இன்பங்களை அள்ளித் தரும் ரகுகுலநாதர்!

இன்பங்களை அள்ளித் தரும் ரகுகுலநாதர்!
Published on

குகுலநாதர் ஸ்ரீ ராமபிரான் வடதேசமான அயோத்தியாவில் பிறந்தாலும், அவருக்கு அதிக ஆலயங்கள் இருப்பது என்னவோ தென்னகத்தில்தான். ரகுகுல ஸ்ரீராமரின் பாதம் பட்ட இடமெல்லாம் அவரை என்றென்றும் போற்றும் திருக்கோயில்களை அமைத்தனர் அரச வம்சத்தினர். அப்படியான ஓர் ஸ்ரீராமர் திருத்தலம்தான் ரகுநாதசமுத்திரம். இங்கு வீற்றெழுந்து சேவை சாதிக்கும் ஸ்ரீ ராமபிரானுக்கு ஓர் முக்கியச் சிறப்பு உண்டு.

ஸ்ரீராமபிரான், ராவணனை வதைத்து, சீதையை மீட்டு, தம்பி லக்ஷ்மணரோடு இப்பகுதியில் வரும்போது சுகபிரம்ம மகரிஷியை சந்திக்கின்றார். அவரிடமிருந்து வேதங்களின் உட்பொருள் அடங்கிய ஓலைச்சுவடியைப் பெற்று, அனுமனை வாசிக்கச் சொல்கின்றார். வேதத்தின் உட்பொருளைக் கேட்டு இன்புற்ற தசரத புத்திரர் அனுமனுக்கு உபநிஷதங்களில் ஒன்றான முக்திகோபநிஷத்தை உபதேசிக்கின்றார். இந்தத் திருக்கோலத்தையே இந்த ரகுநாதசமுத்திரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

இந்தத் தலத்தில் ஸ்ரீராமபிரான் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரைப் போன்றே இந்த ஆலயத்தோடு சேர்த்து, படைவீடு மற்றும் நெடுங்குணம் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் ஸ்ரீ யோக ராமரை தரிசிக்கலாம். இந்த மூன்று ஆலயச் சிற்பமும் ஒரே மன்னனால் ஒரே நேரத்தில் வடிக்கப்பட்டது என்பதுதான் சிறப்பிலும் சிறப்பு. அந்த சிறப்புக்குரிய நாயகன் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன்தான். பல்லவர் கட்டடக்கலை பல இடங்களில் பிரதிபலிக்கின்றது. விசித்திர சித்தன் என்று போற்றப்பட்ட நரசிம்மப் பல்லவனின் கல்வெட்டுகளும் இங்கு பல இடங்களில் காணப்படுகின்றன.

நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் இப்பகுதியை ஆண்ட ரகுநாத நாயக்கன் என்கிற அரசன் இந்த ஊரில் மிகப்பெரிய ஏரி ஒன்றை ஏற்படுத்தினான். இந்த ஏரியினால் சுற்றியுள்ள பல கிராமங்களில் நீர் பஞ்சம் தீர்ந்தது. இந்த ஏரி சமுத்திரம் போல் (கடல் போல்) காட்சியளித்தது. இதனால் இவ்வூருக்கு ரகுநாதசமுத்திரம் என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர் இவ்வூர் மக்கள். அதோடு, இங்கு போர்படை வீரர்கள் பலரும் தங்கி இருந்து உள்ளனர். ரகுகுலநாத ஸ்ரீ ராமரின் திருக்கோயில் இங்கு இருந்ததாலும் இவ்வூருக்கு ரகுநாதசமுத்திரம் என்கிற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். காஞ்சிபுரம் நிகமாந்த தேசிகர் இத்தலத்தினில் ஒரு மண்டலம் தங்கி ஸ்ரீ ராமரை சேவித்து, பக்தர்களுக்குப் பல அருள் விஷயங்களைக் கூறி ஆசி வழங்கியுள்ளார்.

ஊரின் தென்மேற்கு பகுதியில் ஆலயம் அழகுடன் அமைந்துள்ளது. கிழக்குப்புற நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால், மேற்கு நோக்கியபடி ஸ்ரீ கருடாழ்வார் தரிசனம் தருகின்றார். முதலில் நீண்டதொரு முகமண்டபம். அதன் வடபாகத்தில் பழைமையான ஆஞ்சனேயர் அருள்பாலிக்கின்றார். அதைத் தொடர்ந்து மகா மண்டபத்தின் வடபுறம் ஆழ்வார்களின் தரிசனம். இங்கேயும் ஓர் அனுமன் சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கருவறையுள் பேரழகுடன் நடுநாயகமாய் ஸ்ரீ ராமச்சந்திரப்பிரபு யோகாசனமிட்டு அமர்ந்தவண்ணம் தனது வலது கரத்தை சின்முத்திரையாகக் கொண்டு ஆத்ம ஸ்தானத்தில் வைத்தபடி கருணைரசம் பொழியும் திருமுகத்துடன் வீற்றருள, வில்லேந்திய கோலத்தில் தம்பி லட்சுமணர் இடது பக்கம் நின்றருள, தாய் சீதா பிராட்டியாரோ வலது பக்கம் அமர்ந்து திருவருள் பொழிய, தேஜோமயமாய் திகழ்கின்றனர் தசரத குடும்பத்தினர். எதிரே ஈசான மூலையில் ஸ்ரீ ஆஞ்சனேயர் சுகப்பிரம்ம மகரிஷி தந்த ஓலைச்சுவடியை பத்மாசனத்தில் அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த வினோத கோலத்தை இங்கும், படைவீடு மற்றும் நெடுங்குணம் ஆகிய இம்மூன்று திருத்தலங்களில் மட்டுமே தரிசித்தாலும், ரகுநாதசமுத்திரத்தில் மட்டும் ஸ்ரீ ராமபிரானுக்கு வலதுபுறம் மாறியபடி சீதா தேவியும், இடதுபுறத்தில்
ஸ்ரீ லட்சுமணரும் திருக்காட்சித் தருவது சிறப்பம்சமாகும். உத்ஸவ மூர்த்தமாக ஸ்ரீதேவி - பூதேவி உடன் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் எழுந்தருள்கின்றார்.
ஸ்ரீ பத்மாசனித் தாயாருக்கும் இங்கு உத்ஸவத் திருமேனி உள்ளது.

ஆலய வலம் வருகையில் ஸ்ரீ பத்மாசனித் தாயாரின் தனிச் சன்னிதி தென்புறமாக உள்ளது. இங்கு கருவறையுள் இரண்டு தாயார்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கில் ஸ்ரீ நாகர் சிலையும் அருகே வேப்ப மரமும் உள்ளன.  வடதிசையில் தென்முகமாக ஸ்ரீ யாக்ஞவல்கிய மகரிஷி தனியே சன்னிதி கொண்டருள்கின்றார். இவர் ஆஞ்சனேயரின் குருவான ஸ்ரீ சூரியனது குருவாவார். பாஞ்சராத்ர ஆகம முறைப்படி இக்கோயிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராமநவமியன்று இங்கு விசேஷ அபிஷேக - அலங்கார - ஆராதனைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மூன்று வாரங்கள் இங்கு ஸ்ரீராமரை சேவித்து கோரிக்கைகளைச் சொல்லி, கருடனின் பாதங்களை வணங்கினால் குழந்தைப்பேறு, திருமண வரம் கிட்டும் என்கிறார் இவ்வாலய பட்டாச்சாரியார். ஸ்ரீராமருக்கு திருமஞ்சனம் செய்து, 11 சுமங்கலிகளுக்கு புடைவை மற்றும் மங்கலப் பொருட்களை தானம் தந்து, வேப்ப மரத்தில் தொட்டில் கட்டிச் செல்ல, ஆண் குழந்தையை பெறுவது கண்கூடு.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் - பெரணமல்லூர் சாலையில் சேத்பட்டிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோயில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com