ருத்ராட்சம் - எந்த முகம் எந்த கடவுளுக்கு உரியது?

Rudraksha
Rudraksha
Published on

சிவ பக்தர்கள் ருத்ராட்சத்தை தங்களின் உயிர் மூச்சாக கருதுகின்றனர். ருத்ராட்சம் ஒருவன் அணிந்து கொள்வதால் மனதில் குழப்பம் விலகி தெளிவு பெறும். மனம் மட்டுமல்லாமல் உடல் நலமும் ஏற்படும். இதனை கழுத்தில் அணியும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும், துன்பங்கள் நீங்கி இன்பமும் மெய்யான ஞானமும் சித்திக்கும்.

ருத்ராட்சத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக ஐதீகம். ஆனால், இதனை பருவப் பெண்கள் அணிதல் நேர் மாறான விளைவுகளைத் தரும். எனவே வயது வந்த பெண்கள் அணிதல் கூடாது.

ருத்ராட்சத்துக்கு, மனதை அடக்கி, மனக் கட்டுப்பாட்டை வளர்க்கும் அபூர்வ ஆற்றல் இருக்கிறது. இதை அணிபவர்கள், இதனை உணர்வுப்பூர்வமாக அறியலாம். ருத்ராட்சத்துக்கு நினைவு ஆற்றலை அதிகரிக்க செய்யும் அற்புத சக்தியும், சுய ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் திறனும் உண்டு. ருத்ராட்சத்துக்கு இருக்கும் இந்த சக்தியை சிலர் உடனடியாக உணரலாம். சிலர் படிப்படியாக உணர்கிறார்கள்.

ருத்ராட்சம் உருவானது எப்படி என்பது மிகவும் ஆச்சரியப்படுத்தும் ஒரு கதை:

பூராண காலத்தில் தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன் மாலி என்ற மூன்று அரக்கர்கள் இருந்தனர்கள். இவர்கள் அரக்கர்களாக இருந்தாலும், அதீத சிவ பக்தியைக் கொண்டவர்கள். அசுர குரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனையை ஏற்று , அரக்க சாம்ராஜ்யத்தை மூவுலகிலும் ஏற்படுத்த சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். தங்களது, இரத்தத்தையே நெய்யாக்கி, தங்களது உடல் அங்கங்களையே விறகாக்கி இவர்கள் செய்த கடும் தவம் சிவ பெருமானை மிகவும் மகிழ்வித்தது. வேண்டிய வரம் தர சிவன் அவர்கள் முன் தோன்ற, அவர்கள் வேண்டிய படி அனைத்து வரங்களையும் தந்ததுடன் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று கோட்டைகளை இந்த மூன்று அரக்கர்களுக்கும் வழங்கினார்.

பறந்து செல்லும் சக்தியும் அபூர்வமான அஸ்திரங்களையும் தன்னகத்தே கொண்டது அக்கோட்டைகள். அதன் துணையால் பறந்து சென்ற மூன்று அரக்கர்களும் மூவுலகங்களையும் கைப்பற்றினார்கள். தேவர்களின் திவ்ய அஸ்திரங்கள், அவர்களுக்கு சிவனார் அளித்த மூன்று கோட்டைகளுக்கு முன் ஒன்றும் இல்லாமல் ஆனது.

தேவர்கள் சிறைபட்டு அந்த அரக்கர்களால் சித்தரவதை செய்யப்பட்டனர் . சித்தரவதை பட்ட தேவர்கள் சிவனாரை வேண்டிக் கடும் தவம் இருக்க, சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான், அந்த மூன்று அரக்க (சிவ) பக்தர்களையும் கொல்ல ஒப்புக் கொண்டார்.

யுத்தத்துக்கு புறப்பட்டவர் கணபதியை வணங்காமல் சென்றதால், கணபதி சிவனாரின் தேர் அச்சை முறித்து விட்டார். சிவனார், இந்த அரக்கர்களை அழிக்க தன் புன்முறுவல் ஒன்றே போதும் என்று சிரிக்க, அந்த அரக்கர்களின் மூன்று கோட்டைகளும் பற்றி எரித்தன. அத்துடன் அந்த மூன்று அரக்கர்களும் சாம்பல் ஆனார்கள்.

அரக்கர்களாக இருந்தாலும் , அந்த மூவரும் உண்மையான சிவ பக்தர்கள். இதனால் சிவனின் மனம் இளகி அவருடைய கண்களில் இருந்து நீர் முத்து முத்தாக உதிர்ந்தது. அவ்விதம் உதிர்ந்த கண்ணீரே  ருத்ராட்சம் எனப் பெயர் பெற்றது . சத்தியத்தை காப்பற்றிய செய்கையில் வெளிப்பட்டது என்பதால் இதற்கு உலகைக் காப்பாற்றும் சக்தியும் உண்டு என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வேறு எந்த ஒரு விதைக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு ருத்ராட்ச விதைக்கு உண்டு. துளசி, ஸ்படிக மாலைகள் நாம் துளையிட்ட பிறகே அதை கோர்த்து நாம் அணிந்து கொள்ள முடியும். ஆனால் ருத்ராட்சத்தை மனிதர்கள் எளிதில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இயற்கையாகவே இறைவனின் அருளால் ருத்ராட்சத்தில் நடுவே துளையுடன் இருக்கிறது.

மொத்தம் 38 வகை ருத்ராட்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஈசனின் வலது கண்ணிலிருந்து 12 வகை, இடது கண்ணிலிருந்து 16 வகை, நெற்றிக் கண்ணிலிருந்து 10 ருத்ராட்சங்கள் தோன்றியுள்ளன.

ஒன்று மற்றும் ஐந்து முகம் உள்ள ருத்ராட்சங்கள் சிவனுக்கு உரியது.

இரண்டு முகம் உள்ள ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரருக்கு உரியது.

மூன்று முகமுள்ளது அக்னிக்கும், நான்கு முகமுள்ளது பிரம்மாவுக்கும், ஆறு முகமுள்ளது முருகனுக்கும், ஏழு முகம் உள்ளது லட்சுமிக்கும் உரியது.

எட்டு முக ருத்ராட்சங்கள் விநாயகருக்கும், ஒன்பது முக ருத்ராட்சங்கள் துர்க்கைக்கும், பத்து முக ருத்ராட்சங்கள் விஷ்ணுவிற்கும், பதினொரு முக ருத்ராட்சங்கள் அனுமனுக்கும், 12 முக ருத்ராட்சங்கள் சூரியனுக்கும் உரியது.

13 முக ருத்ராட்சங்கள் இந்திரனுக்கு ம், 14 முக ருத்ராட்சங்கள் எந்த ஒரு தேவனுக்கும், 15 முக ருத்ராட்சங்கள் பசுபதிக்கும், 16 முதல் 38 முகம் உள்ள ருத்ராட்சங்கள் சதாசிவனுக்கும் உரியதாக கருதப்படுகிறது. 

ருத்ராட்சம் அணிபவர்கள் குடுமி வைத்துள்ளவராக இருந்தால் குடுமியில் ஒரு மணி அறிய வேண்டும். தலையை சுற்றி அணிபவராக இருந்தால் 36 இருக்க வேண்டும். கை புறத்தில் அணிபவராக இருந்தால் 16 அணிய வேண்டும். கழுத்தில் அணிவதாக இருந்தால் 32 மணிகள் இருக்க வேண்டும். கையில் ஜெபமாலை வைத்திருந்தால் 27 அல்லது 54 அல்லது 108 மணிகள் கொண்டதை வைத்திருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com