்றில் விரதம் இருந்தாலே அடைந்து விடுவர். இது சத்தியம்." என்று கூறினார்.
புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவை தவிர்க்க வேண்டும். தினமும் காலை, மாலை பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். மாலை நேரங்களில் பகவத் கீதை, திவ்ய பிரபந்தம் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும். புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமை நாளில் வீட்டில் தளிகை போட வேண்டும். முதல் சனிக்கிழமை உத்தமம். காலையில் குளித்து, தூய ஆடை அணிந்து, நெற்றியில் திருமண் அணிந்து கொண்டு, 'ஓம் நமோ நாராயணாய' என்றோ 'கோவிந்தா' 'கோவிந்தா' என்றோ உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
ஒரு பித்தளை அல்லது செம்பு சொம்பு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அந்த சொம்பில் நாமம் இட்டு, துளசி மாலையை சுற்றிக் கொள்ள வேண்டும். இந்த சொம்பை தான் வீடு வீடாக எடுத்துச் செல்ல வேண்டும். 'கோவிந்தா கோவிந்தா' என்று கோஷமிட வேண்டும். அரிசி யாசகம் கேட்க வேண்டும். இதன் மூலம் கொண்டுவரும் அரிசி மற்றும் பொருட்களை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியங்களுக்கு இந்த அரிசியை சேர்த்த பயன்படுத்த வேண்டும். நைவேத்தியமாக வாழை இலையில் புளிசாதம்_ தயிர் சாதம்_ சர்க்கரை பொங்கல், வடை_ சுண்டல், பாயசம் என நைவேத்தியம் படைத்து பெருமாளுக்கு வடை மாலை சாற்ற வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் கட்டாயம் இருக்க வேண்டும். வழக்கம்போல் தேங்காய் உடைத்து சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டும்.