மகாபாரதத்தில், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த போர் பதினெட்டு நாட்கள் நீடித்தன. அதர்மத்தை வென்று தர்மத்தை நிலைநாட்டி தருமர் அரியணையேற, அந்தப் பரந்தாமனும் உதவினார். இது இதிகாசம் காட்டும் பாடம்.
பழம்பெருமை கொண்ட நம் அருந்தமிழிலும் பதினெட்டுக்கு முக்கிய இடம் உண்டு. பதினெண் மேற்கணக்கு நூல்களென்றும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களென்றும் வகுத்து வைத்தார்கள், வகைதெரிந்த நம் முன்னோர்! முன்னதில் எட்டுத் தொகை பத்துப் பாட்டு நூல்களும், பின்னதில் நீதி நூல்கள் பதினெட்டும் இடம் பெறச் செய்தார்கள். வையகத்தார் வாழ்வாங்கு வாழ வழி சொல்பவை இவை அனைத்தும்.
ஓர் ஆண்டினைக் கோடை, குளிர் காலம் என்று தட்ப வெப்பத்தை வைத்துப் பிரித்து வைத்ததைப்போல, கார்த்திகை மாதத்தைச் ‘சபரிமலை காலம்’ என்றே நாம் அழைக்கும் அளவுக்கு, சபரிமலை ஐயப்பன் உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளார்.
பலரும் சபரிமலையிலுள்ள பதினெட்டுப் படிகளில் தங்கள் பாதங்களைப் பதிப்பதைப் பாக்கியமாகக் கருதுகிறார்கள். எனவேதான் ஆண்டிற்காண்டு பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது, பெண்டிரும் ஐயனைத் தரிசித்து ஆனந்தம் அடைகிறார்கள்.
பதினெட்டுப் படிகளின் தாத்பர்யத்தை ஆராய்ந்தால் மெய் சிலிர்க்கிறது. ஆன்மிகம், ஆண்டவனையும், கிரகங்களையுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. கடவுள் கரண்ட் போன்றவர். கரண்டைக் கண்ணால் கண்டவர்கள் யாருமில்லை. ஆனால் அந்தக் கரண்ட் இல்லாது வாழ முடியாத சூழலுக்கு வந்து விட்டது நவீன உலகம். கஷ்டப்படுபவர்களைக் காப்பாற்ற கடவுள் மனித உருவில்தான் வருகிறார் என்பது பெரியோர்களின் வாக்கு. ஒவ்வொருவரின் அகமே ஆண்டவனின் ஆலயம் என்கிறார்கள் ஆழ்ந்தறிந்தோர்.
நம்பிக்கைதான் வாழ்வின் அடிப்படை! அந்த நம்பிக்கையை அசைக்க முடியாத உறுதியானதாக ஆண்டவன் நமக்கு வழங்குகிறார். கிரகங்களின் இருப்பிடப் பலனைக் கொண்டே மனித வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒன்பது கோளும் உதவி செய்தால் உலகம் உயர்ச்சி அடையுமாம். எனவே பூமியின் செழிப்புக்குக் காரணமாக அமைவது கிரகங்களின் செயல்பாடு என்பதும் புலனாகிறது.
ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல், மனித வாழ்க்கை என்ற நாணயத்தின் ஒரு பக்கம் கடவுளும், மறுபக்கம் கோள்களும் இருந்து, பிறவிப் பெருங்கடலை எளிதில் நீந்திக் கடக்க வழியேற்படுத்துகிறார்கள். சபரிமலையில் குடியிருக்கும் ஐயப்பனை பார்க்க பக்தர்கள் ஏறிச் செல்லும் பதினெட்டுப் படிகளில் பாதி ஒன்பதைக் கடவுளர்களுக்கும், மீதி ஒன்பதைக் கிரகங்களுக்கும் ஒதுக்கி, ஆன்மிகத்தின் ஆணி வேரை நிலைநாட்டி வைத்திருக்கும் பாங்கினை விளக்க, வார்த்தைகள் போதா!ஒற்றைப்படை எண் கொண்ட படிகளில் நவக்கிரகங்களும் இரட்டைப்படை வரிசை கொண்ட படிகளில் கடவுளர்களும் வீற்று அருள்பாலிப்பதாக ஐதீகம்.
1.சூரியன் 2.சிவன்
3.சந்திரன் 4.பராசக்தி
5.செவ்வாய் 6.முருகன்
7.புதன் 8.விஷ்ணு
9.குரு 10.பிரம்மா
11.சுக்கிரன் 12.லட்சுமி
13.சனி 14.மனு
15.ராகு 16.சரஸ்வதி
17.கேது 18.விநாயகர்
சபரிமலையின் மதிப்பு இப்போது தெளிவாகிறதா? ஒன்பது கோள்களையும், ஒன்பது கடவுளர்களையும் கண்டு வணங்கி, உள்ளே இருக்கும் உண்மைக் கடவுளான ஐயப்பனையும் ஒரே இடத்தில் தொழும் மகத்துவம் நிறைந்துள்ளதால் தான் சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
“பொய்யின்றி மெய்யோடு
நெய்கொண்டு போனால்…
ஐயனைநாம் காணலாம்!
அவனருளினில்நாம் திளைக்கலாம்!”