Ravana Janmabhoomi
Ravana JanmabhoomiImg Credit: Mohit Pant Vlogs

ராம ஜென்மபூமி தெரியும்; இராவண ஜென்மபூமி தெரியுமா?

Published on

உத்திர பிரதேசத்தில் நொய்டா அருகில்  உள்ள பிஷ்ரஹ் கிராமத்தில் ராவணன் பிறந்தான். ராவணனின் தந்தை பெயரான விஸ்வரஸ் என்பது மருவி தான் பிஸ்ரஹ் என்று ஆகியுள்ளது. இன்றும் நொய்டா சென்றால் இராவணன் ஜனனபூமியில் அவருடைய கோவிலை தரிசிக்க மறக்க வேண்டாம். ராவணனின் இயற்பெயர் தஸ்முக் (பத்து முகங்கள்) . 'ராவநாதம்' என்ற இசைக்கலையில் வல்லவன் என்பதால் 'ராவணன்' என்று பெயர் பெற்றான்.

பிரம்மனின் பேரன், புலஸ்திய முனிவரின் மகனாகிய விஸ்வரசுதான் ராவணனின் தந்தை. ராட்சசன் சுமாலியின் மகள் கேகேசி ராவணனின் தாய். விஸ்வரசுவின் முதல் மனைவி இளவிதைக்கு பிறந்தவன் இலங்கையின் முதல் அரசனான குபேரன். தந்தை மரபின் படி ராவணன் ஒரு பிராமணன். 

ராவணனுக்கு விபிஷ்ணன், கும்பகர்ணன், கரன், தூஷன், அஹிராவணன் என்கிற சகோதரர்களும், சூர்பனகை என்ற ஒரே சகோதரியும் உண்டு. ராவணனுக்கு  மேகநாதன், அதிகாயன், அக்ஷய குமாரன் என்ற மகன்கள் உண்டு. மேகநாதன் மாபெரும் மாயஜாலக்காரன். இந்திரனை வென்று இந்திரஜித் என்று அழைக்கப்பட்டவன்.

ராவணன் தீவிர சிவ பக்தன். வீணை மீட்டுவதில் வல்லவன். ராவணன் தன்னை கொல்பவன் திவ்ய சக்தியற்ற சாதாரண மனிதனாக இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். தேவரை வெல்லும் சக்தி கொண்ட தன்னை மனிதனால் அழிக்க முடியாது என்று நினைத்தான்.

குபேரனை இலங்கையிலிருந்து விரட்டி அவனது நாட்டையும், புஷ்பக விமானத்தையும் அபகரித்தான் இராவணன். பின்னர் தேவலோகம் சென்று இந்திரனையும் வென்றான். ராஜஸ்தானில் உள்ள மண்டூரை ஆண்ட மாயாசுரன் மற்றும் அப்சரா ஹேமாவிற்கும் பிறந்த மண்டோதரியையும், தன்யா மாலினியையும் இராவணன் மணந்தான். இன்றும் ஜோத்பூர் அருகே உள்ள பிராமணர்கள், ராவணனை தங்கள் மருமகனாக கருதுகின்றனர்.

ராவணன் ஒரு மாபெரும் வீரனாக இருந்தாலும், வானர வேந்தன் வாலி, ராவணனை தன் வாலில் சுருட்டி பந்தாடினான். வாலியிடம் தோற்ற இராவணன் கார்த்திய வீரியார்ச்சுனனிடமும் தோற்றான். 

இதையும் படியுங்கள்:
ராமகிருஷ்ண விஜயம்!
Ravana Janmabhoomi

ராவணன் தங்கை சூர்பனகை ராமன் மீது காமத்தினால் பாய, லக்ஷ்மன் அவள் மூக்கையும் காதையும் அறுத்தான். இலங்கை சென்ற சூர்பனகை தனது அவமானத்திற்கு பழி தீர்க்க சீதையின் அழகை சொல்லி திருமணம் செய்யுமாறு இராவணனை வற்புறுத்துகிறாள். மண்டோதரி ராமன் பெரிய வீரன் என்றும், அவரது மனைவியை கடத்துவது அதர்மம், இதனால் இலங்கையும் தன் குடும்பமும் அழியும் என்றும் ராவணனை தடுக்கிறாள். ஆனாலும் சூர்பனகையின் வற்புறுத்தலில் மனைவியின் எச்சரிக்கையை மீறுகின்றான்.

ராவணனும் ஜோதிடத்தில் தேர்ந்தவன். ஆனால்,ஆணவத்தில் அனைத்து கிரகங்களின் பார்வையும் தன்மீது இருக்க வேண்டும் என்று பணித்தான். அதில் சனிபகவான் பார்வையும் பட, அழிவு ஆரம்பித்தது.

ராவணன் மராட்டியத்தில் உள்ள பஞ்சவடிக்கு முனிவர் வேடத்தில் சென்று யாசிப்பது போல் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். அப்போது ஜாடாயு கழுகு ராவணனுடன் சண்டையிட்டு சாகக் கிடந்தது. ஜாடாயு, ராமர் லட்சுமணன் வருகைக்காக காத்திருந்து விபரம் கூறிவிட்டு உயிர் துறந்தது.

ராவணன் ஒரு போதும் தன் அந்தணர் கடமையை விட்டுக் கொடுத்ததில்லை. ராமர் போரில் வெற்றி பெற யாகம் செய்து கொடுத்தவன். ராவணன் இறக்கும் தருவாயில் ராமர், லக்ஷ்மணனை அழைத்து, "ராவணனிடம் அறிய நிறைய உள்ளது. நீ போய் அவரை வணங்கி உபதேசம் கேட்டு வா" என்று அனுப்பினார். ராவணன் 3 உபதேசங்கள் கூறி லட்சுமணனை வாழ்த்தினார்.

இதையும் படியுங்கள்:
பாவங்களை நீக்கி முக்தி தரும் புனித 'கயா'!
Ravana Janmabhoomi

தசரா பண்டிகையில் இந்தியா முழுக்க ராவணனை எரித்தாலும், அவன் பிறந்த பிஷ்ரஹ் நகரில் எரிப்பதில்லை அன்று ராவணனுக்கு திதி கொடுக்கின்றனர். மத்தியப் பிரதேசத்திலுள்ள விதிஷா மாவட்டத்தில், ராவன் கிராமத்தில் இராவணனின் வம்சாவளியினரான கன்யாகுப்ஜ பிராமணர்களும், ஜோத்பூர் தேஜ் பிராமணர்களும் ராமலீலா கொண்டாடுவதில்லை. உபி, மபி, ராஜஸ்தான் மாநிலங்களில் ராவணனுக்கு கோவில்கள் நிறைய உண்டு. இராமர் மட்டுமல்ல இராவணன் பிறந்ததும் உபியில் தான்.

logo
Kalki Online
kalkionline.com