கிருஷ்ண தேவராயர் கேள்வியும் தெனாலிராமன் பதிலும்!

கிருஷ்ண தேவராயர் கேள்வியும் தெனாலிராமன் பதிலும்!
vikas dewangan
Published on

ரு சமயம் கிருஷ்ண தேவராயர் தமது அரசவையில் வீற்றிருந்தவர்களை நோக்கி, கடவுள் எங்கே இருக்கிறார்? அவர் எப்படி இருக்கிறார்? அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்? என்று மூன்று கேள்விகளை கேட்டார். கிருஷ்ண தேவராயர் கேட்ட கேள்விக்கு அவையில் இருந்த யாராலேயும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது தெனாலிராமன் முன்வந்து, ‘அரசே இந்த கேள்விக்கு நான் விடையளிக்கிறேன்’ என்று கூறினான்.

அதைத் தொடர்ந்து, ஒரு மெழுகுவர்த்தியை ஏத்தி வந்து, ’அரசே இந்த மெழுகுவர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறது என்று கேட்டான்? அதற்கு அரசர், ’அது மேல் நோக்கிக் காட்டுகிறது. எந்த திசையையும் குறிப்பிட்டுக் காட்டவில்லை’ என்று சொன்னார். அதைத் தொடர்ந்து, மெழுகுவர்த்தியை திருப்பி திருப்பி மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக வைத்தான். அப்போதும் தீபம் மேல் நோக்கியே நின்றது. அதையடுத்து, ‘அரசே நாம் தீபத்தை சாட்சியாக ஏற்றுக்கொண்டு, கடவுள் நமக்கு மேலே இருக்கிறார் என்பதை அறிவோம். அவர் வேறு எந்த திசையிலும் இல்லை’ என்றான்.

டுத்து நீங்கள் கேட்ட கேள்வி, ’கடவுள் எப்படி இருக்கிறார்?’ என்பது. இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பால் வேண்டும் என்று கேட்டு வாங்கி வந்து, ’அரசே இந்தக் கிண்ணத்திலுள்ள பாலில் கொஞ்சம் தயிர் சேர்த்தால் என்னவாகும்?’ என்று கேட்டான் தெனாலிராமன். அதற்கு, ’அது தயிராகும்’ என அரசர் பதிலளித்தார். ’ஆமாம் அந்தத் தயிரைக் கடைந்தால் வெண்ணெய் ஆகும். அந்த வெண்ணெய்யை உருக்கினால் நெய் ஆகும். சரிதானே’ என்று தெனாலிராமன் கேட்க அரசர் அதை ஆமோதித்தார்.

’அப்படியானால் இந்தக் கிண்ணத்திலுள்ள பாலுக்குள் தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லாம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறீர்களா’ எனக் கேட்டதும் அரசர், ’ஆமாம் ஒப்புக்கறேன்’ என்று சொன்னார். ’சரி அரசே, இந்தப் பாலில் எந்தெந்த பாகங்களில் தயிரும், மோரும், வெண்ணெயும், நெய்யும் இருக்கிறது என்று பிரித்துக் காட்ட முடியுமா?’ என்று கேட்க, அரசர் ’அது எப்படி முடியும்? எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று அடக்கம்’ என்றார்.

அதைக் கேட்ட தெனாலிராமன், ’அரசே அதுபோல்தான் கடவுள் நம் எல்லோருக்குள்ளும் அடக்கமாக இருக்கிறார். அவர் எங்கும் நீக்கமற எல்லாமாயும் வியாபித்திருக்கிறார். அவர் இல்லாத பொருள் உலகில் எதுவும் இல்லை’ என்றான் தெனாலிராமன்.

’’சரி, இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையளித்தாய். எனது மூன்றாவது கேள்வியான, ’கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’ என்ற கேள்விக்கு என்ன பதில்?’’ என்றார்.

உடனே தெனாலிராமன், ’அரசே நான் உங்கள் இரண்டு கேள்விக்கு சரியாக விடை அளித்து விட்டதால், நான் உங்களுக்கு குருவாகிறேன். நீங்கள் சிஷ்யன் ஆகிறீர்கள். எனவே, குரு கீழேயும் சிஷ்யன் மேலேயும் இருப்பது சரியல்ல. நீங்கள் சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து கீழே நில்லுங்கள். நான் அங்கே அமர்ந்து உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்’ என்றான். உடனே, அரசர் தெனாலிராமனை அரியணையில் உட்கார வைத்து விட்டு, கீழே இறங்கி நின்றார்.

உடனே தெனாலிராமன், ’யாரங்கே… இந்த மதிகெட்ட மன்னனை சிறையில் அடைத்து சித்திரவதை செய்யுங்கள்’ என்னு கட்டளையிட்டான். அதைக் கேட்டு அரசனும் அவையோரும் திகைத்துப் போய் நிற்க, தெனாலி சிரித்துக் கொண்டே, ’அரசே பயப்பட வேண்டாம். நான் அரசனாக நடித்தேன். அவ்வளவுதான். சற்று முன்னர் தாங்கள் அமர்ந்திருந்த அரியணையில் இப்போது இறைவன் என்னை அமர வைத்து உங்களை என் ஆணைக்கு அடிபணிய வைக்கும் சாதாரண மனிதனாக மாற்றி விட்டார். இதைத்தான் இறைவன் இப்போது செய்தார். ஆண்டியை அரசனாக்கவும், அரசனை ஆண்டியாக்கவும் ஆண்டவன் ஒருவனாலேயே முடியும்’ என்றான்.

உண்மையை உணர்ந்த கிருஷ்ணதேவராயர் இறைவனுக்கும் தெனாலிராமனுக்கும் நன்றி கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com