நாளை 16.02.2024 வெள்ளிக்கிழமை அன்று இருக்கிற சப்தமி திதியானது, ரதசப்தமி எனக் கொண்டாடப் படுகிறது. தை மாத அமாவாசை நாளில் இருந்து ஏழாவது நாளில் வரும் சப்தமி திதிதான் ரதசப்தமி ஆகும். சூரியன் தெற்கு நோக்கிய தனது தட்சிணாயன பயணத்தை முடித்துக்கொண்டு, வடக்கு நோக்கிய உத்தராயண பயணத்தைத் தொடங்கும் நாளே, ரதசப்தமி திருநாள் ஆகும். ரதசப்தமி குறித்த மிக சுவாரஸ்யமான செய்திகளை நமக்காக எடுத்துக் கூறுகிறார் முனைவர் ப்ரம்மஸ்ரீ மண்ணச்சநல்லூர் செ. பாலசந்தர்.
தை மாத அமாவாசையினை அடுத்து வருகின்ற ரதசப்தமி விரதமானது மிகவும் விஷேசம். அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டு என வைத்து நீராடுவது வழக்கம். காலை ஆறு மணியில் இருந்து ஏழரை மணிக்குள் நீராட வேண்டும். அதிலும் பெண்கள் தலையில் வைக்கும் இலையில் மஞ்சப் பொடியும் அட்சதையும் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். இது ஆரோக்கியத்தையும் செல்வ வளத்தையும் நல்கும். ரதசப்தமி நாளில் செய்யும் தர்மங்களுக்கு மிகுதியான புண்ணியங்கள் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில்கள் பல்கிப் பெருகும். பெண்கள் உயர்ந்த நிலை அடைவார்கள். கணவனை இழந்த பெண்கள் ரதசப்தமி விரதம் கடைபிடித்தால் அவர்களுக்கு அடுத்து வருகின்ற பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்றுரைக்கின்றன புராணங்கள்.
எருக்கம் இலைகளை உடலின் மேல் வைத்து நீராடுவது ஏன்? பீஷ்மருக்கு அவர் விரும்பிய நேரத்தில் விரும்பியபடி மரணம் நேரும் என்கிற வரம் அவருக்குத் தரப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் விரும்பியபடியான மரணம் ஏற்படவில்லை. முள் அம்புப் படுக்கையில் மனத் துயருறும் பீஷ்மர் உடனே வேத வியாசரிடம் முறையிடுகிறார். “துரியோதனன் சபையில் பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, நீ அந்த சபையில் இருந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்தாய். கண்ணெதிரே ஒரு அநியாயம் நிகழும்போது அதனைத் தடுக்கின்ற பொறுப்பு உனக்கு இருந்தபோதும், நீ அதனைத் தடுக்காதது பெரும் குற்றம்.” என்கிறார் வேத வியாசர். தான் கையோடு கொண்டு வந்திருக்கும் எருக்கம் இலைகளை பீஷ்மரிடம் காட்டுகிறார்.
“இந்த எருக்கம் இலைகள் சூரியனுக்கு உகந்தவை. சூரியனின் முழுச் சக்தியும் அவைகளில் அடங்கியுள்ளது. இந்த எருக்கம் இலைகளினால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்,” எனச் சொல்லிவிட்டு, பீஷ்மரின் உடலெங்குமாக எருக்கம் இலைகளைத் தூவி விடுகிறார் வியாசர். அதன் பின்னரே பீஷ்மர் கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி கொள்கிறார். தியானத்தில் ஆழ்ந்தபடி பீஷ்மர் முக்தி நிலையினை எய்தி விடுகிறார்.
அங்கிருக்கும் தருமரோ, “பீஷ்மர் பிரம்மச்சாரி. இப்போது உயிர் துறந்து விட்டார். அவருக்கான பித்ரு கடன்கள் யார் செய்வது?” என்று வருத்தமுடன் கேட்கிறார். “தருமரே நீர் வருந்த வேண்டாம். ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பித்ருக் கடன் என்பதே அவசியம் இல்லை. அவர்கள் மேம்பட்ட நிலைக்குச் சென்று விடுகிறார்கள். அதனால் வரும் காலங்களில் இனி இந்த பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கம் இலைகளை வைத்துக்கொண்டு நீராடும் மக்கள் தங்களின் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வார்கள். அத்துடன் அவர்கள் எல்லோருக்கும் பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் கிட்டும்.” என்று தெளிவாகக் கூறுகிறார் வேத வியாசர். அத்தனைச் சிறப்பு வாய்ந்தது இந்த ரதசப்தமி.